உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் மயாகோவ்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளாடிமிர் மயாகோவ்ஸ்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விளாதிமிர் மயக்கோவ்ஸ்கி
Vladimir Mayakovsky
1915 இல் மயக்கோவ்ஸ்கி
1915 இல் மயக்கோவ்ஸ்கி
பிறப்புவிளாதிமிர் விளதிமீரொவிச் மயக்கோவ்சுக்கி
19 சூலை [யூ.நா. 7 சூலை] 1893
பக்தாத்தி, குத்தயீசு ஆளுகை, உருசியப் பேரரசு
இறப்பு14 ஏப்ரல் 1930(1930-04-14) (அகவை 36)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம்
கல்வி நிலையம்கலை, தொழிற்துறை இசுத்தொகானொவ் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், மாஸ்கோ ஓவியப் பள்ளி
காலம்1912–1930

விளாதிமிர் விளாதிமிரோவிச் மயக்கோவ்ஸ்கி (Vladimir Vladimirovich Mayakovsky,[1] உருசியம்: Владимир Владимирович Маяковский, ஒ.பெ விளதிமீர் விளதிமீரொவிச் மயக்கோவ்ஸ்கி; 19 சூலை [யூ.நா. 7 சூலை] 1893 – 14 ஏப்ரல் 1930) உருசிய சோவியத் கவிஞர், நாடகாசிரியர், ஓவியர், நடிகர் ஆவார்.

1917 ஆம் ஆண்டுக்கு முன்னர் புரட்சிக் காலத்தின் போது, ​​மயோகாவ்ஸ்கி, ரஷ்ய புரட்சிக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராகப் புகழ் பெற்றார், எதிர்காலவாதிகளின் அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருந்தார். மயாகோவ்ஸ்கி அவரது வாழ்க்கையில் பல்வேறுபட்ட படைப்புகளை உருவாக்கியிருந்தார். அவர் கவிதைகள் எழுதினார், நாடகங்களை எழுதினார், இயக்கினார்; படங்களில் தோன்றினார், LEF என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். ரஷ்ய உள்நாட்டுப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை உருவாக்கினார். மயாகோவ்ஸ்கி கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்திற்கான கருத்தியல் ஆதரவைத் தொடர்ந்து நிரூபித்துள்ளதுடன், விளாதிமிர் லெனினின் மீது வலுவான பற்றுக் கொண்டிருந்தபோதும் சோவியத் அரசுடன் மயாகோவ்ஸ்கியின்  உறவு எப்போதும் சிக்கலானதாகவே இருந்தது.

மயாகோவ்ஸ்கி சோவியத் அரசின் கலாச்சாரத் தணிக்கை மற்றும் சோஷலிச யதார்த்தவாதத்தின் மீதான அரசின் கோட்பாட்டு வளர்ச்சியோடு தொடர்ந்து மோதலில் ஈடுபட்டார். தி பெட்பக் (1929) தி பேட்ஹவுஸ் (1929) உள்ளிட்ட அவருடைய கவிதைத் தொகுப்புகள் சோவியத் அரசு மற்றும் அதன் இலக்கிய நடைமுறைகளின் மீதான நையாண்டி விமர்சனமாக அமைந்திருந்தன.

1930இல் மயாகோவ்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார். இறந்த பின்னரும் கூட சோவியத் அரசுடன் அவரது உறவு மாறாமலேயே இருந்தது. அசோசியேடட் ஆஃப் பாட்டாளி வர்க்க எழுத்தாளர்கள் (RAPP) என்னும் ரஷ்ய அரசின் ஆதரவு இயக்கத்தால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் ஜோசப் ஸ்டாலின், மயாகோவ்ஸ்கியை, "சோவியத் நாட்டின் சகாப்தத்தில் மிகச் சிறந்த மற்றும் திறமையான கவிஞராக" அறிவித்தார்.

இளமைப்பருவம்

[தொகு]

விளாதிமிர் விளாதிமிர்விச் மயாகோவ்ஸ்கி அப்போதைய ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஜார்ஜியா மாநிலத்தில் பாக்தாதி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை கோன்ஸ்டாண்டினோவிச் மயாகோவ்ஸ்கி உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். எழுத்தாளர் கிரிகோரி டானிலிவ்ஸ்கியின் தொலைதூர உறவினர் ஆவார். விளாதிமிர் வால்டிமிராவின் தாய் அலெக்ஸாண்ட்ரா அலெக்ஷேவ்னா இல்லத்தரசி ஆவார்.

