உள்ளடக்கத்துக்குச் செல்

வி. கிருஷ்ணமூர்த்தி (விலங்கியல் மருத்துவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி (Dr. Vaidyanathan Krishnamurthy (ஆங்கில மொழியில்), 1929–2002) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவராவார். இவர் யானைகள் நிபுணராகவும், களப்பணியாளராகவும் மற்றும் யானைகளின் பாதுகாப்பில் அக்கறையுள்ளவராகவும் அறியப்படுகிறார். இவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை நடத்தினார். மேலும் உலகளவில் டாக்டர். கே, யானை மனிதர் மற்றும் யானை டாக்டர் என்று அறியப்படுகிறார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை இலண்டனிலிருந்து வெளிவரும் நேச்சர் இதழில் வெளியானது. இவர் சர்வதேச இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஒன்றியத்தில் உறுப்பினராவார். இவர் கவிஞர் பைரனின் கவிதைகளில் ஈடுபாடுடையவர்.

இளமைக் காலம்

[தொகு]

மருத்துவர். வி. கிருஷ்ணமூர்த்தி சென்னை மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1] தனது படிப்பை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இணை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார்.[2] பின்னர் 1953 ஆம் ஆண்டு தேக்கடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்கு 1957 வரை பணியாற்றினார்.

செயல்பாடுகள்

[தொகு]

மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முறைக்காக அறியப்பட்டார். இது எளிதான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாகும். தமிழ்நாட்டில் கோயில்களிலும் பிற இடங்களிலும் வளர்க்கப்படும் யானைகளின் வாழ்வு முறையை மேம்படுத்தினார். இவர்தான் முதன்முதலில் யானைகளுக்கு உடற்கூறாய்வு (post-mortem) செய்தவர். 1953 முதல் 1956 வரை 18 யானைகளுக்கு உடற்கூறாய்வு செய்தார். இதில் 12 யானைகள் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டவை ஆகும். இவர் தமிழக அரசிடம் கோவிலில் வளர்க்கப்படும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துமாறு பரிந்துரைத்தார். இவரது பரிந்துரைகளின் படி ஒவ்வொரு வருடமும் யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் கேரளாவிலும் 15 பொதுமக்களைக் கொன்ற மாக்னா எனும் யானையை பிடித்தார்.

கருத்தரங்கும் பயிற்சிப் பட்டறைகளும்

[தொகு]

மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளைப் பிடிப்பது தொடர்பாகப் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார். மேலும் இவர் யானைக் குட்டிகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட பாலை வழங்கும் நிபுணராகவும் அறியப்பட்டார். ஆசிய யானைகளைப் பிடிப்பது தொடர்பாக இவரது புத்தகம் முக்கிய ஆவணமாகும். இயான் டக்ளஸ் ஹேமில்ட்டன் (Iain Douglas Hamilton) இவரோடு முதுமலை தேசியப் பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டபோது கிருஷ்ணமூர்த்தியின் குரலுக்கு யானைகள் கட்டுப்படுவதைக் கண்டு, "நான் உங்களோடு பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.

ஓய்வுக்காலம்

[தொகு]

மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி பல வனவுயிர் பாதுகாப்பு மைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இவர் ஆசிய யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையம் (Asian Elephant Research and Conservation unit) என்ற அமைப்பின் மூத்த தொழிநுட்ப ஆலோசகராக (Senior Technical Consultant) இருந்தார்.

விருதுகள்

[தொகு]

தமிழக அரசு இவரை நீலகிரி மலையின் சிறப்புக் காப்பாளராக அறிவித்துக் கவுரவப்படுத்தியது. கேரளா அரசு 1989 ஆம் வருடம் இவரை கல்வியாளர் எனச் சான்றளித்தது (certificate of merit). மேலும் இவருக்கு 2000 ஆண்டு வனவுயிர் காப்பாளருக்கு வழங்கப்படும் வேணு மேனன் விருது வழங்கியது.

வாழ்க்கைக் கதை

[தொகு]

எழுத்தாளர் ஜெயமோகன் இவரது கதையை யானை டாக்டர் எனும் பெயரில் சிறுகதையாக எழுதியுள்ளார் இக்கதை அறம் (சிறுகதைத் தொகுதி) நூலில் இடம்பெற்றுள்ளது. வம்சி பதிப்பகம் தனிப்புத்தகமாகவும், கிழக்குப்பதிப்பகம் மின்னணுப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]