விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 01, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு.சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.இத்தொழில்நுட்பம் உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றது.கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM))(படம்) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.


அறிஞர் அண்ணா என்று பரவலாக அறியப்பட்ட காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை தமிழ் நாடு மாநிலத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பணியாற்றியவர். காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் செப்டம்பர் 15ஆம் நாள் 1909ஆம் ஆண்டு பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழக அரசியலில் காங்கிரசல்லாத ஆட்சியின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். 1949ஆம் ஆண்டு தி. மு. கவினை நிறுவியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி,1969ஆம் ஆண்டு மரணமடைந்தார்.