உள்ளடக்கத்துக்குச் செல்

வெலகளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெலகளி என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வசிக்கும் நாயர் சமூகத்தின் பாரம்பரிய தற்காப்பு நடன கலைகளுள் ஒன்றாகும். இது கேரளாவில் நடைபெறும் கோயில் திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படுகிறது. வண்ணமயமான நிறங்களில் உடை அணிந்த நடனக் கலைஞர்கள் வாள் மற்றும் கேடயங்களை ஏந்திய படி இந்த நடனத்தின் போது புராணங்களில் கூறப்பட்டுள்ள பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த சண்டை காட்சியை சித்தரிக்கின்றனர்.[1]

இந்த நடன கலைஞர்கள் இடைக்கால நாயர் இன போர் வீரர்களை போல உடை அணிந்து வண்ணமயமான தலைப்பாகைகளை அணிந்து இசைக்கருவிகளின் மெல்லிசைக்கு ஏற்றார் போல விறுவிறுப்பாக அடி எடுத்து வைப்பார்கள். மத்தளம், மேளம், தாளம், கொம்பு, குழல் போன்ற துணை வாத்தியங்கள் இந்த நடனத்தின்போது இசைக்கப்படும். இந்த நடனம் அம்பலப்புழாவில் உருவானது. கேரளாவில் செம்பகச்சேரி படையின் தளபதியான மாத்தூர் பணிக்கர் என்பவர் மக்களிடையேயும் வீரர்களிடையேயும் போராட்ட உணர்வை அதிகரிக்க இந்த நடன கலை வடிவத்தை மேம்படுத்தினார். அம்பலப்புழாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ஆண்டு பூரம் விழாவின் முக்கிய நிகழ்வாக வெலகளி நடனம் நடைபெறுகிறது. மேலும் பல வருடங்களாக திருவல்லா ஸ்ரீ வல்லபமகா கோயிலில் உற்சவத்தின் போதும் சீரக்கடவு ஸ்ரீ மகாதேவ கோயிலிலும் இந்த வெலகளி நடனம் ஒரு சடங்காக நடைபெற்று வருகிறது. அம்பலப்புழா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டது முதல் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் பங்குனி விழாக்களில் இந்த வெலகளி நடனமும் நடைபெறுகிறது.[2][3]

தோற்றம்[தொகு]

செம்பகச்சேரி இராச்சியத்தி்லிருந்து தான் இந்த வெலகளி தோன்றியதாக பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[4] செம்பகச்சேரி மன்னரின் ஆட்சியின்போது அவரின் தளபதிகளாக இருந்த மாத்தூர் பணிக்கர்[5] மற்றும் வெள்ளூர் குறூப் ஆகியோர் களரிப்பாய்ச்சலில் மிகவும் திறமையானவர்கள். இந்த களரிப்பாய்ச்சல் போர் முறையின் முன்னேற்றத்திற்காக மன்னரும் அவரது தளபதிகளும் இணைந்து மக்களிடையே களரியைப் பற்றிய பயத்தை போக்குவதற்கும் வீரர்களிடையே களரியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும். களரியோடு இணைந்து ஒரு நடன ஆட்டத்தை உருவாக்கி காட்சிப்படுத்தினர். அப்படித்தான் அம்பலப்புழா கோவில் திருவிழாவின் போது கோவில் முன்பாக இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர். தற்பொழுது அந்த கோவில்களில் நடைபெறும் சடங்குகளில் ஒன்றாகவே வெலகளி நடனம் இருக்கின்றது. வெலகளி ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் பல வாத்தியங்கள், இசைக்கருவிகள், நடன அசைவுகள் மற்றும் அடவு முறைகள் போன்றவை களரி ஆட்டத்தில் இருந்து நகலெடுக்கப்பட்டவையே.[6]

பத்மநாபசுவாமி கோவிலின் கிழக்கு வாசலில் திருவிழாவின் போது வெலகளி நிகழ்ச்சியின் போது பாண்டவர்களின் பெரிய உருவ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. அம்பலப்புழாவில், அம்பலப்புழா அரச குடும்பத்தின் பரம்பரை ஆசானும் அமைச்சருமான மாத்தூர் பணிக்கர் [7] வழிகாட்டுதலின் கீழ் நடனம் ஆடப்படுகிறது. வெலகளி நடனக் கலைஞர்கள் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் . இந்த நடன நிகழ்ச்சி, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், அவர்கள் காட்டிற்கு நாடுகடத்தப்பட்டபோது கௌரவர்களுக்கு எதிரான பீமனின் வெற்றியையும் பிரதிபலிக்கிறது.[8] இள வயது கலைஞர்கள் முன் வரிசையில் நிற்கிறார்கள் மற்றும் பெரியவர்கள் குழுவின் பின்புறத்திலும் நின்று கொள்ள, கொடி ஏந்துபவர்களின் குழு பின்பக்க வரிசையை உருவாக்குகிறது. கலைஞர்கள் சில சமயங்களில் பழைய நாட்களில் போரில் பயன்படுத்தப்பட்ட எருதுகள் போன்ற விலங்குகளின் பிரதிகளுடன் வருகிறார்கள். ஆல்ஃபிரட் ஹில்டெபீடலின் கூற்றுப்படி , மத்திய திருவிதாங்கூரில் நடைபெறும் வெலகளி நிகழ்ச்சிகள், மகாபாரதப் போரைக் காட்டிலும் சரித்திரப் போர்கள் எனக் கூறப்படுபவைகளின் மறுவடிவமைப்புகளாகும். மேலும் அவை படயணி சடங்குகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன . பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் தான் மகாபாரதத்தின் சண்டை காட்சிகள் நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டுள்ளன.[9]

