வோக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வோக்கா என்பது இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் வோக்கா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். வோக்கா நகரம் மாநில தலைநகர் கோஹிமாவில் இருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

வோகா என்றால் லோதா மொழியில் "தலைகளின் எண்ணிக்கை" அல்லது "மக்கள் தொகை கணக்கெடுப்பு" என்பதாக பொருள்படும். இந்த நகரத்தில் சனத் தொகை 35,004 ஆகும்.[1] இங்கு பெரும்பாலும் லோதா பழங்குடியினர் வசிக்கின்றனர்.

வோக்கா மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், அங்கீகரிக்கப்பட்ட 125 கிராமங்களும் உள்ளன. இது மேலும் 13 நிர்வாக பிரிவுகளாகவும் 7 கிராம அபிவிருத்தி தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

1876 ​​ஆம் ஆண்டில் அசாமின் கீழ் உள்ள நாகா மலைகளின் மாவட்ட தலைமையகமாக வோக்கா செயற்பட்டது. 1878 ஆம் ஆண்டுகளில் தலைமையகம் கோஹிமாவுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் வோக்கா துணைப்பிரிவாக இருந்தது. பின்னர் 1889 ஆம் ஆண்டில் துணைப்பிரிவு மோகோக்சுங்கிற்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் வோக்கா 1957 ஆம் ஆண்டில் நாகா ஹில்ஸ் டுயென்சாங் பகுதியின் கீழ் ஒரு துணைப் பிரிவாக ஆனது. மேலும் 1973 ஆம் ஆண்டில் இப்பகுதி மாவட்டமாக மாறும் வரை துணைப் பிரிவாகவே காணப்பட்டது.

புவியியல்[தொகு]

வோகா 26.1° வடக்கு 94.27° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 1,313 மீட்டர் (4,793 அடி) உயரத்தைக் கொண்டது.

காலநிலை[தொகு]

இந்த நகரம் கோப்பன் - கீகர் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமான மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. வோக்காவின் கோடை வெப்பநிலை 16.1 C முதல் 32. C வரை இருக்கும். குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சம் 2. C ஐ அடைகிறது. வோக்காவில் சராசரி ஆண்டு வெப்பநிலை 17.8. C ஆகும். மேலும் இங்கு சராசரி ஆண்டு மழை வீழ்ச்சி 1940 மில்லி மீற்றராக பதிவாகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

திமாபூர் மற்றும் கோஹிமாவுக்குப் பிறகு நாகாலாந்தில் மூன்றாவது பெரிய நகரம் வோக்கா ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி வோக்காவின் மக்கட் தொகை 35,004 ஆகும். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 96% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 97% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 95% வீதமாகவும் காணப்படுகின்றது.

வோக்காவின் மக்கட் தொகையில் 10.57% வீதமானோர் 6 வயதிற்குட்பட்டவர்கள். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். சிறுபான்மையினராக இந்துக்களும், இசுலாமியர்களும் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்கள் 92% வீதமும், இந்துக்கள் 5% வீதமும், இசுலாமியர்கள் 2% வீதமும் காணப்படுகின்றனர்.[1]

லோதா (இப்பகுதியின் சொந்த மொழி) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழியாகும். இப்பகுதிகளில் நாகமீஸ் மற்றும் ஆங்கிலமும் பேசப்படுகின்றன.

சுற்றுலா[தொகு]

வோக்காவின் ஒருங்கிணைப்பு பகுதியானது வோகா நகரம், லாங்சா கிராமம், வோகா கிராமம் மற்றும் வாகோசுங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவற்றில் 80,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வோக்கா கோஹிமாவில் இருந்து மோகோக்சுங்கிற்கு செல்லும் முக்கிய பாதையில் அமைந்துள்ளது. இது அசாம் ரைபிள்ஸின் ஆரம்ப இடங்களில் ஒன்றாகும். நாகாலாந்து அரசு வோகா நகரில் சுற்றுலா விடுதியொன்றைக் கட்டியது. இப்பகுதியில் வடகிழக்கு இந்தியாவின் பழமையான துடுப்பாட்ட போட்டியான தி வின்டர் கிரிக்கெட் சவால் நடத்தப்படுகின்றது. அருகிலுள்ள ரயில் நிலையம் அசாமின் கோலாகாட்டில் உள்ள ஃபுர்கேட்டிங் ரயில் நிலையம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் திமாபூர் விமான நிலையம் ஆகும். நாகாலாந்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலிருந்து வோக்கா வரை வாடகையுந்துகள் மற்றும் பேருந்து இயங்குகின்றன. திமாபூரிலிருந்து உலங்கு வானுர்தி சேவை உள்ளது.[3]

கட்டுக்கதைகள்[தொகு]

தியே மலையை பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைவுக் கதைகள் உலாவுகின்றன. இந்த மலை ஆத்மாக்களின் தங்குமிடம் என்று பெரும்பாலான நாகர்கள் நம்புகிறார்கள். உள்ளூர் லோதா நாட்டுப்புறக் கதைகளின்படி இந்த மலையில் ஒரு பழத்தோட்டம் இருப்பதாகவும் அது 'அதிர்ஷ்டசாலிகளுக்கு' மட்டுமே காணக்கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது. தியோ மலையில் ரோடோடென்ட்ரான்கள் எனப்படும் பூக்கள் பொதுவாக காணப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோக்கா&oldid=2868442" இருந்து மீள்விக்கப்பட்டது