விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 10, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன.செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.


மூச்சுத்தடை நோய் அல்லது ஈழை நோய் (ஆஸ்த்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட அழற்சியினால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கிய காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால், காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு, காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட சுருக்கம், இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் , நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும், பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான, குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.