2020 பூட்டானில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Bhutan) என்பது 2020 ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். மார்ச் 28, 2020 நிலவரப்படி, பூட்டானில் 3 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவைரசு தொற்று நோயை உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு தொற்றுநோய் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவினால் மட்டுமே அந்நோயை உலகளாவிய தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.
2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 அன்றைய நிலவரப்படி 190-க்கும் மேற்பட்ட நாடுகளில், 597,000 பேருக்கும் மேலானோர், இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 27,300 பேர் இப்பெருந்தொற்று நோய்க்கு இறந்துள்ளனர்.[1]
கடந்த இரண்டு மாதங்களாக உலக மருத்துவர்கள் பலரும் இந்நோய்த்தொற்றை குறித்து முழுமையாக புரிந்து கொள்ள மட்டுமே இன்னும் முயன்று வருகின்றனர். உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை எண்ணிப்பார்த்தாலேயே கொரோனாவைரசு தொற்றுநோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கோவிட்-19 வைரசு பாதிக்கப்பட்டவரின் மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாகவே கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ளவர்களுக்கு நோயை பரப்பிவிடும் அபாயத்தை கொரோனாவைரசு தனது பலமாக வைத்திருக்கிறது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி, பூட்டான் தனது முதல் கோவிட்-19 நோய்த் தொற்றை உறுதிப்படுத்தியது. கொரோனாவைரசு தொற்றுநோயின் தாக்கங்களைக் கொண்ட 76 வயதான ஓர் அமெரிக்க ஆண், இந்தியா வழியாக பூட்டான் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். இவருடன் நேரடியாக தொடர்பு கொண்ட சுமார் 90 நபர்கள், இவரது 59 வயதான மனைவி, ஓட்டுநர் மற்றும் வழிகாட்டி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.[2]
பூட்டான் அரசு உடனடியாக இரண்டு வாரங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நகரத்தில் நுழைவதை தடை செய்தது. தலைநகர் திம்பு உட்பட மூன்று பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன .[2]
கொரோனா வைரசு தொற்றுநோயின் தாக்கங்களைக் கொண்ட 76 வயதான அமெரிக்க ஆண் மார்ச் மாதம் 13 தேதியன்று அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதியன்று 59 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி கோவிட்-19 நோய்த் தொற்று அறிகுறியுள்ளதா என சோதிக்கப்பட்டார். அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்றாலும்., ஓட்டுனர் மற்றும் வழிகாட்டி இருவருக்கும் நோயின் பாதிப்பு இல்லையென சோதனையின் முடிவுகள் தெரிவித்தன.
இவ்விருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டிய காலம் முடிந்திருந்தாலும், அக்காலத்தை மேலும் நீட்டித்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.[3].