விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 18, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். பெண்களில் மலட்டுத்தன்மைக்கு பலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாக இருக்கும் வேளையில், கருக்கட்டல் செயல்முறை கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாக கருக்கட்டல் நிகழ்த்தப்படும். இம்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதனால், விலை குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். இம்முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும்..


பொபிலி அரசர் (1901–1978) 1930களில் நீதிக்கட்சியின் தலைவராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் இருந்தவர். பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், ஆந்திர சடடமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள பொபிலி அரசகுலத்தில் பிறந்தார். இவரது தந்தை பொபிலியின் ஜமீனாக இருந்தவர். 1921-ல் தந்தை மறைந்த பின் 1921 இல் பொபிலியின் பதின்மூன்றாவது அரசராக அறிவிக்கப்பட்டார். 1930 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீதிக்கட்சித் தலைவரும், சென்னை முதல்வருமான முனுசாமி நாயுடுக்கு எதிராக கட்சிக்குள் போர்க் கொடி தூக்கினார். அமைச்சர் பதவி கிட்டாத ஜமீந்தார்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 1932 அக்டோபரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் 5 இல் சென்னை மாகாண முதல்வரானார். 1937 வரை நீடித்த இவரது ஆட்சிக் காலத்தில், நீதிக்கட்சி உட்கட்சிப் பூசல்களால் நலிந்து மக்களின் ஆதரவையும் இழந்து அக்காலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வியடைந்தது. மேலும்...