சூப்பர் போல்
சூப்பர் போல் (Super Bowl) என்பது என்.எஃப்.எல். அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கத்தின் ஆண்டுதோறும் நடைபெறுகிற இறுதிப்போட்டியாகும். இதில் என்.எஃப்.எல். சங்கத்தின் இரு கூட்டங்களையும் வென்ற அணிகள் மோதுகின்றன. இது முந்தைய ஆண்டு துவங்கிய ஒரு பருவத்தின் இறுதி ஆட்டமாக அமையும். பொதுவாக ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் அல்லது பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தின் ஞாயிறுக்கிழமை நடைபெறும். முதல் சூப்பர் போல் ஜனவரி 15, 1967 அன்று விளையாடப்பட்டது. சூப்பர் போலின் ஒவ்வொரு ஆட்டமும் ரோம எண்ணுருக்களால் குறிக்கப்படும். உதாரணமாக 1967ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆட்டம், சூப்பர் போல் I எனவும், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 47வது ஆட்டம் சூப்பர் போல் XLVII என்றும் அழைக்கப்படும்.
இப்போட்டியும் தொடர்பான கொண்டாட்டங்களும் சேர்ந்து சூப்பர் போல் ஞாயிறு (Super Bowl Sunday) என்று அழைக்கப்பட்டன. 111 மில்லியன் நேயர்கள் கண்டுகளித்த 2011ஆம் சூப்பர் போல் ஆட்டம், அதிக அமெரிக்கர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இதற்கு முன் இந்த சாதனை முந்தைய ஆண்டின் சூப்பர் போல் ஆட்டம் பெற்றிருந்தது. மேலும் சூப்பர் போல் ஆட்டமே உலகில் அனேக தொலைக்காட்சி நேயர்களால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.
இதன் மிக அதிகமான தொலைக்காட்சி நேயர்களின் காரணமாக இப்போட்டியின் போது ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்நிகழ்வில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் இவற்றிற்கென சிறப்பு விளம்பரங்களை மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பர். பல நிறுவனங்களின் சிறந்த விளம்பரங்கள் இந்நிகழ்ச்சியின் போதே முதலில் ஒளிபரப்பப்படும். இத்தகைய சூப்பர் போல் விளம்பரங்களை காண்பதும் அவற்றை விமர்சிப்பதும் சூப்பர் போலின் முக்கிய அங்கமாகிவிட்டது.[1] மேலும் போட்டியின் அரைப்பகுதி இடைவேளையில் பிரபலமான கலைஞர்களின் கலை நிகழ்ச்சியின் நடைபெறும்.
உருவாக்கம்
[தொகு]1920ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய காற்பந்து லீக்கிற்கு பெரும் சவாலாக உருவானது 1960ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அமெரிக்க காற்பந்து லீக். 1966ஆம் ஆண்டின் விளையட்டுப் பருவத்திற்கு முன்னர் இவ்விரு கூட்டமைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடன்பாட்டின் படி இந்த இணைப்பு 1970ஆம் ஆண்டின் பருவத்தில் அமலுக்கு வரும். அதற்கு இடைப்பட்ட வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவத்தின் இறுதியில் இரு கூட்டமைப்பின் வாகையாளர்களும் மோதும் உலக வாகைக்கான போட்டி நடைபெறும் என திட்டமிடப்பட்டது. இதுவே சூப்பர் போல் எனும் அதிகாரப்பூரவ பெயரைப்பெற்றது.
இணைப்பிற்கு பிறகு என்.எஃப்.எல் தன்னை இரு பிரிவுகளாக நேர்ப்படுத்திக்கொண்டது. பழைய அமெரிக்க காற்பந்து லீக் அணிகளுடன் மூன்று தேசிய காற்பந்து லீக் அணிகளை இணைத்து அமெரிக்க காற்பந்து மாநாடு எனவும், மீதம் உள்ள தேசிய காற்பந்து லீக் அணிகளை கொண்ட தேசிய காற்பந்து மாநாடு எனவும் பிரிக்கப்பட்டன. இவ்விரு பிரிவுகளிலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றின் வாகையாளர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியாக சூப்பர் போல் அமையும்.
முதல் இரு சூப்பர் போல் ஆட்டங்களை வென்ற கிரீன் பே பேக்கர்ஸ் அணியின் பயிற்றுனர் வின்ஸ் லொம்பார்டி ஆவார். இவர் பயிற்சியில் அந்த அணி சூப்பர் போலிற்கு முந்தைய ஐந்து தேசிய காற்பந்து லீக் கோப்பைகளையும் வென்றிருந்தது. 1970ஆம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு சூப்பர் போலின் வாகையாளர் கோப்பை அவருடைய பெயரிலேயே வின்ஸ் லொம்பார்டி கோப்பை என அழைக்கப்படுகிறது.