இந்த குடும்பம் தந்தை வழியில் ரஷ்ய மற்றும் ஜாபரோசியன் கொசாக் வம்சாவளியாகவும் தாய்வழியில் உக்ரேனிய வம்சமாகவும் இருந்தது. வீட்டில் ரஷ்ய மொழியைப் பேசினர். அவரது நண்பர்களிடத்திலும் பள்ளியிலும் மயகோவ்ஸ்கி ஜார்ஜியன் மொழியில் பேசினார். “நான் காகசஸில் பிறந்தேன். என் தந்தை ஒரு கொசாக் ஆவார். என் தாய் உக்ரேனியர். என்னுடைய தாய்மொழி ஜோர்ஜியா. எனவே மூன்று கலாச்சாரங்கள் எனக்குள் ஒற்றுமையாக இருக்கின்றன” என்று பிராக் பத்திரிகையான பிரேஜர் பிரஸ்ஸேவில் 1927இல் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

ஐந்து வயதிலேயே, தன் வயதுக்கு அதிகமான பாடல்களை மனப்பாடம் செய்து கூறும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவர் விரும்பிப்படித்த முதல் நூல் 'டான் குவிக் சாட்'. ‘ஒரு பக்கம் கவிதை. மற்றொரு பக்கம் புரட்சி. கவிதையும் புரட்சியும் என் உள்ளத்தில் பின்னிப்பிணைந்து விட்டான்’ என்று தனது இளமைக் குறிப்பில் இவர், எழுதியிருக்கிறார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே காலையில் கண் விழித்ததும், ‘செய்தித்தாள் வந்து விட்டதா?’ என்று தான் முதலில் கேட்பார்.

1902 ம் ஆண்டில் மயாகோவ்ஸ்கி குடாஸ் ஜிம்னாஸியத்தில் சேர்ந்தார், அங்கு 14 வயதான அவர், குடாசி நகரில் சோசலிச ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். தனது 16 ஆம் வயதிற்குள் மூன்று முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். அவருடைய செயல்களைப் பற்றி அவருடைய அம்மா அறிந்திருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. “எங்களைச் சுற்றியிருந்த உறவினர்கள் நான் என் மகனுக்கு மிக அதிகமான சுதந்திரத்தைக் கொடுப்பதாக எச்சரித்தனர். ஆனால் வளர்ந்து வந்த புதிய போக்குகளுக்கேற்ப அவன் வளர்ச்சி பெற்றதை நான் உணர்ந்தேன்” என்று அவருடைய தாய் பின்னாளில் நினைவுகூர்ந்தார். 1909 ஆம் ஆண்டில் இவர் பதினாறு வயதுக் கட்டிளங்காளை. நொவின்ஸ்கயா சிறைச் சாலையில் அடைபட்டு இருந்த 13 பெண் அரசியற் கைதிகள் தப்பிச் செல்வதற்கு இவர் துணை புரிந்தார். அக்கைதிகள் மாறுவேடத்தில் தப்பிச்செல்ல இவரின் தாயும் சகோதரிகளும் பள்ளிச் சீருடை தைத்துக் கொடுத்தனர். அதற்காக இவர் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் ‘மைனர்’ என்று விடுதலை செய்யப் பட்டார்.[2] தாள்களை அடுக்கிவைத்தபோது துருப்பிடித்த கம்பி குத்தியதால் குருதியில் விஷம் கலந்து 1906 அவருடைய தந்தை இறந்தபோது மயாகோவ்ஸ்கியின் தாய், தன் சொத்துகளையெல்லாம் விற்றுவிட்டு, இரண்டு மகள்களையும் மகனையும் அழைத்துக்கொண்டு மாஸ்கோவுக்குக் குடிபெயர்ந்தார்.

ஜூலை 1906இல் மயாகோவ்ஸ்கி மாஸ்கோவின் 5 வது கிளாசிக் உடற்பயிற்சிக் கல்வியின் நான்காம் ஃபாரத்தில் சேர்ந்தார். அங்கே மார்க்சிய இலக்கியத்தின் மீது ஆர்வம் பெற்றார். “மார்க்சின் முன்னுரையை விடவும் எனக்கு உயர்ந்த கலை இல்லை" என்று அவர் தனது சுயசரிதையில் நினைவு கூர்ந்தார்.

