விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 11, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பம்பரம் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். உலகின் பல பகுதிகளிலும் இது விளையாடப்படுகிறது. பம்பரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம் மற்றும் கந்தபுராணம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பரம் தயாரித்தல் என்பது ஒரு கலையாகும். பம்பரம் பொதுவாக கொய்யா மரக்கட்டை அல்லது கருவேல மரக்கடையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மரக்கட்டைகளை முதலில் செதுக்க வேண்டும். பின்பு அதனுடன் ஆணியை இணைக்க வேண்டும். இதைச் சுழற்ற ஒரு மீட்டர் நீளமுள்ள கயிறு பயன்படுத்தப்படுகிறது. பம்பரம் மற்றும் கயிறை பயன்படுத்தி விளையாட்டைத் துவங்க வேண்டும். பம்பர விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் 1950-ஆம் ஆண்டு வரையில் பரவலாக விளையாடப்பட்டது. இது ஒரு கைத்திற விளையாட்டு. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என 3 வகை உண்டு. தரையில் அல்லது உள்ளங்கையில் பம்பரத்தை யார் அதிக நேரம் சுழலச் செய்கிறார்கள் என்று பார்த்துப் பழம் சொல்வது ஓயாக்கட்டை. பட்டவனின் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வட்டத்திலிருந்து அகற்றி ஒரு எல்லை-வரைச் சுற்றிவிடும் பம்பரத்தாலேயே அகற்றிக்கொண்டு சென்று, பட்டவன் பம்பரத்தை உடைத்துவிடுவது உடைத்த-கட்டை. வட்டத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வெளியேற்றுவது பம்பரக்குத்து. மேலும்..


ஜானகி ஆதி நாகப்பன் (பிறப்பு: 1925) மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயாவின் விடுதலைக்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா-இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீரராகக் களம் கண்டவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண். 1946 இல் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரசை உருவாக்கினார். ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980-1986 வரை ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்தான். மேலும்...