விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 11, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் துருவம் என்பது, புவியின் தென் அரைக்கோளத்தில் உள்ள, அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இது புவியின் தென் அரைக்கோளத்தின் தென் கோடியில் வட துருவத்துக்கு நேர் எதிரே, அண்டார்ட்டிக்காக் கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐக்கிய அமெரிக்கா, அமுண்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையம் எனும் நிரந்தரமான நிலையம் ஒன்றை 1956 இல் அமைத்தது. அன்று முதல் இந் நிலையத்தில் பணியாட்கள் நிரந்தரமாக இங்கே பணி புரிகின்றனர். பெருங்கடற்பகுதியாக உள்ள வட துருவத்தைப் போலன்றி தென் துருவம் ஓர் மலைப்பாங்கான கண்டப்பகுதியாகும். மேலும் மிகவும் உயரத்தில் சூறைக்காற்று நிலவும் இடத்தில் அமைந்துள்ளது. மனிதர்கள் வாழும் பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. அண்மையிலுள்ள கடற்பகுதியிலிருந்து நில ஆய்வாளர்கள் ஆயிரம் மைல்களுக்கும் மேலாக பனிபடர்ந்த நிலப்பகுதியில் மலையேற்றங்கள் நடத்தி பீடபூமியை அடைய வேண்டும். 1820இல், பல புவி ஆய்வாளர்கள் முதன்முதலாக அண்டார்டிக்கா கண்டத்தை கண்டறிந்தனர். இவர்களில் முதலாவதாக உருசியாவைச் சேர்ந்த ஃபாடி பெல்லிங்சாசென்னும் மிக்கைல் லாசரெவ்வும் முன்நடத்திய குழுவினர் இருந்தனர். ஓராண்டு கழித்து அமெரிக்கரான ஜான் டேவிஸ் இக்கண்டத்தில் காலடி பதித்த முதலாமவராக சாதனை படைத்தார். மேலும்...


எலன் கெல்லர் (1880-1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். 1887 இல் எலனின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். சிறிது சிறிதாக எழுதக் கற்றுக் கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட எலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு எலனின் படைப்புகளில் இது இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். மேலும்...