கல்லூரி வாழ்கை

[தொகு]

ஷெல்லிகல்லூரியில் மயாகோவ்ஸ்கி படித்துக் கொண்டிருந்தபோது ‘நாத்திகத்தின் அவசியம்’ (The Necessity of Atheism) கட்டுரை எழுதி வெளியிட்டதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். ஓவியக்கல்லூரியில் பயின்றபோது பழைய மரபுக்கலையை (Bourgeois Art) இகழ்ந்து பேசியதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார் மாயகோவ்ஸ்கி. கலைக்கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டபோது இவரின் தாய் நீ எப்படியாவது இந்தப்படிப்பை (Painting) முடித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். என்று வருத்தத்தோடு சொன்னார். அதற்கு இவர் சொன்னான்:

“ஓவியத் தொழில் செய்யத் தனியாக ஒரு கூடமும் (Studio) திரைச் சீலைகளும் (canvas) வண்ணங்களும் தூரிகைகளும் இன்னும் பலவும் தேவைப்படும். ஆனால் கவிதை எழுத பழைய நோட்டுப்புத்தகம் ஒன்று இருந்தால்போதும்; எந்த இடத்திலும் உட்கார்ந்து கொண்டு எழுதலாம். எனவே நான் கவிஞனாகப் போகிறேன்.” என்று இவர் சொன்னபடி மாகவிஞன் ஆகிவிட்டார்.[2]

இலக்கியக் கொள்கை

[தொகு]

ஆன்மீக உலகைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருப்பதைக் கைவிட்டு விட்டுக் கலையானது வெட்கப்படாமல் உலகியலைப் பற்றியும், மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் பேசவேண்டும் என்று வற்புறுத்தினார் மயாகோவ்ஸ்கி. கலை, மனித உணர்வுகளைப்பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர, கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்பது அவ்ன் கருத்து. மேலும், அது தனிப்பட்ட ஒரு மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடாக இருப்பதை விட, கொள்கைகளின் கூட்டுக் குரலாக ஒலிக்கும்போது அதன் பொருத்தம் புலப்படும் என்று சொன்னார்.

கலையைப்பற்றித் தான் வெளிப்படுத்திய கருத்துக்கள் மக்களிடையில் பரவ வேண்டுமென்று அவற்றை அறிக்கை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக மாயகோவ்ஸ்கி 1912-இல் ‘ஜனரஞ்சகத்தின் கன்னத்தில் ஓர் அறை’ (A slap In The Face of Public Taste) என்ற ஆத்திரமூட்டும் அறிக்கையொன்றை வெளியிட்டார். உருசியர்கள் மிகவும் போற்றி மதித்த இலக்கியவாதிகளான புஷ்கின், டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரைத் தமது புத்திலக்கியப் போர்க்கப்பலில் இருந்து தூக்கி எறியுமாறு இளந்தலை முறையினருக்கு அதில் ஆவேசக்கட்டளை இட்டிருந்தார். தனது புரட்சிக் கொள்கையை உள்ளடக்கி அதற்கு ‘முன்னோக்கியம்’ (Futurism) என்று பெயரும் கொடுத்தார். சமுதாயத்தின் அடிமட்டச் சூழ்நிலையிலிருந்து இக்கலைவடிவம் உருப்பெற்றாலும், எந்த உலகை நோக்கி இது பேசுகிறதோ அந்த உலகை அடியோடு மாற்றியமைக்கும் உயிர்ப் பேராற்றலாக விளங்குவதாக அவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.[2]

இலக்கியப் பணிகள்

[தொகு]

உருசியப் புரட்சிக்கு முன்பு மாஸ்கோ மன்றங்களில் மயாகோவ்ஸ்கி தனது கவிதைகளைப் படித்தபோது, இளைஞர் பட்டாளம் உணர்ச்சி வசப்பட்டு, மெய் மறந்து ஆரவாரம் செய்வது வழக்கம். ஆனால் அதே சமயத்தில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு இவர் கவிதைக் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன என்று புரியாது; இவர் கருத்துக்கள் தீவிரமானவையா, நகைச்சுவையானவையா என்று புரியாமல் விழிப்பர். புரியாத இவர் குறியீட்டுக் கவிதைகள் பற்றி இவர் தாய் ஒரு முறை கேட்டபோது. மாயகோவ்ஸ்கி கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்

“எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக எழுதிவிட்டால் நான் மாஸ்கோவில் இருக்க மாட்டேன். சைபீரியாவில் கண்காணாத இடத்துக்கு நாடு கடத்தப்படுவேன், காவல் துறையின் கழுகுக் கண்கள் எப்போதும் என்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் எப்படி வெளிப்படையாகப் பாட முடியும்? அடக்குமுறை ஒழிக! ...”[2]

புரட்சிக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் பல படைப்புகளை மேற்கொண்டார்.

