வெப்பாலை
| வெப்பாலை | |
|---|---|
| பூக்கள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | அசுடெரிட்சு
|
| வரிசை: | ஜெண்டியானலசு
|
| குடும்பம்: | அபோசினேசியே
|
| பேரினம்: | விரிங்தியா
|
| இனம்: | வி. திங்டோரியா
|
| இருசொற் பெயரீடு | |
| விரிங்தியா திங்டோரியா இராப்ர்ட் பிரவும், 1809 | |
வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். ரைட்டியா என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த மரமானது இந்தியா, தெற்காசியா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் வறண்ட மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இது பழந்தமிழகத்தில் பாலை என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே.[1][2] இது , வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் என்றும் அழைக்கப்படுகிறது. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானைகள் தம் தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டைகளைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். எனவே இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. இத்தாவரத்தின் பல்வேறு பகுதிகள் மரபார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாகவோ பாதுகாப்பானதாகவோ இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
பெயர்
[தொகு]வெப்பாலை வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது என்றும்[3], இந்த மரத்தின் இலையைக் கிள்ளினால் வெண்மையான பால் வருவதால் இந்த வெண்மையான பாலின் நிறமே இதன் பெயருக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.[4]
விளக்கம்
[தொகு]


வெப்பாலை சிறிய முதல் நடுத்தர அளவிலான ஒரு இலையுதிர் மரமாகும், இது 3–15 மீ (10–49 அடி) உயரம் கொண்டது[5] ஆனால் 18 மீ வரை வளரக்கூடியது.[6] இதன் பட்டை மென்மையானது, மஞ்சள்-பழுப்பு நிறமானது. பட்டை சுமார் 10 மிமீ தடிமன் கொண்டது. இந்த மரத்தின் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்தவை, முட்டை வடிவானவை, கூர் மழுங்கிய முனைகொண்டவையாக, 10–20 செ.மீ நீளமும், 5 செ.மீ அகலமும் கொண்டவை. இலைகள் உரோமங்களற்றவை என்றாலும்ம் சில நேரங்களில் அடியில் உரோமங்கள் காணப்படலாம்.[5] (இந்தியாவில்) மார்ச் முதல் மே வரை பூக்கள் தோன்றும், ஏப்ரல் முதல் சூன் வரை உச்சத்தை அடைகின்றன.[5][6] கிளைகளின் முடிவில் 5–15 செ.மீ அகலமுள்ள வெண்ணிற மலர் கொத்துகள் கொண்டிருக்கும். பூக்கள் 2–3 செ.மீ நீளமுள்ள ஐந்து வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்கும். பூவானது நட்சத்திரம் போன்ற, நறுமணம் மிக்கதாக இருக்கும். பூக்கள் முதிரும்போது வெண்மஞ்சள் நிறமாக மாறும். ஆகத்து மாதத்தில் காய்க்கும்.[5] இதன் காய்கள் உருளை வடிவமாகவும், கருப்பு-பச்சை நிறப் புள்ளிகளுடன் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இது இரண்டு இரண்டாக காய்க்கும். அவை நுனியில் இரண்டும் இணைந்தது காணப்படும். விதைகள் பழுப்பு நிறமாகவும், பஞ்சு இணைந்தவையாகவும் இருக்கும்.[6] விதைகள் காற்றில் பரவுகின்றன. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நிகழ்கின்றன.[6] விதை, பட்டை, ஆகியவை மருத்துவப் பயனுடையவை.[7]
பரவல்
[தொகு]வெப்பாலை முக்கியமாக ஆத்திரேலியா, இந்தியா, மியான்மர், நேபாளம், திமோர், வியட்நாமில் காணப்படுகிறது.[5] இந்தியாவிற்குள், வடக்கு, வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, தீபகற்ப மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.[6]
சூழலியல்
[தொகு]வெப்பாலை மெதுவாக வளரும் தாவரமாகும். சுமார் 5–8 வயதாக இருக்கும்போது பூக்கத் தொடங்கும். இது வறண்ட, அரை வறண்ட, சமவெளி, பாறைகள் கொண்ட மண், ஈரமான பகுதிகள், குறிப்பாக வறண்ட மணல் நிறைந்த இடங்கள் அல்லது மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற பல்வேறு வகையான மண் வகைகளிலும் வளரும். இந்த மரத்தை வெட்டினால்கூட நன்கு துளிர்க்கக்கூடியது, மேலும் வேர்களில் பக்கக் கன்றுகள் உருவாகும்.[5] இது மிதமான நிழலைத் தாங்கி வளரும் மற்றும் பெரும்பாலும் இலையுதிர் காடுகளில் அடிமரமாகக் காணப்படும்.[5] இது மண்ணில் அதிக யுரேனியம் அளவையும் பொறுத்துக்கொள்ளும்.[5] இந்தியாவில், செர்கோஸ்போரா ரைட்டியா என்ற பூஞ்சை ரைட்டியா டின்க்டோரியா என்னும் இலைப்புள்ளி நோயை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.[8] நீல வரியன், கத்திவால் அழகி, கொக்கிக்குறி வெள்ளையன், வெள்ளிக்கம்பிக்காரி ஆகிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் இந்த மரத்தில் முட்டையிட்டு, அவற்றின் புழுக்கள் இதன் இலைகளை உண்டு வளரும்.[4]
பயன்கள்
