சசிவர்ணத் தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு நிலையிட்ட விஜய ரகுநாத சசிவர்ண பெரிய உடையாத்தேவர் (ஆட்சிக் காலம்: 1728 - 1749) என்பவர் சிவகங்கை சீமையின் முதல் மன்னராவார்.[1] [2]

சசிவர்ண விஜயரகுநாத பெரிய உடையத்தேவர்
மன்னர் சசிவர்ணத் தேவர்
ஆட்சி1728 - 1749
முடிசூட்டு விழா1728
பின்வந்தவர்முத்து வடுகநாதர்
மனைவி
அரச குலம்சேது மன்னர்
தந்தைநாலுகோட்டை பெரிய உடையாத் தேவர்

வரலாறு[தொகு]

சசிவர்ணத் தேவரின் தந்தை நாலுகோட்டை பாளையக்காரரான உடையாத் தேவர் என்பவர் ஆவார். இராமநாதபுரம் சமஸ்தான மன்னரான முத்துவிஜயரகுநாத சேதுபதி தன் மகளான அகிலாண்டேஸ்வரி. நாச்சியாரை சசிவர்ணத் தேவருக்கு திருமணம் செய்வித்து அவரை வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராக நியமனம் செய்தார். இந்நிலையில் இராமநாதபுரத்தில் பவானி சங்கர தேவர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டார். இவரை அடக்க படைகளுடன் சென்று போரிட்ட முத்துவிஜயரகுநாத சேதுபதி அம்மை நோய் கண்டதால் இராமநாதபுரம் திரும்பிய நிலையில் இறந்தார். இதையடுத்து, பவானி சங்கர தேவர் எளிதாக இராமநாதபுரத்தைக் கைப்பற்றியதுடன் புதிதாகப் பட்டம் சூடிய சுந்தரரேசத் தேவர் என்ற சேதுபதியைக் கொன்றுவிட்டு அவரே சேதுபதியானார. இவர் மன்னராக ஆனதையடுத்து சசிவர்ணத் தேவர் தன் ஆளுநர் பதவியை இழந்தார்.

இதையடுத்து தனது அவல நிலையைத் தெரிவிப்பதற்காக சசிவர்ணத் தேவர் தஞ்சாவூர் மராத்திய மன்னரிடம் சென்றார். அப்பொழுது, இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு தகுதியுள்ள கட்டத்தேவரும் (இறந்துபோன சுந்தரேச தண்டத் தேவரது சகோதரர்) அங்கு வந்து இருந்தார். இருவரும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைத் தஞ்சை மன்னரிடம் விளக்கியதுடன் பவானி சங்கரத் தேவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற படை உதவி கோரினர். தஞ்சைமன்னர் சில நிபந்தனைகளுடன் படை உதவி செய்தார். இந்தப் படைகளுக்கு சசிவர்ணத் தேவரும், கட்டையத்தேவரும் தலைமை தாங்கிவர பவானி சங்கர சேதுபதி படைகளும் ஓரியூர் அருகே மோதின. வெற்றி தஞ்சை படைகளுக்கு. பவானி சங்கர சேதுபதி கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டார்.[3]

இதையடுத்து , இராமநாதபுர இராச்சியமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டது. பம்பறு ஆற்றின் வடக்கே உள்ள அனைத்து பிரதேசங்களும் தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. மேலும் போரில் கட்டையத்தேவருக்கு உதவிய சசிவர்ணத் தேவருக்கு வைகை ஆற்றின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதி 1728 இல் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த சின்ன மறவர் சீமை அல்லது சிவகங்கை சீமை என அழைக்கப்பட்டது. இந்த நாட்டின் முதல் மன்னராக சசிவர்ணத் தேவர் பொறுப்பேற்று ஆண்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார்

மறைவு[தொகு]

இந்த மன்னர், ஒரு நாள் பிரான்மலை சென்று, மங்கை பாகர் சுவாமியையும் தேங்குழல் அம்பிகையையும் தரிசனம் செய்து விட்டு பல்லக்கில் சிவகங்கை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த எதிரி ஒருவர் இவர்மீது குறிபார்த்து எறிந்த கட்டாரியால் இவர் கொல்லப்பட்டார்.[4]

சிவகங்கை சசிவர்ணத்தேவர் பள்ளிப்படை[தொகு]

சசிவர்ணத் தேவர் பள்ளிப்படை அல்லது சசிவர்ணேசுவரர் கோயில் என்பது சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னரான சசிவர்ணத் தேவர்க்கு அமைக்கப்பட்ட ஒரு பள்ளிப்படையாகும். இதை கட்டியவர் இவரது மகனும் சிவகங்கை மன்னருமான முத்து வடுகநாதர் தேவர் ஆவார். இது தமிழகத்தின், சிவகங்கையில், சிவகங்கை அரண்மனையின் வடகிழக்கே கட்டப்பட்டுள்ளது.

    தன் தந்தை சசிவர்ணத் தேவர்க்காக 1751இல் இந்த பள்ளிப்படைக் கோயிலை சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர்தேவர் சிற்ப முறைப்படி அமைத்து சிவலிங்கத்தைப் பிரதிட்டைச் செய்தார். இந்த திருக்கோயிலுக்கு திருவிடையாட்டக் காணியாக காத்தாடியேந்தல் வாணியங்குடி, மானங்குடி, முடிக்கரை ஆகிய நான்கு ஊர்களையும் இறையிலியாக வழங்கிய ஆணையே செப்பேட்டில் வெளியிட்டுள்ளார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. https://www.amazon.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-ebook/dp/B08HXB4V12
  3. டாக்டர் எஸ். எம். கமால் (1997). "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சிவகங்கையும் சேதுபதியும்". நூல். ஷர்மிளா பதிப்பகம். p. 67. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
  4. எஸ். எம். கமால் (1997). "சீர்மிகு சிவகங்கைச் சீமை". நூல். பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்,. p. 38. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2019.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  5. சசிவர்ணேசுவரர் ஆலயச் செப்பேடு (1997). சீர்மிகு சிவகங்கைச் சீமை. சிவகங்கை: பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம். பக். 58-59. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004039. 
  6. https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிவர்ணத்_தேவர்&oldid=3708857" இலிருந்து மீள்விக்கப்பட்டது