காதல்கள்

[தொகு]

மாயகோவ்ஸ்கியின் ‘முதற் காதல்’ இவரது 22ஆம் வயதில் ஒடிசா நகரில் மலர்ந்தது. மேரியா டெனிசோவா என்ற பதினெட்டு வயது அழகியை இவர் சந்தித்துக் காதல் கொண்டார். அவரைச் சந்தித்து, அவரின் படத்தை வரைந்ததோடு குறிப்பெழுத்தில் (Cryptogram) தன் காதலையும் வெளிப்படுத்தினார். ஆனால் இக்காதல் ஒரு தலைக்காதலாக முடிந்தது. இக்காதல் தோல்வியை இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தோல்வி, 'கால் செராய் அணிந்த மேகம்' (The cloudin ants) என்ற தலைப்பில் ஒரு கவிதையாக உருப்பெற்றது.[2]

பெரும்பாலும் இவர் ஒரு பெண்ணை முழு மூச்சோடு காதலிக்கத் தொடங்கினால் உடனே அவளுக்குத் திருமணம் வேறொரு செல்வச் சீமானோடு முடிந்துவிடுவது வழக்கம். மேரியாவுக்கு அடுத்தாற்போல் எல்சா என்னும் பெண்ணைக் காதலித்தார், மாயகோவ்ஸ்கி, அவன் லூயி அரகான் என்ற செல்வச்சீமானை மணந்து கொண்டாள். பின்னர் அவளுடைய தமக்கை லில்லி என்பவளைக் காதலித்தான். அவளும் ஆசிப்பிரிக் என்ற சீமானை மணந்து கொண்டாள். எனவே திருமணமான லில்லிபிரிக்கையே இவர் தொடர்ந்து காதலித்தார். இவர்கள் காதல் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகப் பல முறை மிரட்டியிருக்கிறார் மாயகோவ்ஸ்கி.[2]

இவரின் காதல் தோல்வியினால் ஏற்பட்ட தாக்கம் இவரின் இலக்கியத்தைப் பெரிதும் பாதித்தது. மாயகோவஸ்கியின் காதல் தோல்வி பெற்றெடுத்த காற்செராய் அணிந்த மேகம் (Cloud in Pants) இது (it) , அன்பு லில்லிக்குப் பதில் கடிதம் என்ற கவிதைகள் மூன்றும் உணர்ச்சி மிக்க காதற் கவிதைகள்.[2]

தற்கொலையும் காரணங்களும்

[தொகு]

மாயகோவ்ஸ்கியின் கடைசி காதலி ‘வெரோனிகா போலன்ஸ் கயா’ என்ற மாஸ்கோ நடிகை. அவளும் திருமணமானவள். அவளுடைய கணவன் மிகெய்ல்யான் ஷின் ஒரு நடிகர்; நாடக இயக்குநர், மாயகோவ்ஸ்கி வெரோனிகா கள்ளக் காதல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள் மாய கோவ்ஸ்கி வெரோனிகாவை அவள் கணவனிடமிருந்து மண விலக்குப் பெற்றுக் கொண்டு தன்னோடு நிலையாகத் தங்கி விடும்படி வற்புறுத்தினார். அப்போது எழுந்த கருத்து வேறுபாட்டில் உள்ளம் உடைந்த மாயகோவ்ஸ்கி 14- 4- 1930. அன்று துப்பாக்கியைத் தன் இதயத்துக்கு நேராக வைத்துச் சுட்டுக் கொண்டு இறந்தார். இந்த மரணம் குறித்து பிற்காலத்தில் ‘வெரோனிகா போலன்ஸ் கயா’ எழுதிய கட்டுரையில் “விளாடிமிர் விளாடிமிரோவிச்சின் சோக முடிவுக்கு எங்கள் காதல் விவகாரமும் கருத்து வேறுபாடுகளும் அடிப்படைக் காரணம் அல்ல; வேறுபல காரணங்களும் இருந்தன. அவற்றை என்னால் ஊகிக்க முடியும்.” என்று குறிப்பிட்டார்.[2]

