உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்து என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து 1959 சனவரியில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.[1] இதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா ஆவார். இது இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி, இலக்கு வழுவாது நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது.

பெயர்

[தொகு]

ஆங்கிலத்தில் 'ரைட்டிங்', 'நியூ ரைட்டிங்' என்றெல்லாம் பத்திரிகைகளுக்குப் பெயர் இருக்கிற போது, தமிழில் 'எழுத்து' என்று பெயர் வைத்தால் என்ன என்ற வாத்ததை சி. சு. செல்லப்பா வைத்தார். ‘எழுத்து' என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியாக அக்கரம், இலக்கணம், கல்வி, கையெழுத்து, ஆதாரச் சீட்டு, ஓவியம் என்றெல்லாம் விளக்கம் இருந்தாலும் இலக்கியப் படைப்பு என்ற அர்த்தத்தில்தான் பெயர் தாங்கி வருகிறது இந்த ஏடு என்று அவர் அறிவித்தார்.

'மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், பழக்க முறையாகி விட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாக கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்து, படிக்கச் செய்யவேண்டும், புதுப்புது விதமாக நோக்கும் பார்வையும் கொண்டு, வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பரவும்'

என்று கூறி, பத்திரிகையின் நோக்கங்கள் விரிவாகவே முதல் இதழில் எடுத்துச் சொல்லப்பட்டன. ‘எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளி வந்தது. 2000 படிகளுக்கு மேல் அச்சாகாது. நேரில் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்று வித்தியாசமான அறிவிப்புகள் வெளியானது.

படைப்புகள்

[தொகு]

இந்த இதழானது துவக்கம் முதலே, விமர்சனக் கட்டுரைகளுடன், சிறுகதைகளையும் புதுக் கவிதைகளூயும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது.

சி. சு. செல்லப்பா இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை என்ற ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட விரிவான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். விமர்சனத்தில் சோதனை என்ற டி. எஸ். இலியட் கட்டுரையை மொழிபெயர்த்துத் தந்தார். அவற்றோடு, கமலாம்பாள் சரித்திரம் பற்றிய நீண்ட விமர்சனக் கட்டுரையையும், ராமாம்ருதம் கலைத்திறன்', 'மௌனியின் மனக் கோலம ஆகிய கட்டுரைத் தொடர்களையும் எழுதினார். இவை எல்லாம் சிறந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளாகும். பாரதியின் 'அக்னிக் குஞ்சு' கவிதைக்கு விரிவான விளக்கக் கட்டுரை எழுதினார் அவர். தமிழ்ச் சிறுகதை குறித்து பல கட்டுரைகள் வெளியிட்டார்.

முதல் இதழிலிருந்தே க. நா. சுப்ரமண்யம் 'நல்ல தமிழ்ச் சிறுகதைகள்' என்று கட்டுரைகள் எழுதினார் இலக்கியத்தில் விஷயமும் உருவமும் பற்றி சிந்தனை வளர்த்தார், பாரதிக்குப் பின் என்ற தலைப்பில், வையாபுரிப் பிள்ளை, டாக்டர் சாமிநாதய்யர், மறைமலை அடிகள், திரு. வி. க. பற்றி க. நா. சு. எழுதியிருக்கிறார். வாழ்க்கை பற்றிய தத்துவ சிந்தனைகளைத் தொகுத்து க. சிதம்பர சுப்ரமண்யன் 'விண்ணும் மண்ணும்' என்ற தலைப்புடன் தொடர் கட்டுரை எழுதியுள்ளார். சி. கனகசபாபதி, பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றியும், புதுக்கவிதை சம்பந்தமாகவும், சங்க இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறார்.

வெ. சாமிநாதன், தருமுசிவராமு ஆகியோரின் தீவிர சிந்தனைகளையும் எழுத்து அதிகம் பிரசுரித்துள்ளது. ந. முத்துசாமியின் சிறுகதைகளை வெளியிட்டது. மற்றும் பல திறமையாளர்களை அறிமுகம் செய்திருக்கிறது.

‘ஜீவனாம்சம்' என்கிற சோதனை ரீதியான புதினத்தை செல்லப்பா எழுத்தில் தொடர்ந்து எழுதினார். அருமையான சிறுகதைகளும் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பிலும் அவர் சோதனைகள் நடத்தினார். அதன்படி, ஹென்றி ஜேம்ஸ் எழுதிய 'புரூக்ஸ்மித்', ஆன்டன் செகாவின் 'கூஸ்பர்ரிஸ்', ஃப்ராங்க் ஓ கானரின் 'ஞானஸ்நானம்', வில்லியம் ஃபாக்னரின் 'கிரீர்ஸன்', ஜேம்ஸ் ஜாய்ஸின் 'எவலின்' போன்ற சிறந்த சிறுகதைகளை செல்லப்பா மொழிபெயர்த்தார். இவையும் மற்றும் சில கதைகளும் 'சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பு' ஆக, மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் உரைநடையை இயைவிக்கும் ஒரு தோரணையில் அமைந்திருந்தன. அந்த மொழிபெயர்ப்பு நடை வாசகர்களைச் சிரமப்படுத்துகிற தமிழாக இருந்தபோதிலும், செல்லப்பா தன் சோதனையையும் கருத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் முறையில் அது சிறப்பு மலர்கள் வெளியிட்டிருக்கிறது. எழுத்து 5-வது ஏடு கு.ப. ரா. நினைவு மலர் என்றும், 7-வது ஏடு புதுமைப்பித்தன் நினைவு மலர் எனவும் உருவாயின. பிறகு, பிச்சமூர்த்தி மணிவிழா சிறப்பு ஏடு என்றும் 'பி. எஸ். ராமையா மலர்’ என்றும் வெளிவந்தன. எழுத்து 117-வது ஏடு 'சங்கு சுப்ரமண்யத்தின் நினைவு ஏடு' ஆகப் பிரசுரிக்கப்பட்டது.

புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது.[2] இவ்விதழில் ந. பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமண்யம், தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைசுவாமி, பசுவய்யா, எஸ். வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, சி. மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர். 1962ஆம் ஆண்டு 24 கவிஞர்களின் 63 கவிதைகளைத் தொகுத்து, புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி. சு. செல்லப்பா வெளியிட்டார்.

நிறுத்தம்

[தொகு]

காலம் செல்லச் செல்ல 'எழுத்து' சோர்வுற்று வந்தது. 9¼ ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் ஆண்டின் முதல் ஏடு (1968, ஏடு 112 ) காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது. அப்படியும் இது வெற்றிகரமாக வளர இயலவில்லை. பெரும் தொகை இழப்புதான் எழுத்து ஆசிரியர் கண்ட பலன். இதனால் பன்னிரண்டாம் ஆண்டில், 119 வது ஏட்டுடன் (1970 சனவரி-மார்ச்) ‘எழுத்து' நின்று விட்டது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. "சி.சு.செல்லப்பா சுமந்து சென்ற எழுத்து-கட்டுரை-எஸ்.ரா". www.naduweb.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  3. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 64–69. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_(இதழ்)&oldid=3328593" இலிருந்து மீள்விக்கப்பட்டது