வெட்டுக்கோடு
வடிவவியலில் ஒரு வளைவரையின் வெட்டுக்கோடு(secant line) என்பது அந்த வளைவரையை இரு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடாகும். இலத்தீன்மொழியில் வெட்ட என்ற பொருள்கொண்ட secare, என்ற சொல்லில் இருந்து இக்கோடு ஆங்கிலத்தில் சீகெண்ட் லைன்(secant line) என அழைக்கப்படுகிறது.
ஒரு வளைவரையின் மேல் அமையும் P என்ற புள்ளியில் அவ்வளைவரைக்கு வரையப்பட்ட தொடுகோட்டைத் தோரயப்படுத்த வெட்டுக்கோட்டைப் பயன்படுத்தலாம். வளைவரையின் வெட்டுக்கோட்டை வரையறுக்கும் இரு புள்ளிகள் P , Q என்க. இவற்றில் P நிலையான புள்ளி; Q மாறும்புள்ளியாக எடுத்துக் கொள்க. Q, வளைவரை மீதாகவே P -ஐ நோக்கி நெருங்கினால் வெட்டுக்கோட்டின் திசை P -ல் வளைவரைக்கு வரையப்படும் தொடுகோட்டின் திசையை நெருங்கும். (இங்கு வளவரையின் முதல் வகைக்கெழு P -ல் தொடர்ச்சியானதாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அப்புள்ளியில் ஒரேயொரு தொடுகோடு இருக்கும்.) இதன் விளைவாக Q புள்ளி P -ஐ நெருங்கும் எல்லை நிலையில் வெட்டுக்கோடு QP -ன் திசை அல்லது சாய்வு P -ல் அமையும் தொடுகோட்டின் சாய்வுக்குச் சமமாகும். வகை நுண்கணிதத்தில் வகையீட்டின் வடிவியல் வரையறைக்கு இக்கருத்து அடித்தளமாக அமைந்துள்ளது. ஒரு வளைவரையின் நாண் என்பது அவ்வளைவரைக்குள் அமையும் வெட்டுக்கோட்டின் பகுதியாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Weisstein, Eric W., "Secant line", MathWorld.