விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 27, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. சு. பிள்ளை (1888-1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறிய இவர். 1908ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் கலை உறுப்பினர் தேர்வு மற்றும் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகவும் வெற்றி பெற்றார். வரலாறு, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், சட்ட முதுவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சைவக்குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார். மேலும்....


தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தமிழ்கத்தில் கற்கால ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் இராபர்ட் புருசு ஃபூட் ஆவார். இதுவரை செய்யப்பட்ட அகழாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்காலக்கட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பழங்கற்காலம் (கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 10,000 வரை) இருந்த போது மானிடர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது. இடைக்கற்காலத்திலேயே தமிழக மாந்தர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். கற்காலத்தின் கடைசிக்கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு.2000 வரை நிலவியது. அதன் பிறகு பெருங்கற்சமூகம், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம் தமிழகத்தில் வழக்கிழந்தது. தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போது என இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. அதன் காரணம்... மேலும்....