புராணக்கதை[தொகு]

இந்த வெலகளி ஆட்டத்தின் வரலாற்றில் பல புராண கதாபாத்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு முறை கிருஷ்ணர் தனது சக மாடு மேய்ப்பவர்களுடன் தாமரை குளத்தில் இறங்கி குளித்துவிட்டு தாமரை இலையையும் அதன் மொட்டையும் தண்டோடு பறித்து போலியாக சண்டையிடுவது போல விளையாடத் தொடங்கினார். அங்கே வந்த நாரத மகரிஷி, கிருஷ்ணர் அவரது நண்பர்களோடு ஆடும் அந்த போலியான போர் சண்டையில் ஆட்டத்தில் மயங்கி இதையே நடன காட்சிகளாக கொண்டு கேரள மக்கள் அனைவருக்கும் இதை பரப்ப வேண்டும் என்று நினைத்து கேரளாவில் விஷ்ணு கோயில்களில் இந்த விளையாட்டை நிகழ்த்திக் காட்ட அறிவுறுத்தியதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஏனென்றால் நிலக்கலையின் நடனத்தில் பயன்படுத்தப்படும் வாட்களும் கேடயங்களும் கிட்டத்தட்ட தாமரை இலை, மொட்டுக்கள், கிளைகள் மற்றும் தண்டுகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தின் காரணமாக கேரளாவில் தற்காப்பு கலைகளின் மீதான தாக்கம் அதிகமாகியது.

நடன ஒப்பனை ஆடைகள்[தொகு]

வெலகளி என்பது முழுக்க முழுக்க ஆண் நடன கலைஞர்களால் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியாகும். இந்த கலைஞர்கள் வண்ணமயமான சிவப்பு நிற தலைக்கவசங்களை அணிந்து கொண்டு சட்டையில்லாத வெறும் மார்பை, மணிகளால் செய்யப்பட்ட துணி மாலைகளைக் கொண்டு மறைத்து நடனத்தை நிகழ்த்துவார்கள். மேலும் நீண்ட கம்புகள், களரி வாள்கள் மற்றும் கேடயங்கள் அணிந்து வாத்தியங்கள் இசைக்கும் கலைஞர்களின் இசை தாளத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டு வாட்களை வைத்தும் விளையாடி வருவார்கள்.[3][6][10]

வாத்திய கருவிகள்[தொகு]

பஞ்ச வாத்தியங்கள் எனப்படும் மத்தளம் , தவில், மேளம் , கொம்பு மற்றும் குழல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெலகளி நிகழ்த்தப்படுகிறது . இந்த நடனத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை மாறாக இசையின் தாள வாத்தியங்களின் தாளத்திற்கு ஏற்ப நகர்கிறார்கள் . மேலும், பெரும்பாலான கேரள நடன வடிவங்களைப் போலல்லாமல், பாவனைகளுக்கு வெலகளி யில் இடமில்லை மாறாக தாளத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது . பிடிச்சகளி, படகளி போன்றவற்றின் பிரதிபலிப்பும் கணப்படுகிறது.

சமீபத்திய மாற்றங்கள்[தொகு]

வெலகளி நடன ஆட்டத்திற்கு நடனப் பயிற்சியோடு உடற்பயிற்சி மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றிய அறிவும்.[11] தேவைப்படுகிறது இதனால் நன்றாக கல்வி கற்ற மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் இந்த ஆட்டத்தில் ஈடுபடுவது குறைந்து, கல்வி அறிவில்லாத மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களே இந்த ஆட்டத்தில் ஈடுபடுவது அதிகரித்தது. இதன் விளைவாக படிப்படியாக வெலகளி ஆட்டத்தின் கலைஞர்களின் பங்களிப்பு குறைந்து சரிவு ஏற்பட்டது. சமீபமாக முகநூல் குஞ்சுப் பணிகளின் முயற்சியால் இந்த ஆட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு மீண்டும் வெலகளி நடனம் அரங்கேறியது.[6]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Gupta, Shobhna (2002). Dances Of India. New Delhi: Har Anand Publications. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124108666.
 2. Menon, A. Sreedhara (2007). A Survey of Kerala History (in ஆங்கிலம்). D C Books. p. 354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-264-1578-6.
 3. 3.0 3.1 "Reviving a temple tradition". தி இந்து. 15 April 2011 இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110419232125/http://www.hindu.com/2011/04/15/stories/2011041562920500.htm. 
 4. വേലകളി : ഒരു ക്ഷേത്ര കല - ഇരിക്കാട്ട് എ.ആർ. കുട്ടപ്പൻ നായർ
 5. "MathoorPanicker". 2019-02-28. Archived from the original on 2019-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
 6. 6.0 6.1 6.2 Nagarajan, Saraswathy (27 December 2012). "In step with the times". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/dance/in-step-with-the-times/article4245266.ece. 
 7. Menon, A Sreedhara (2008). Cultural heritage of Kerala. Kottayam: D C Books. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126419036.
 8. "Martial artistry". The Hindu. 31 March 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/martial-artistry/article3264155.ece?textsize=small&test=2. 
 9. Hiltebeitel, Alf (1991). The Cult of Draupadi, Volume 2: On Hindu Ritual and the Goddess. Chicago: University of Chicago Press. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226340470.
 10. Devi, Ragini (1972). Dance Dialects Of India. Delhi: Motilal Banarsidass. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120806740.
 11. Menon, A Sreedhara (2008). A Survey Of Kerala History. Kottayam: DC Books. p. 354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126415786.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலகளி&oldid=3741856" இலிருந்து மீள்விக்கப்பட்டது