கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ்
புனித கேண்டலிஸ் பெலிக்ஸ் | |
---|---|
புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் ஓவியர் - பீட்டர் பவுல் ரூபென்ஸ் | |
பிறப்பு | 18 மே 1515 கேண்டலிஸ், இத்தாலி |
இறப்பு | 18 மே 1587 உரோமை |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 1 அக்டோபர் 1625 by எட்டாம் அர்பன் |
புனிதர் பட்டம் | 1709 by பதினொன்றாம் கிளமென்ட் |
திருவிழா | மே 18 |
சித்தரிக்கப்படும் வகை | கப்புச்சின் திருவுடையில் குழந்தை இயேசுவை கைகளில் தாங்கி |
பாதுகாவல் | ஸ்பெல்லோ நகர், இத்தாலி |
புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் இத்தாலி நாட்டில் கேண்டலிஸ் என்ற நகரில் 1515 இல் ஒரு கூலி உழவுக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையின் காரணமாக லியோனிசா நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் இடையராகவும் பணியாளாகவும் வேலைபார்த்தார். அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டு பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தனது 28 வயதில் கப்புச்சின் துறவியானார். எழுதப் படிக்க தெரியாத பெலிக்ஸ் செபங்களை மனப்பாடம் செய்து கொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். கப்புச்சின் சபை பணிகளில் ஒன்றான யாசகப் பணியை தன் துறவற தொடக்க நாள் முதல் தன் வாழ்வின் இறுதி நாள் வரை உரோமை நகரில் செய்து வந்தார். இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஒவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பறிவு இல்லாத பெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார், பலவிதமான மக்களின் சிக்கல்களுக்கு நுண்ணறிவான முடிவை அள்ளித்தந்து உரோமை தெருக்களின் அறிஞர் எனப் போற்றப்பட்டார். புனித சார்லஸ் போரோமியோ, புனித பிலிப் நேரி மற்றும் சில கர்தினால்கள் பல முக்கிய முடிவுகளுக்கு இவரின் ஆலோசனையை நாடினர். புனித பதுவை அந்தோணியாரைப் போல இவரும் குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தும் பேற்றினை பெற்றார் என்பர். இவர் 1587 இல் இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். பிரான்சிஸ்கன் சபையில் ஒரு கிளையாக 1528 இல் அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712 இல் பெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.
சான்றுகள்
[தொகு]https://en.wikipedia.org/wiki/Felix_of_Cantalice www.catholic.org/saints/saint.php?saint_id=638 www.newadvent.org › Catholic Encyclopedia › F feliciansistersna.org › Who We Are › Historic Community ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயம்புத்தூர், 2011, 3-13பக்