உள்ளடக்கத்துக்குச் செல்

இராமநாதபுரம் மறவர் சீமை வாரிசு உரிமைப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதபுரம் மறவர் சீமை வாரிசு உரிமைப் போர் (Marava War of Succession) என்பது தமிழ்நாநாட்டின், மறவர் நாடு என அறியப்பட்ட இராமநாதபுரம் இராச்சியத்தின் அரியணைக்காக முத்துவிஜயரகுநாத சேதுபதி மற்றும் இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கர சேதுபதி ஆகியோரிடை நடந்த உரிமைப் போரும் அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்களும் ஆகும். இந்த உள்நாட்டுப் போர்களானது 1720 முதல் 1729 வரை தொடர்ச்சியாக நீடித்தது. இதன் முடிவில் இராமநாதபுரம் இராச்சியமானது பிரிவினைக்கு உள்ளாகி அதன் ஆற்றலும் செல்வாக்கும் குறையும் நிலை ஏற்பட்டது.

முன்நிகழ்வு

[தொகு]

இராமநாதபுர இராச்சியத்தை இறையாண்மை மிக்க ஒரு நாடாக அதன் உச்சநிலைக்கு கொண்டுவந்த மன்னர் இரகுநாத கிழவன் 1710 இல் இறந்தார். சிறந்த வீரரான இவரது மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கர சேதுபதி தனது தந்தையின் மறைவுக்குப்பிறகு அரியணை ஏற விரும்பினார்.. ஆனால் இவர் சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் என்ற காரணத்தினால் இராமநாதபுர அரண்மனை மரபின்படி இவருக்கு அரசுரிமை அளிக்க எதிர்ப்பு உருவானது. இதன்காரணமாக ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கையின் பெயரனான முத்துவிஜயரகுநாத சேதுபதி இராமநாதபுரம் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவை பவானி சங்கரத் தேவர் அப்போதைக்கு ஏற்றுக்கொண்டார், இதனானால் இராமநதபுரம் முழுவதும் அமைதி நிலவியது.

நிகழ்வுகள்

[தொகு]

உரிய காலம்வரை காத்திருந்த பவானி சங்கரத் தேவர், இராமநாதபுரத்தைக் கைப்பற்றுவதற்காக தஞ்சை மராட்டிய மன்னரின் உதவியை நாடினார். அவர் செய்யும் படை உதவிக்கு கைமாறாக தான் இராமநாதபுரம் சேதுபதியானதும் சேதுநாட்டின் வடபகுதியாக விளங்கிய சோழமண்டலப் பகுதிகளைத் (பட்டுக்கோட்டை சீமையை) தஞ்சை மன்னருக்கு விட்டுக்கொடுப்பதாக வாக்களித்தார். இதையடுத்து 1720 இல் தஞ்சாவூர் மராத்திய அரசர் துல்ஜாஜி மற்றும் புதுக்கோட்டை மன்னர் ஆகியோரின் உதவியுடன் பவானி சங்கரத் தேவர் அரியணையைக் கைப்பற்ற புரட்சியில் இறங்கி படைகளுடன் வந்தார். படைகளுடன் வந்த பவானி சங்கரத் தேவர் சேது நாட்டில் அறந்தாங்கிக் கோட்டையை திடீரெனத் தாக்கி கைப்பற்றியதுடன் சேது நாட்டின் வடபகுதியை சேதுபதி மன்னரிடமிருந்து துண்டித்து விட்டார்.[1] பெரும் படையுடன் சேதுபதி மன்னர் அறந்தாங்கி நோக்கிப் புறப்பட்டார். அங்கு போரில் ஈடுபட்டு இருக்கும்பொழுது அவரை அம்மை நோய் தாக்கியதால் அவர் இராமநாதபுரம் கோட்டைக்கு திரும்ப வேண்டியதாயிற்று.சில நாட்களில் வைசூரி நோய்க்கு சேதுபதி மன்னர் பலியானார்.[2] இவருக்குப் பின்னர் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி என்பவர் மன்னராக பொறுப்பேற்றார். ஆனால் அவரைப் போரில் கொன்று பவானி சங்கர சேதுபதி மன்னரானார்.

இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பிறகு தஞ்சை மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பவானி சங்கர சேதுபதி நிறைவேற்றவில்லை. இதனால் கோபமுற்ற தஞ்சை மராத்திய மன்னர் பவானி சங்கர சேதுபதியின் எதிரிகளின் படையெடுப்புக்கு தன்படைகளை அனுப்பி உதவி செய்தார். இந்தப் போருக்கு மறைந்த சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரர் கட்டையத்தேவரும், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மருகர் ஆன சசிவர்ணத் தேவரும் தலைமை தாங்கி வந்தனர். ஓரியூர் அருகில் நடந்த போரில் பவானி சங்கரத் தேவர் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அவர் சிறைபிடிக்கப்பட்டு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார்.[3]

பின்விளைவுகள்

[தொகு]

தஞ்சாவூர் மராத்திய படைகள் வென்றதையடுத்து, இராமநாதபுர இராச்சியமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டது. பம்பறு ஆற்றின் வடக்கே உள்ள அனைத்து பிரதேசங்களும் தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. மேலும் மீதமுள்ள சேதுநாடும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு போரில் கட்டையத்தேவருக்கு உதவிய சசிவர்ணத் தேவருக்கு வைகை ஆற்றின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதியை சின்ன மறவர் சீமை என்ற பெயருடன் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த உள்ளாட்டுப் போர்களினாலும் இதன் முடிவில் ஏற்பட்ட பிரிவினைகளாலும் இராமநாதபுரம் இராச்சியமானது அதன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர் எஸ்.எம்.கமால் (1997). "சீர்மிகு சிவகங்கைச் சீமை". நூல். பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்,. p. 30. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2019.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  2. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 53–55. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
  3. டாக்டர் எஸ். எம். கமால் (1997). "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சிவகங்கையும் சேதுபதியும்". நூல். ஷர்மிளா பதிப்பகம். p. 67. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.