வீதிய பண்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீதிய பண்டாரம் ஆறாம் புவனேகபாகுவின் (1521 - 1551) ஆட்சிக்காலத்தில் கோட்டை அரசின் படைத் தளபதியாக விளங்கிய பெருவீரன் ஆவான்.[1][2]சீதாவாக்கையின் மாயாதுன்னைக்கெதிராகவும், போர்த்துக்கேயராகவும், கோட்டை அரசு மேற்கொண்ட யுத்தங்களில் எல்லாம் இவன் பெரும்பங்கு வகித்தமையை வரலாற்றில் அறியமுடிகின்றது.[3] தென்னிலங்கை போர்த்துக்கேயரின் வசமாகிக்கொண்டிருப்பதற்கு அதிகபட்ச எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், அவர்களின் சீற்றத்துக்குள்ளாகி ஆரியச்சக்கரவர்த்தி அரசுக்கு தப்பிச்சென்ற அவன், அங்கு ஏற்பட்ட வேறொரு குழப்பத்தில் அநியாயமாகப் பலியானான்.

பின்னணி[தொகு]

கல்லுத்துறையிலிருந்து மாக்கோணை வரையான பகுதியை சிற்றரசாக ஆண்ட "குமார பண்டாரம்" என்பவனுக்கு மகனாகப் பிறந்த வீதிய பண்டாரம், அவன் பிறந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டிருந்த போர்த்துக்கேயர் - தென்னிலங்கை அரசுகள் எனும் முரணுக்கிடையே முக்கியமான பெரும்சக்தியாக வளர்ந்துவந்தான். புவனேகபாகு மன்னனின் மகள் சமுத்திரா தேவியை மணந்துகொண்ட அவன், பின்பு அவளது நடத்தையில் ஐயம் கொண்டதாகவும், அவளது கொலையில் அவனுக்கும் பங்கிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.[4] வீதியன், சமுத்திரை ஆகியோரது மகனே, கோட்டையின் இறுதிச் சிங்கள மன்னனான தர்மபாலன் ஆவான்.[3] பின்பு மாயாதுன்னையின் மகளும் அக்காலத்தையை இராஜதந்திரிகளில் ஒருத்தியுமான சூரிய தேவியை அவன் மணந்துகொண்டான்.

வீதியனின் செயற்பாடுகளுக்கு அவனது ஆபத்துதவியான மாக்கோண ஆராய்ச்சியும், உப படைத்தளபதிகளான விஜயக்கோன் முதலி (பங்கை றாளை), வருசப்பெருமாள் ஆராய்ச்சி, வேலாயுத ஆராய்ச்சி ஆகியோரும் துணை இருந்தனர்.[5] போர்த்துக்கேயருக்கெதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வீதிய பண்டாரம், கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியோரையும் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களையும் ஒடுக்கி அழிக்கும் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். தன் நடவடிக்கைகளால் போர்த்துக்கேயரிடம் மட்டுமன்றி, சீதாவாக்கை, கோட்டை அரசவம்சத்தினரிடமும் அவப்பெயரை சம்பாதித்துக்கொண்ட அவன், தன் மகன் தர்மபாலன் கோட்டையின் அரசுக்கட்டிலில் ஏறியபோதும், பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டான். இதனால் வெறுப்புற்று, சிங்கள அரசின் ஆட்சியதிகாரச் சின்னமான புத்தரின் புனிதப்பல்லைக் கவர்ந்துகொண்டு, அவன் தன் துணைவர்களுடன் வடக்கே யாழ்ப்பாண அரசுக்குத் தப்பிச்சென்றான். அங்கு வெடிவிபத்தொன்றில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து நிகழ்ந்த கலவரமொன்றில் அவன் பரிதாபமாகக் கொல்லப்பட்டான்.[6]

வழிபாடு[தொகு]

வீதிய பண்டாரத்தின் பெருவீரத்தையும் அஞ்சாமையையும் மதித்து யாழ்ப்பாண அரசால், அவனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோயில் அமைக்கப்பட்டது. இன்று அது கல்வியங்காடு சிவபூதவராயர் ஆலயமாக விளங்குகின்றது.[7]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Veediya Bandara". Sunday Times. 26 July 2009. http://www.sundaytimes.lk/090726/FunDay/fundaytimes_1.html. பார்த்த நாள்: 1 January 2015. 
  2. "LANKALIBRARY FORUM". Lankalibrary.com. Archived from the original on 31 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Blaze, L. E. (1900). History of Ceylon. Colombo: Christian Literature Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1841-6. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015 – via கூகுள் புத்தகங்கள்.
  4. "සැකය නිසා ජීවිතයෙන් වන්දි ගෙවූ සමුද්‍රදේවි". Teclanka.com. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015.
  5. Panchamee Hewavissenti (3 February 2008). "Episodes of colonised history". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 7 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080207185848/http://www.sundayobserver.lk/2008/02/03/imp02.asp. பார்த்த நாள்: 1 January 2015. 
  6. "The end of Jaya Bandara". Sunday Times. 23 August 2009. http://www.sundaytimes.lk/090823/FunDay/fundaytimes_1.html. பார்த்த நாள்: 1 January 2015. 
  7. சி.க.சிற்றம்பலம் (1992). யாழ்ப்பாண இராச்சியம். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வெளியிட்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீதிய_பண்டாரம்&oldid=3572078" இலிருந்து மீள்விக்கப்பட்டது