உள்ளடக்கத்துக்குச் செல்

கொலுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலுசும் மெட்டியும்
மெட்டியுடன் இணைக்கப்பட்ட கொலுசு

கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால் காலில் அணியப்படும் அணிகலன்கள். வளர்ந்த நாகரிகம் மற்றும் பண்பாடுகளில் வாழ்ந்த பெண்கள் தங்கள் கவர்ச்சியைக் கூட்டவும், செல்வச் செழிப்பினைக் காட்டவும் கொலுசு அணிந்தனர்.[1][2][3]

வரலாறு

[தொகு]
ஜோடி சலங்கைகள்

சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசப்படோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கொலுசை பயன்படுத்தியதாக அறிகிறோம். பழங்காலத்தில் எகிப்தியர்கள் கால் பாத அணி அணிந்துள்ளதாகத் தெரிகிறது. வசதி படைத்தவர்கள் இந்தப் பாத அணிகலனில் ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். பல காலம் முன்பு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெண்கள் தங்கள் இரண்டு கால்களிலும் பாத அணிகலன்களை அணிந்து அவற்றை ஒரு சங்கிலியால் இணைத்து விடுவது உண்டாம். இது குறுகிய அடி வைத்து நடக்க மேற்கொள்ளப்படும் பயிற்சியாம். இந்திய நடன மாதர்கள் தங்கள் அங்க அசைவுகளுக்கேற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்தார்கள். இது போல மத்திய கிழக்கு நாடுகளில் வயிற்றசைவு நடனமாடும் மங்கைகள் கூட நுண்ணிய வேலைப்பாடமைந்த கொலுசுகளை அணிந்தார்கள். அமெரிக்காவில் கொலுசு அணியும் வழக்கம் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.

இந்திய மரபுகள்

[தொகு]

கொலுசுக்கு இந்தியாவில் ஒரு பெரிய வரலாற்றுப் பாரம்பரியமும் பின்னணியும் உண்டு. இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லையாம்.

பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகிறார்கள். பழங்காலத்தில் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என பல வடிவமைப்புகளில் கொலுசு அணிந்துள்ளார்கள்.

குழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது இந்தியாவில் நடைமுறையிலுள்ள பழக்கம். கொலுசு ஒலி குழந்தையின் அசைவுகளை உறங்கும்போதும், விழித்திருக்கும் போதும் தாய்க்கு அறிவிக்கும். கொலுசுடன் தளர் நடைபோட்டு நடக்கும் குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும்.

கொலுசுகளை இள வயது பெண்கள் அணிய மாட்டார்கள். திருமணமான பெண்கள் மட்டுமே அணிவார்கள். எனவே பெண்கள் தங்களுக்கு திருமணமான செய்தியை கால் கொலுசுச் சத்தங்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். திருமணச்சடங்குகளில் மணப்பெண் கொலுசு அணிவது ஒரு முக்கிய மரபு. உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள். இதை திருமண சடங்குகளின்போது பெண்களின் கால்களில் அணிவிப்பார்கள். காலில் கொலுசு அணிந்தால் அந்தப் பெண்ணுக்கு மணமாகிவிட்டது என்று பொருள்.

நவநாகரிகக் கொலுசுகள்

[தொகு]

சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் ஆகிய எல்லாம் கூடிய கொலுசுகள் பழைய பாணியாகிவிட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன. சில நகை தயாரிப்பாளர்கள் கொலுசையும் மெட்டியையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் மட்டும் அணியப்பட்டு வந்தது. தற்போது நவீன உடைகளுக்கேற்ப நவீனபாணி கொலுசுகளை அணிகிறார்கள். சில பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிகிறார்கள்.

நாகரிக மங்கையர் தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பல வகை பொருட்களைக் கொண்டு நவீன பாணியில் தயாரித்த கொலுசுகளை அணிகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலி கொண்டு இணைக்கப்பட்டு இருக்கும். இந்த சங்கிலி மெல்லியதாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும். கொலுசு முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன.

வெள்ளியிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஒட்சியேற்றிய (ஆக்சிடைஸ்ட்) வெள்ளி எப்போதும் நிறம் மங்கிக் காணப்படும். கொலுசுகள் இவ்வெள்ளியிலும் செய்யப்படுகின்றன. செயற்கை கற்கள் - அதாவது போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமி பிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

கொலுசு உற்பத்தி

[தொகு]

கொலுசு, இந்தியாவில் தமிழகத்தில் சேலம் மாநகரில் அதிகம் உற்பத்தியாகிறது. கொலுசு உற்பத்தியில் மறைமுகமாகவும், நேரடியாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலகங்கள் வெள்ளிப்பட்டறைகள் எனப்படும். உருக்கு பட்டறை, கம்பி, பூ அடிக்கும் பட்டறை, ஜால்ரா பட்டறை, மெருகு பட்டறை என 13 வகையான உற்பத்திப் பணிகள் இப்பட்டறைகளில் நடைபெறுகின்றன. சேலத்தில் இரும்பாலை, சிவதாபுரம், சினிமாநகர், சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலத்தாம்பட்டி, திருவாக்கவுண்டனூர், மணியனூர், மெய்யனூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளி பட்டறைகள் இயங்கிவருகின்றன. சேலம் கால் கொலுசுகள் ஆந்திரா, மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், குசராத், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொலுசு தயாரிப்பு குறித்த படங்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]

History of Anklets

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Merriam-Webster Dictionary".
  2. Wilkinson, Alix (1971). Ancient Egyptian Jewellery. Great Britain: Taylor & Francis. p. 28.
  3. Harry Thurston Peck, Harpers Dictionary of Classical Antiquities (1898), Periscelis
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலுசு&oldid=3893692" இலிருந்து மீள்விக்கப்பட்டது