மேலும் அவர் எழுதிய கட்டுரையில் “1930-ஆம் ஆண்டு இலக்கியத்துறையைப் பொறுத்த வரையில் மாயகோவ்ஸ்கிக்கு ஒரு தோல்வியாக முடிந்தது. ‘குரலின் உச்சி’யில் (At the Top of One’s voice) என்ற அவருடைய கவிதை வெற்றிப் படைப்பு என்றாலும், யாரிடமிருந்து அதற்குப் பாராட்டுக்கள் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அவர்களிடமிருந்து எந்தப் பாராட்டும் வரவில்லை. நிறைந்த எதிர்பார்ப்போடு எழுதப்பட்ட ‘குளியல் அறை’ (The Bath-House) என்ற நாடகமும் தோல்வியடைந்தது. மாஸ்கோ இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் அந்த நாடகத்தை அலட்சியப் படுத்தியதோடு, அதைப் பாராட்டியோ, எதிர்த்தோ எதுவும் எழுதவில்லை. இது விளாடிமிரோவிச்சின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. “அக்டோபர் புரட்சியின் பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, புரட்சியின் பிரச்சார இயக்கத் தலைவர் என்ற முறையில் லெனினைப் பற்றியும், சோவியத் நாட்டைப் பற்றியும் பாராட்டிக் கவிதைகள் எழுதியிருந்தாலும், சோவியத் அரசின் செயல் திட்டங்களும், சாதனைகளும் விளாடிமிரோவிச்சிற்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தன. அவருடைய கற்பனை வரண்டு விட்டது என்று சொல்லி அவரது சோவியத் பிரச்சார எழுத்துக்களை மாஸ்கோ இலக்கிய வாதிகள் கேலிசெய்தனர்.”

“அவரது இலக்கிய வாழ்க்கையில் இருபதாவது ஆண்டு விழாவை நண்பர்கள் கொண்டாடியபோது, சோவியத் அரசாங்கம் எந்தவிதமான ஆதரவோ, பாராட்டோ வழங்கவிலை.”

“ஓயாத உழைப்பால் அவர் உடல் நிலை சீர்கெட்டிருந்தது. அடிக்கடி மூட்டு வலியாலும், ஃப்ளு காய்ச்சலாலும் அவதிப்பட்டார். இவ்வாறு பலவித இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆட்பட்டிருந்த விளாடிமிரோவிச்சிற்கு என் உறவு ஆறுதலாக இருந்தது. அலை கடலில் அவதிப்பட்ட அவருக்கு நான் ஒரு துரும்பாகக் கிடைத்தேன். நானும் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டபோது, சாவை நோக்கி அவர் விரைந்தார்” என்று குறிப்பிடுள்ளார்.[2]

இறப்புக்குப் பிந்தைய அங்கிகாரம்

[தொகு]

மாயகோவ்ஸ்கி உயிரோடு வாழ்ந்த காலத்தில் சோவியத் அரசாங்கமும் அதன் தலைவர்களும் இவரைப் புரட்சிக் கவிஞனாக அங்கிகரிக்கவில்லை. ஐரோப்பிய இலக்கிய வாதிகளும் அக்காலத்திய ‘புஷ்கினாக’ இவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அக்மடோவா, பாஸ்டர்நாக், மேண்டெல்ஸ்டாம், ஸ்வெட்டேவா ஆகியோருக்கு அடுத்த நிலையிலேயே இவருக்கு இடம் ஒதுக்கினர். இவரது இறப்புக்குப் பிந்தைய காலமான 1935-இல் பொதுவுடைமைக் கட்சியின் வேண்டுகோளின்படி ஸ்டாலின் மனந்திறந்து மாய கோல்ஸ்கியைப் பாராட்டி அறிக்கை விட்டார். அதன் பிறகே மாஸ்கோ இலக்கிய வாதிகள் மாயகோவ்ஸ்கியை ஒப்பற்ற புரட்சிக் கவிஞனாக ஏற்றுக் கொண்டனர்; இவரது கவிதைகளும் எந்த வித விமர்சனமும் இல்லாமல் மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன. சோவியத் அரசாங்கம் புரட்சிக் கவிஞனாக இவரை அங்கீகரித்ததும், இவ்வளவு நாளாகப் போற்றிப்பாராட்டிய ஐரோப்பிய இலக்கிய வாதிகள்-இவர் சார்ந்திருந்த கட்சியின் காரணமாக- ஒதுக்கத் தலைப்பட்டனர். [2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mayakovsky". Random House Webster's Unabridged Dictionary.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 90–100. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_மயாகோவ்ஸ்கி&oldid=2988180" இலிருந்து மீள்விக்கப்பட்டது