உள்ளடக்கத்துக்குச் செல்

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டச்சு கிழக்கிந்திய கம்பெனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியப் பெருங்கடல் பகுதியில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள செயிண்ட் எலனாவும் காட்டப்பட்டுள்ளது

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது.[1] நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, முறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. [2]

அமைப்பு

[தொகு]

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ஹீரென் XVII (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.

இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.

இந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்

இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

வணிகசபை மூலதனம் (கில்டர்கள்)
அம்ஸ்டர்டாம் 3,679,915
சீலந்து 1,300,405
என்குசென் 540,000
டெல்வ்ட் 469,400
ஊர்ன் 266,868
ரொட்டர்டாம் 173,000
மொத்தம்: 6,424,588
கம்பனியின் அம்ஸ்டர்டாம் சபையின் சின்னம்.

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Dutch East India Company (VOC)". Canon van Nederland. Archived from the original on 1 December 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.