வில்லாந்திரா ஏரிப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வில்லாந்திரா ஏரிப்பகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Willandra Lakes.png
வில்லாந்திரா ஏரித் தொகுதியின் ஒரு பகுதி. 1) முலுருலு ஏரி, 2) வில்லாந்திராச் சிறுகுடா, 3) கார்ண்புங் ஏரி, 4) லெயாகுர் ஏரி, 5) முங்கோ எரி, 6) அரும்போ ஏரி, 7) சிப்னால்வூட் ஏரிகள்.

வகைகலப்பு
ஒப்பளவுiii, viii
உசாத்துணை167
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1981 (5வது தொடர்)
வில்லாந்திரா ஏரிப் பகுதி is located in ஆத்திரேலியா
வில்லாந்திரா ஏரிப் பகுதி
ஆசுத்திரேலியாக் கண்டத்தில் வில்லாந்திரா ஏரிப்பகுதியின் அமைவிடம்

வில்லாந்திரா ஏரிப் பகுதி என்பது, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தொலை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.[1] வில்லாந்திரா ஏரிப் பகுதியே ஆசுத்திரேலியப் பழங்குடிகளான முதி முதி, நியியாம்பர், பர்க்கின்சி ஆகியோரின் மரபுவழிச் சந்திப்பு இடம். 240,000 எக்டேர் (590,000 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி, 1981ல் இடம்பெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 5ம் அமர்வில் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[2]

இப்பகுதி, இயற்கை அம்சங்களையும், பண்டைய மனித நாகரிகம் சார்ந்த தனித்துவமான எடுத்துக்காட்டுக்களைக் கொண்ட முக்கியமான பண்பாட்டு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. உலகின் மிகப்பழைய சுடலையும் (பிணம் எரியூட்டும் இடம்) இப்பகுதியிலேயே உள்ளது. இப்பகுதியின் ஒரு சிறிய பிரிவு முங்கோ தேசியப் பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவ்விடத்துக்கான உலக பாரம்பரியத் தகுதி 1981ல் கிடைத்தது.[2] 21 மே 2007ல் 2003ன் சூழல் மற்றும் மரபுரிமைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் கீழ்,[3] ஆசுத்திரேலிய தேசிய மரபுரிமைப் பட்டியலில் சேர்த்து அரசிதழ் அறிவிப்பு[4] வெளியானது.

சிறப்பு[தொகு]

வில்லாந்திரா ஏரிப் பகுதியின் சிறப்புக் குறித்துப் பல்வேறு தகவல்கள், உலக மரபுரிமைப் பட்டியலின் பொறிப்பில் தரப்பட்டுள்ளன.

குறைந்த உயரம் கொண்ட, பனியாற்றுத் தோற்றம் இல்லாத, பிளீசுத்தோசீன் நிலத்தோற்றப் பதிவுகளைக் கொண்ட வில்லாந்திரா ஏரிப் பகுதி, தனித்துவமான படிவுகள், நில உருவாக்கம், மண்கள் ஆகியவற்றோடு கூடிய ஏஞ்சு ஏரித் தொகுதியாக உள்ளது. அத்துடன், பிந்திய பிளிசுத்தோசீன், சிறப்பாக இறுதிப் 100,000 ஆண்டுகளுக்குரிய பனியூழி-இடைப்பனியூழிக் காலநிலை ஏற்றத்தாழ்வுகள் குறித்த தனித்துவமான பதிவுகளையும் இது கொண்டுள்ளது. 18,500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஏரிச் சூழல்மண்டலமாக இல்லாமல் போய்விட்ட வில்லேந்திரா ஏரிகள், மனிதர்கள் தற்கால வடிவத்துக்குக் கூர்ப்படைந்த பிளீசுத்தோசீன் காலத்தின் உயிரினங்களைப் பதிவு செய்வதற்கான நிலைமைகளைக் கொண்டுள்ளன.

இங்குள்ள சிதைவுறாப் பாறை அடுக்குச் சூழல், ஓமோ சப்பியன்சு சப்பியன்சுகளின் பொருளாதார வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான சிறப்பான சான்றுகளைத் தருகின்றன. இங்கு காணப்படும் அடுப்புகள், கற்கருவிகள், உயிரின ஓட்டுக் கழிவுகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் உள்ளூர் வழங்களுக்கேற்ற தகவமைவு, மாறும் இயற்கைச் சூழலுக்கும் மனிதப் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் போன்றவற்றையும் காட்டுகின்றன. வயிற்றில் பை கொண்ட பெரிய பாலூட்டி இனங்களுக்கு உரிய சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பல புதைபடிவங்களும் இங்கே கிடைத்துள்ளன.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே ஓமோ சப்பியன்சு சப்பியன்சு குறித்த சில மிகப்பழைய சான்றுகள் வில்லாந்திராவில் உள்ளன. 42,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் ஆசுத்திரேலியாவரை பரவியிருந்ததற்கான சான்றுகளும் இங்கே கிடைக்கின்றன. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதும் உலகிலேயே மிகவும் பழமையானதுமான, சடங்கு முறையில் பிணங்கள் எரியூட்டப்பட்ட சுடலை இருந்ததற்கான சான்றுகளும் இவ்விடத்தில் கிடைத்துள்ளன. இற்றைக்குப் 18,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிக்கலான தாவர உணவு சேகரிப்பு முறைகள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன. காட்டுப் புல் விதைகளில் இருந்து மாவு செய்வதற்கான அரைக்கும் கற்கள், மத்திய கிழக்குப் பகுதியில் இவை பயன்பட்ட அதே காலத்தில் இங்கும் பயன்பட்டமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]