உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கம் மருவிய காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ.ஊ. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது. நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும் பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை "சங்கம் மருவிய காலம்" அல்லது "இருண்ட காலம்" எனக் குறிப்பிடுவர்.

இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை" என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர்.

இந்த இருண்ட காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கம்_மருவிய_காலம்&oldid=3871754" இலிருந்து மீள்விக்கப்பட்டது