சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரி என்பது சங்ககாலத்தில் முல்லை நிலத்தின் ஊரை குறிக்க வழங்கப்பட்ட பெயர். இன்று அப்பெயர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதியாக காட்டப்படுகிறது. குறிப்பாக இவை தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பான யுஎன் - ஹாபிட்டாட்டின் வரையறையின்படி தரக்குறைவான வீடுகள், ஏழ்மை, குடியிருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றைக் கொண்டிருக்கும் நகரப்பகுதி சேரியாகும். தமிழ்நாட்டில் சேரி வாழ் மக்கள் சாதிப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் சேரிகள்[தொகு]

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சென்னை போன்ற நகரங்களில் புதிதாக பல்லாயிரக் கணக்கில் நகரை நோக்கி வந்த மக்கள் அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களிலும் பக்கிங்காம் கால்வாய் ஓரத்திலும் ஓலைக்குடிசை அமைத்து வாழத் தொடங்கினார்கள். அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் குடிசை போட்டுக்கொண்டு வாழ்ந்ததோடல்லாமல், பல லட்சம் பேர் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் வாழத் தொடங்கினர். 1970-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த பத்ரிநாத் அறிக்கை 43 சதவீத மக்கள் சென்னையில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டது.[1] குடிசைவாழ் மக்கள் நலன் கருதி 1971-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு குடிசை மாற்றுச் சட்டம், 1971த்தின் படி, தமிழக அரசு சேரிகளை அடையாளம் கண்டு, அவைகளை சேரிகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, பின்னர் இந்த பகுதிகளில் மேம்படுத்த வேண்டும்.[2] சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சென்னையிள் 1,202 சேரிகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. 1985 ஆம் ஆண்டு பட்டியலில் மேலும் 17 சேரிகள் சேர்க்கப்பட்டன. இந்த சேரிகளில் அனைத்து கட்டிட குடியிருப்பு வீடுகள் அல்லது அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலம் அல்லது மூல இடத்தில் (in-situ) மேம்படுத்தல் மூலம் மேம்படுத்தப்பட்டன. ஆனால், 1985க்கு பிறகு ஒரு புதிய சேரி கூட அதிகாரப்பூர்வமாக சென்னையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், சென்னை பெருநகர பகுதியில் 444 அங்கீகரிக்கப்படாத சேரிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.[3]

நீதிமன்றத் தீர்ப்புகள்[தொகு]

  • 1983-ம் ஆண்டு, நடைபாதையில் வசிப்பவர்களை அரசாங்கம் பலவந்தமாக அகற்ற முன்வந்தபோது அவர்கள் சார்பில் பொதுநலன் கருதிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வழக்கில் நடைபாதைவாசிகளுக்கும் வாழ்வுரிமையுண்டு என்று வாதாடியதில் உச்ச நீதிமன்றம் 1984-ல் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பவர்களை அகற்ற அரசு முயலும்போது மாற்று இருப்பிடங்களை அம்மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.அத் தீர்ப்புக்குப் பின் , சென்னையில் வாழ்ந்த ஏழை மக்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகி நகரிலும் செம்மஞ்சேரியிலும் இடம்பெயர்க்கப்பட்டனர். சுயவேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானோரின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, அவர்களுடைய குழந்தைகளின் கல்வியுரிமையும் பறிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 43 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதே இம் மனித இடப்பெயர்ச்சியின் விளைவு.[1]
  • சாலையோரக் குடியிருப்புகள் போக்குவரத்தைத் தடைசெய்கின்றன .சிங்காரச் சென்னையின் அழகைச் சீர்குலைக்கின்றன எனக் கூறி அவற்றை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பிப்ரவரி 2005-ல் உத்தரவிட்டது. நடவடிக்கை எடுத்த விவரங்களைத் தொடர் அறிக்கைகளாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதையொட்டி பொக்லைன்களும் புல்டோசர்களும் வைத்து ஏழை மக்களின் குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி தகர்த்தெறிந்தனர். டிவிஷன் பெஞ்சின் உத்தரவு தவறென்றும், ஆக்கிரமிப்புகளானாலும் அவற்றைச் சட்ட முறைப்படியே அகற்ற வேண்டுமென்றும் நில ஆக்கிரமிப்புச் சட்டமானாலும் அல்லது பொது இடங்கள் (அதிகாரமின்றி குடியிருப்போரை அகற்றும்) சட்டமானாலும் முன்னறிவிப்பு கொடுத்து, காரணம் கேட்டு உரிய உத்தரவின்படியே அகற்றப்பட வேண்டுமென்று நீதிபதி பி.கே. மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட பின்னரே இவை நிறுத்தப்பட்டன.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரி&oldid=3842401" இருந்து மீள்விக்கப்பட்டது