விக்டர் மேயர் உபகரணம்
விக்டர் மேயர் உபகரணம் (Victor Meyer apparatus) என்பது எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மத்தின் மூலக்கூறு நிறையைக் கண்டறியும் ஒரு கருவி ஆகும். விக்டர் மேயர் என்பவர் இக்கருவியை உருவாக்கினார். இந்த முறையில் எந்தச் சேர்மத்தின் மூலக்கூறு நிறையைக் காண வேண்டுமோ அச்சேர்மம் விக்டர் மேயர் குழாயில் சூடுபடுத்தப்பட்டு அதன் ஆவி வடிவமாக மாற்றப்படுகிறது. இவ்வாறு உருவான சேர்மத்தின் ஆவி அதன் கன அளவுக்குச் சமமான காற்றை இடப்பெயர்ச்சி செய்கிறது. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட காற்றின் கன அளவு சோதனைச் சாலையில் சோதனை முறையிலான வெப்பம் மற்றும் அழுத்தத்தில் கண்டறியப்படுகிறது. பின்னர், அக்கன அளவைத் திட்ட வெப்ப அழுத்த நிலையில் கிடைக்கும் கன அளவாகக் கணக்கிட வேண்டும். கண்டறியப்பட்ட தரவுகளில் இருந்து திட்ட வெப்ப அழுத்த நிலையில் 2.24 * 10−2மீ3 ஆவியின் நிறையைக் கணக்கிட வேண்டும். இந்நிறையே சேர்மத்தின் மூலக்கூறு நிறையாகும்.
அமைப்பு
[தொகு]விக்டர் மேயர் கருவி, கீழ்பாகத்தில் சற்று பருமனாக உள்ள ஒரு விக்டர் மேயர் குழாயைக் கொண்டிருக்கும். இக்குழாய் ஒரு வெளிக் கலத்தின் உட்புறமாக வைக்கப்பட்டிருக்கும். இக்குழாயில் காற்றுப் புகாமல் இருக்க அதன் மேற்புறம் ஒரு தக்கையால் மூடப்படும். இக்குழாயின் மேல்பாகத்தில் பக்க போக்குக் குழாய் இணைக்கும் வகையில் அமைப்பு உள்ளது. இப்போக்குக் குழாயின் மறுமுனை ஒரு நீர்த் தொட்டியில் உள்ள துளை மேடைக்கு அடியில் சேருமாறு அமைக்கப்படுகிறது. மூலக்கூறு நிறை கண்டுபிடிக்க வேண்டிய சேர்மத்தைக் காட்டிலும் சுமார் 30K அளவிற்காவது அதிக கொதி நிலை உடைய திரவம் வெளிக்கலனில் நிரப்பப்பட வேண்டும். விக்டர் மேயர் உபகரணத்தின் அடிப்பகுதி உடையாமல் இருக்க அதன் அடிபாகத்தில் கம்பளி அல்லது கல்நார்த் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும்.
செயல்முறை
[தொகு]முதலில் வெளிக்கலனில் உள்ள திரவம் கொதிக்க வைக்கப்படுகிறது. விக்டர் மேயர் குழாயில் உள்ள காற்று வெப்பத்தால் விரிவடையும். பின்னர் மேல்புறமுள்ள போக்கு குழாயின் வழியாகச் சென்று நீரின் மேற்பரப்பில் குமிழிகளாக வெளியேறும்.குமிழிகள் தோன்றுவது நின்றவுடன் நீர் நிறைந்த அளவுசாடி ஒன்று துளைமேடை மீது தலை கீழாக வைக்கப்பட வேண்டும். இப்பொழுது துல்லியமாக நிறை தெரிந்த சேர்மம் எடுத்துக் கொள்ளப்பட்ட குப்பியை நன்கு வெப்பப்படுத்தப்பட்ட விக்டர் மேயர் குழாயினுள் போடவேண்டும். குழாயை உடனடியாக தக்கை கொண்டு நன்றாக மூடிவிட வேண்டும்.குப்பியில் உள்ள சேர்மம படிப்படியாக ஆவியாக மாற்றம் அடைகிறது.பின்னர் ஆவிக்குச் சமமான கன அளவுள்ள காற்று இடப்பெயர்ச்சி அடைந்து அளவிடப்பட்ட சாடியினுள் நீரின் மேல் சேகரிக்கப்படுகிறது.காற்றுக் குமிழ்கள் தோன்றுவது நின்றவுடன் சாடியின் திறந்த முனையை மூடியபடி வெளியே எடுத்து மற்றொரு நீர்த்தொட்டியில் வைக்க வேண்டும்.சாடியில் உள்ள நீர்மட்டமும் தொட்டியில் உள்ள நீர்மட்டமும் சமமாகும்படி சரி செய்தவுடன் அளவு சாடியில் உள்ள காற்றின் அளவைக் குறித்துக் கொள்ள வேண்டும்.அளவு சாடியில் உள்ள ஈரமான காற்றின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்திற்கு சமமாகும்.அறையின் வெப்ப நிலையும் வளிமண்டல அழுத்தமும் குறித்துக் கொள்ளப்பட்டு கணக்கீடுகளின் மூலம் எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மத்தின் மூலக்கூறு நிறை கணக்கிடப்படுகிறது.
கணக்கிடுதல்
[தொகு]அறையின் வெப்ப நிலை = T1K
திட்ட வெப்ப நிலை = 273K
வளிமண்டல அழுத்தம் = P0 , P0 = 1.013 * 105Nm−2
வெப்ப நிலையில் நீராவியின் அழுத்தம் = P
உலர் ஆவியின் அழுத்தம் = P1
அழுத்தத்தில் வெப்பநிலையில் சாடியிலுள்ள வாயுவின் அழுத்தம் = ( P - p1 ) = P1
ஆய்வக மதிப்புகள் | திட்ட வெப்பநிலை மதிப்புகள் |
---|---|
கன அளவு = V1m3 | கன அளவு = V0 = ? |
அழுத்தம் = P1 = (P - p) Nm−2 | அழுத்தம் = P0 = 1.013 * 105Nm−2 |
வெப்பநிலை = T1K | வெப்ப நிலை = T0 = 273K |
P0 V0 / T0 = P1 V1 /T1
திட்ட வெப்ப நிலையில் ஆவியின் கன அளவு V0 = P1 V1 / T1 X T0 / P0
திட்ட வெப்ப நிலையில் V0m3ஆவியின் நிறை = W கிராம்
திட்ட வெப்ப நிலையில் 2.24 X 10−2m3 ஆவியின் நிறை = 2.24 X 10−2 X W / V0
2 X ஆவி அடர்த்தி என்பதே நாம் கண்டறிய வேண்டிய மூலக்கூறு நிறை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- Prescott (1965). Intermediate Chemistry Inorganic and Physical.
- General Chemistry-John Russel by McGraw Hill International Editions 3rd edition
- University General Chemistry-An Introduction to Chemical Science edited by CNR Rao by McMillan Indian Ltd.
- Inorganic Chemistry, by P.L.Soni
- Tamil Nadu State Board class 11 textbook vol.1 page-31.