போட்டியின் வரலாறு
[தொகு]இதுவரை ஆறு வெற்றிகளை பெற்றுள்ள பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணியே இப்போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாகும். டல்லாஸ் கவ்பாய்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ 49அர்ஸ் ஆகிய அணிகள் ஐந்து முறையும் கிரீன் பே பேக்கர்ஸ் மற்றும் நியூயார்க் ஜெயின்ட்ஸ் அணிகள் நான்கு முறையும் வாகை சூடியுள்ளன. இவற்றை தவிர பதிமூன்று வெவ்வேறு என்.எஃப்.எல் அணிகள் கோப்பையை ஒருமுறையேனும் வென்றுள்ளன. இதுவரை பத்து அணிகள் சூப்பர் போலிற்கு தகுதி பெற்றும் ஒருமுறை கூட வென்றதில்லை. நான்கு என்.எஃப்.எல் அணிகள் இதுவரை சூப்பர் போலிற்கு தகுதி பெற்றதே இல்லை.
அணி | கிண்ணங்கள் | ||||
---|---|---|---|---|---|
பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் | 6 | ||||
டல்லாஸ் கவ்பாய்ஸ் | 5 | ||||
சான் பிரான்சிஸ்கோ 49அர்ஸ் | 5 | ||||
கிரீன் பே பேக்கர்ஸ் | 4* | ||||
நியூயார்க் ஜெயின்ட்ஸ் | 4 | ||||
லாஸ் ஏஞ்சல்ஸ் / ஓக்லாந்து ரைடர்ஸ் | 3 | ||||
நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் | 3 | ||||
வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் | 3 | ||||
பால்டிமோர் ரேவன்ஸ் | 2 | ||||
பால்டிமோர் / இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் | 2 | ||||
டென்வர் பிரோன்கோஸ் | 2 | ||||
மியாமி டால்பின்ஸ் | 2 | ||||
சிகாகோ பேர்ஸ் | 1 | ||||
கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் | 1* | ||||
லாஸ் ஏஞ்சல்ஸ் / செயின்ட் லூயிஸ் ரேம்ஸ் | 1 | ||||
நியூ ஆர்லியன்ஸ் செயின்ட்ஸ் | 1 | ||||
நியூயார்க் ஜெட்ஸ் | 1* | ||||
டம்பா பே புக்கானீர்ஸ் | 1 | ||||
* தேசிய காற்பந்து லீக் மற்றும் அமெரிக்க காற்பந்து லீக் ஒருங்கிணைப்புக்கு முன் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டிகளையும் சேர்த்து. |
தொலைக்காட்சியில் சூப்பர் போல்
[தொகு]உலகில் அதிக நேயர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் வருடாந்திர விளையாட்டு நிகழ்வுகளில் சூப்பர் போல் இரண்டாமிடத்தில் உள்ளது. யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மட்டுமே இதனை விட அதிக நேயர்களைக் கொண்டுள்ளது.[2] சராசரியாக போட்டியின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அமெரிக்காவில் 80 முதல் 90 மில்லியன் மக்கள் போட்டியை தொலைக்காட்சியில் காண்பர் என நீல்சன் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் போட்டிக்கு முன் என்.எஃப்.எல் வெளியிடும் செய்திக் குறிப்பில், அந்த ஆண்டின் நிகழ்வை 200 நாடுகளில் உள்ள 1 பில்லியன் மக்கள் பார்க்கக்கூடும் என தெரிவிக்கப்படும்.[3] இவ்வெண்ணிக்கைகள் எவ்வளவு மக்களால் இந்நிகழ்வை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க வாய்ப்புள்ளது என்பதே அன்றி எவ்வளவு மக்கள் உண்மையாக பார்த்தனர் என்பதல்ல. எனினும் பல்வேறு ஊடகங்கள் இத்தகைய செய்தியை தவறாகவே புரிந்துகொள்கின்றனர்.[4] 2012ஆம் ஆண்டின் சூப்பர் போல் XLVI 111 மில்லியன் அமெரிக்க மக்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்தது.[5] 1982ஆம் ஆண்டின் சூப்பர் போல் XVI அப்போது தொலைக்காட்சி வைத்திருந்த 49 சதவிகித வீடுகளில் பார்க்கப்பட்டது.[6]
அமெரிக்காவில் அதிக நேயர்களால் பார்க்கப்பட்ட 10 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் நான்கு சூப்பர் போல் போட்டிகள் உள்ளன. 2012ஆம் ஆண்டின் சூப்பர் போலின் போது முப்பது நொடிகளுக்கான விளம்பர இடம் 3.5 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது[7]. தற்போது இந்நிகழ்வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சி.பி.எஸ்., பாக்ஸ், என்.பி.சி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் 2014ஆம் ஆண்டின் சூப்பர் போலை பாக்ஸ் தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Commercials as big as game". Archived from the original on 2013-01-23. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மதிப்பீடு". பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "என்.எஃப்.எல் செய்திக் குறிப்பு". பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "A billion people can be wrong". பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "Super Bowl XLVI Viewership record". Archived from the original on 2012-08-04. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "Television's top rated Programme". Nielsen. Archived from the original on 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Super Bowl 2012 commercials cost average $3.5 million". பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.