[தொகு]வெப்பாலையின் பூக்கள், இலைகள், காய்கள், விதைகள் போன்றவை உண்ணக்கூடியவை.[8] இந்த மரத்தின் பொருட்கள் மருந்து, சாயம் போன்ற தேவைகளுக்காக காடுகளிலிருந்து அறுவடை செய்யப்படுகினறன. இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள் போன்றவை அவுரி நீலச் சாயம் தரும் குளுக்கோசைட்டின் மூலங்களாகும், இதிலிருந்து நீலம் அல்லது அவுரி போன்ற சாயங்களை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ சாயத்தை தயாரிக்க சுமார் 100–200 கிலோ இலைகள் தேவைப்படுகின்றன.[5] இது சிலசமயங்களில் வெப்பமண்டலங்களில் அலங்காரத் தாவரமாக நடப்படுகிறது. தழை உரத்திற்காக நெற் கழனிகளில் இதன் கிளைகள் அழுத்தி மிதிக்கப்படுகின்றன. இது வேர்களில் பக்கக் கன்றுகளை உருவாக்குவதால் இது ஒரு நல்ல வேளாண் காடு வளர்ப்பு இனமாக பரிந்துரைக்கப்படுகிறது.[5] அதிக அளவு அறுவடை செய்யப்படுவதால் சில பகுதிகளில் இது பற்றாக்குறையாகிறது.[8]
மரபு மருத்துவத்தில்
[தொகு]ஆயுர்வேதம் உள்ளிட்ட மரபார்ந்த மருத்துவ முறைகளில், வெப்பாலை மரம் ஸ்வேத குட்டஜா என்றும், இதன் விதைகள் இந்த்ராயவா அல்லது இந்த்ராயவா என்றும் அழைக்கப்படுகின்றன.[9] சித்த மருத்துவத்தில் இதன் இலைகளை அடிப்படையாகக் கொண்டு வெப்பாலைத் தைலம் தயாரிக்கபடுகிறது. அது தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் விதைகள், பட்டைகள் போன்றவை காயம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, புழுத்தொல்லை, குருதிப்போக்கு, காய்ச்சல், மூட்டுவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இதில் தயாரிக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பானது அல்லது எவ்வித நன்மை பயக்கக்கூடியது என்பதற்கு உயர்தர மருத்துவ சான்றுகள் எதுவும் இல்லை.
மரவேலை
[தொகு]வெப்பாலையின் வெள்ளை நிற மரமானது கடைசல் வேலை, செதுக்குதல், பொம்மை செய்தல், தீப்பெட்டிகள், சிறிய பெட்டிகள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. வெப்பாலை மரத்தில் செய்யப்படும் பொம்மைகள் யானை தந்தத்தைக் கொண்ட செய்யப்படவை போன்று காட்சியளிப்பதால் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்த மரம்) என்று இம்மரம் அழைக்கப்படுகிறது.[10] இது சென்னபட்டணத்தில் (கருநாடகத்தின் பொம்மை நகரம்) உலகப் புகழ்பெற்ற சென்னப்பட்ணா பொம்மைகளின் செதுக்குதல் மற்றும் அரக்கு வேலைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[11] இந்த மரம் உயர் தரமும் மதிப்பும் மிக்கது.
தலமரமாக
[தொகு]திருப்பாலைத்துறை என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பாலை மரமாகும். தலத்தின் பெயர் தலமரத்தின் பெயரால் அமைந்ததேயாகும்.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ [1]
- ↑ 2.0 2.1 http://www.shaivam.org/sv/sv_paalai.htm
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (25 ஆகத்து 2018). "ஆரோக்கியத்தின் பூஞ்சோலை… வெட்பாலை!". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 30 ஆகத்து 2018.
- ↑ 4.0 4.1 4.2 வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே | ஆயிரம் மலர்களே மலருங்கள் 4, கட்டுரை, ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 2025 சூலை 5
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 Orwa; et al. "Agroforestree Database: a tree reference and selection guide version 4. 0" (PDF). World Agroforestry Centre. Retrieved 21 April 2016.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Kavitha, A. "Common Dryland Trees of Karnataka: Bilingual Field Guide. Ashoka Trust for Research in Ecology and the Environment". India Biodiversity Portal. ATREE. Retrieved 21 April 2016.
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.70
- ↑ 8.0 8.1 8.2 Ba, N.; Thin, N.N.; Tonanon, N.; Sudo, S. (1995). "Wrightia R.Br". proseanet.org. PROSEA (Plant Resources of South-East Asia) Foundation, Bogor, Indonesia. Archived from the original on August 18, 2016. Retrieved 21 April 2016.
- ↑ "Plant Details for a Wrightia tinctoria R.BR". envis.frlht.org. Retrieved 2019-09-18.
- ↑ A brief description of சென்னபட்டணம் toys is provided by National Informatics Centre. "Industries and Commerce, Bangalore Rural district". Official Webpage of the Bangalore Rural district. Government of கருநாடகம். Archived from the original on 2007-05-18. Retrieved 2007-04-22.
- ↑ "Chapter 3: Case Study 2 – LAC-Turnery and the Lacquerware Industry".