விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 1, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, 'மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்' (சனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி என்பவரின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். மேலும்...


இலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள் என எட்டுக் களங்கள் யுனிசெப் நிறுவனத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை முறையே அனுராதபுரம் புனித நகர் (1982), பொலன்னறுவை புராதன நகர் (1982), சிகிரியா (1982), சிங்கராஜக் காடு (1988), கண்டி புனித நகர் (1988), காலி பழைய நகரும் அதன் தற்காப்பு கோட்டை கொத்தளங்களும் (1988), தம்புள்ளை பொற்கோவில் (1991) மற்றும் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010) ஆகும். அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு புராதன நகரமாகும். அனுராதபுரம் நாட்டின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகர்களில் ஒன்றாக கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை விளங்கியதாக நம்பப்படுகின்றது. இங்கு சிங்கள, தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். தென்னிந்தியப் படையெடுப்புகள் காரணமாக இதன் தலைநகர் என்ற நிலை மாற்றப்பட்டது. உலகிலுள்ள முக்கிய தொல்பொருள் களங்களில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வுகள் இதன் வரலாற்றுத் தொடர்பு கி.மு. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என குறிப்பிடுகின்றன. மேலும்...