வானூர்தி செல்வழிக்கடத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைய ஆப்பிரிக்க வானூர்தி நிலையமொன்றில் பிரான்சியத்திலும் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை. சூன் 2012

வானூர்தி செல்வழிக் கடத்தல் (Aircraft hijacking) அல்லது வான் திருட்டு அல்லது வானூர்தி திருட்டு என்பது வானூர்தி ஒன்றை சட்டத்திற்குப் புறம்பாக தனிநபரோ குழுவோ கைப்பற்றுவதாகும்.[1] பெரும்பாலான நேரங்களில், வானூர்தி ஓட்டுநர், திட்டமிடப்பட்ட வான்வழியிலிருந்து விலகி, கைப்பற்றுகை செய்தக் குழுவினரின் ஆணைக்கேற்ப வானூர்தியை செலுத்தக் கட்டாயப்படுத்தப்படுகின்றார். இருப்பினும் சில நேரங்களில் கைப்பற்றுகையாளர்களே வானூர்தியைச் செலுத்துவதும் உண்டு; செப்டம்பர் 11, 2011 தாக்குதல்களின் போது இவ்வாறே நடந்தது. குறைந்தது மூன்று நிகழ்வுகளில்[2] அலுவல்முறை ஓட்டுநரோ துணை ஓட்டுநரோ கைப்பற்றியுள்ளனர்.[3][4][5][6]

நிலத்திலோ கடலிலோ நிகழும் கைப்பற்றுகைகளில் திருட்டுக்காகவோ கொள்ளையடிக்கவோ கலன் கைப்பற்றப்படும்; ஆனால் வானூர்தி கடத்தல்களில் பயணிகளை பிணையாக வைத்துக்கொண்டு பெருந்தொகை கோருவதும் அரசுகளிடமிருந்து அரசியல் அல்லது நிர்வாகச் சலுகைகளைக் கோருவதும் வழமையாயுள்ளது. வானூர்திக் கடத்தல்களின் இலக்கு பலவாறாக உள்ளன: குறிப்பிட்ட சிறைக்கைதிகளை விடுவித்தல் (காட்டாக, IC-814), குறிப்பிட்ட இனத்தாரின் முறையீட்டை உலகளவில் அறியப்படுத்துதல் (காட்டாக AF 8969), அல்லது புகலிட உரிமை (காட்டாக ET 961). கைப்பற்றுகையாளர்கள் வானூர்தியை ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளனர் (காட்டாக செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் போது).

பிணைகளுடன் வானூர்தியைக் கடத்தும்போது கைப்பற்றுகையாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நிகழும்போது ஆயுதப்போருக்கு காவல்துறையும் படைத்துறையும் தயாராகின்றனர். உடன்பாடு கண்ட பின்னர் வானூர்தி திரும்பப் பெறப்படுகின்றது. உடன்பாடுகள் கைப்பற்றுகையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை. கைப்பற்றுகையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலோ அல்லது அவர்கள் சரணடைய மறுத்தாலோ சிறப்பு ஆயுதப்படையினர் ஈடுபட்டு பிணைப்பயணிகளை காப்பாற்றுகின்றனர். (காட்டாக என்டபே நடவடிக்கை).

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]