ஸ்டீக் லார்சன்
ஸ்டீக் லார்சன் | |
---|---|
பிறப்பு | கார்ல் ஸ்டிக்-எர்லாண்ட் லார்சன் 15 ஆகத்து 1954 ஸ்கெலெஃப்டெஹாம்ன், சுவீடன் |
இறப்பு | 9 நவம்பர் 2004 ஸ்டாக்ஹோம், சுவீடன் | (அகவை 50)
தொழில் | இதழாளர், எழுத்தாளர் |
தேசியம் | சுவீடியர் |
கல்வி | 1979 |
காலம் | 1990s-2004 |
வகை | குற்றப்புனைவு, பரபரப்புப் புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆயிரமாண்டு முப்புதினங்கள் |
இணையதளம் | |
http://www.stieglarsson.se/ |
ஸ்டீக் லார்சன் (Stieg Larsson, ஆகஸ்ட் 15, 1954 – நவம்பர் 9 2004) ஒரு சுவீடிய இதழாளர் மற்றும் எழுத்தாளர். உலகப்புகழ் பெற்ற மில்லெனியம் டிரைலஜி (ஆயிரமாண்டு முப்புத்தகங்கள், Millennium Trilogy) என்ற புதின வரிசையை எழுதியவர். இப்புதின வரிசை இது வரை உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2.7 கோடி படிகள் விற்றுள்ளது. 2008ம் ஆண்டில் உலகில் மிக அதிகமான புத்தகங்கள் விற்ற எழுத்தாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.
லார்சன் இடதுசாரி கொள்கையுடைவர். தனது இளமைக்காலத்தில் எரித்திரியா நாட்டில் அரசு எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் தன்னார்வலராகச் சென்றவர். சுவீடிய பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். சுவீடனின் திரொட்ஸ்கிய பத்திரிக்கையான ஃபியார்டே இண்டெர்நேஷனலேன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் இண்டெர்நேஷனலேன் இதழிலும் அடிக்கடி எழுதிவந்தார். சுவீடனில் வலதுசாரி சிந்தனைகளும் வெள்ளைப் பேரினவாத கருத்துகளும் பரவாமல் தடுக்க சுவீடிய எக்ஸ்போ அமைப்பைத் தொடங்கினார். அது வெளியிட்ட எக்ஸ்போ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சுவீடிய வலதுசாரி அமைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதினார். சுவீடிய அறிபுனை ரசிகர் அமைப்புகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
2004ம் ஆண்டு லார்சன் மாரடைப்பால் காலமானார். அவர் வாழ்நாளில் பல புதினங்களை எழுதியிருந்தாலும் அவற்றை அவர் பதிப்பிக்க முயலவில்லை. மாலை நேரங்களில் தனது மனமகிழ்வுக்காக மட்டும் எழுதிவந்திருந்தார். அவரது மறைவுக்குக் பின் 2005ல் அவரது மென் சோம் ஹாடர் குவின்னோர்(பெண்களை வெறுக்கும் ஆண்கள், Män som hatar kvinnor) என்ற தலைபில் சுவீடனில் வெளியாகி பெருவெற்றி கண்டது. தி கேர்ல் வித் தி டிராகன் டாட்டூ (டிராகன் பச்சை குத்தியிருக்கும் இளம்பெண், The Girl with the Dragon Tattoo) என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் புகழ் பெற்றது; பல இலக்கிய விருதுகளையும் வென்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த முப்புதின வரிசையின் அடுத்த இரு புதினங்களும் வெளியாகி அவையும் பெருவெற்றி பெற்றன. தி கேர்ல் வித் தி டிராகன் டாட்டூ சுவீடிய மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. தற்போது ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- www.larssontrilogy.com பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம் from Quercus, publishers of Stieg Larsson (ஆங்கிலம்)
- The official Millennium site of Nordstedt Publishing (சுவீடியம்)