வீடமைப்பு

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

வீடமைப்பு என்பது, மக்கள் குடியிருப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருப்பிடங்கள் அமைப்பதைக் குறிக்கும். தொழிற் புரட்சிக்கு முற்பட்ட காலங்களில், உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்கள் நாட்டுப்புறங்களிலேயே வாழ்ந்து வந்தனர். அக்காலங்களிலே வீடுகள் பெரும்பாலும் சூழலில் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டே அமைக்கப்பட்டன. அத்துடன், நிலக்கிழாரிய அமைப்பின் கீழ், வேளாண்மைத் தொழிலாளர்களுக்கான இருப்பிடங்களை வழங்குவது நிலக்கிழார்களின் பொறுப்பாகவும் இருந்தது. அக்காலத்துச் சாதாரண மக்கள் வசதியான வீடுகளில் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாதெனினும், வீடமைப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக முன்னிறுத்தப்படவில்லை. மக்கள் நாட்டுப்புறங்களிலே ஐதாக வாழ்ந்தார்கள். இதனால், வீடமைப்புக்கான நிலம், நீர் வசதி, கழிவகற்றல், போன்றவை பெரிய பிரச்சினைகளாகக் கருதப்படவில்லை.

வீடமைப்புப் பிரச்சினை[edit]

19 ஆம் நூற்றாண்டில், தொழிற்புரட்சி நகராக்கத்தை ஊக்குவித்ததுடன், பெருமளவு மக்கள் நாட்டுப்புறத்தில் இருந்து நகரங்களில் குவிந்தார்கள். இது இருப்பிடங்களுக்கான தேவைகளை அதிகரித்ததுடன், கட்டுப்படியாகக்கூடிய செலவில் இருப்பிடங்களை வழங்குவதில் பிரச்சினைகளையும் எதிர் நோக்கவேண்டியிருந்தது. தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் எதிர்கொள்ளப்பட்ட இப்பிரச்சினை பின்னர் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவியது. இன்று பொருளாதார அடிப்படையில் வளர்ந்த நாடுகளாக உள்ள ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் இப் பிரச்சினையைப் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பினும், வறிய வளர்ந்துவரும் நாடுகளில் இப்பிரச்சினையும் வளர்ந்து வருகிறது. இத்தகைய நாடுகளின் நகரப்பகுதிகளில், அளவுமீறிய குடியிருப்பு அடர்த்தி கொண்ட இடங்களில், பாழடைந்துவரும் பழைய கட்டிடங்களிலும், நகரத்தின் அழுக்கான பகுதிகளில், சேரிகளிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

தீர்வுக்கான அணுகுமுறைகள்[edit]

இருப்பிடங்கள் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்குவதற்கான தீர்வுகள் பலவகையாக உள்ளன. வசதி படைத்த, மற்றும் மத்திய தர மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்காக ஓரளவு நிதியைத் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கான வீடமைப்புப் பிரச்சினைகளைக் கையாளுவதுபோல் வறிய மக்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைக் கையாள முடியாது.[1] இவர்களுக்காக அரசுகளே பெருமளவில் நிதி ஒதுக்கி இருப்பிடங்களைக் கட்டிக்கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. இது வறிய நாடுகளைப் பொறுத்தவரை பெரும் பொருளாதாரச் சுமையாகும். இதானால் இந்நாடுகள் இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளின் நிதியுதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டியும் உள்ளது.

வசதி குறைந்தோருக்கான வீடமைப்பு[edit]

நிதி வசதி குறைந்தவர்களுக்கான இருப்பிடங்களைக் கட்டுவதற்குப் பலவிதமான திட்டங்கள் உள்ளன. அடிப்படையில் வீடமைப்புக்கான செலவுகளைக் குறைப்பதே இத்தகைய திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். இவற்றுட் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வசதியுள்ளோர், ஓரளவு வசதியுள்ளோருக்கான வீடமைப்பு[edit]

இவர்களுக்கான வீடமைப்பில் அரசு பெருமளவுக்குத் தலையிட வேண்டியதில்லை. எனினும் பல சந்தர்ப்பங்களில், அரசின் பங்களிப்புத் தேவைப்படுவது உண்டு. இவை பெரும்பாலும், நிலம் ஒதுக்குதல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல், சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க உதவுதல் போன்ற வகையில் அமைந்திருக்கும்.

மேற்கோள்கள்[edit]

  1. Roy, Ananya (2009). "Why India Cannot Plan Its Cities". Planning Theory 8 (1): 80.