வரலாற்றில் இனப்படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாற்றில் இனப்படுகொலைகள் (Genocide in history) என்பது இனம், சாதி, சமயம், பிரதேசம் போன்ற அடிப்படையில் அடையாளம் காட்டப்படுகின்ற ஒரு குழு முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கின்ற செயல் மனித வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்துள்ளதைப் பதிவுசெய்து விமரிசித்தல் ஆகும்.

இனப்படுகொலை என்னும் சொல்லமைப்பு 1944இல் முதன்முறையாக இரபயேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரால் உருவாக்கப்பட்டது.

இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் 1948இல் கையெழுத்தானது. எந்தவொரு மக்கள் குழுவையோ அவர்களது இனம், சாதி, சமயம், நாடு போன்ற காரணத்திற்காக அழித்துவிட மேற்கொள்ளப்படும் செயல் "இனப்படுகொலை" என்று அந்த ஐ.நா. ஆவணம் கூறுகிறது. இவ்வாறு அழிக்கும் செயல் அக்குழுவினரைக் கொலைசெய்வதிலோ, அவர்களுக்கு உடல் உளம் சார்ந்த கொடிய தீங்கு இழைப்பதிலோ, அக்குழுவை அழிக்கும் நோக்கத்தோடு அக்குழு உறுப்பினர்மீது ஒரு வாழ்க்கைச் சூழலைத் திணிப்பதிலோ, அக்குழுவினர் பலுக விடாமல் தடுப்பதிலோ, அக்குழுவினரின் குழந்தைகளை அவர்களிடமிருந்து அகற்றி வேறு குழுவினரிடம் ஒப்படைத்தலிலோ அடங்கும்.[1]

ருவாண்டா இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டோரின் மண்டை ஓடுகள்

வரலாற்றில் நிகழ்ந்த இனப்படுகொலைகள்[தொகு]

அனைத்துநாட்டுச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் பெரும்பாதகமும் ஆகும். அது ஐ.நா. மற்றும் நாகரிக உலகத்தின் அணுகுமுறைக்கும் எதிரானது.

இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் "மனித இனமானது வரலாற்றில் இனப்படுகொலை காரணமாகப் பேரிழப்பைச் சந்தித்துள்ளது" என்று கூறுகிறது.[1]

எந்த வரலாற்று நிகழ்வுகள் இனப்படுகொலைகள்?[தொகு]

இக்கேள்விக்கு விடை தருவது அவ்வளவு எளிதல்ல. ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்வு இனப்படுகொலை என்று அழைக்கப்பட்ட உடனேயே அதற்கு எதிரான கருத்தும் தெரிவிக்கப்படுவது உண்டு. அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான தகவல்கள், விளக்கங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் உண்டு. எனவே "இனப்படுகொலை" என்னும் சொற்பயன்பாடு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.

இனப்படுகொலையை வரையறுத்தல் பற்றி[தொகு]

அண்மைக்காலத்தில் நிகழ்ந்த சில போர்ச்செயல்கள் "இனப்படுகொலைகள்" என்று சித்தரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "ருவாண்டா இனப்படுகொலையை" (Rwanda genocide) காட்டலாம். சூடான் நாட்டில் டார்புர் பகுதியில் நிகழ்ந்த சண்டையை ஐக்கிய அமெரிக்க நாடுகள் "இனப்படுகொலை" என்று அழைத்துள்ளது. ஆனால் ஐ.நா. அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது அரசு தன் பகுதியில் நிகழும் போர்நிகழ்ச்சியை இனப்படுகொலை என்று அடையாளம் காண்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

நிலம் தொடர்பான சர்ச்சை, இன ஒழிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றை எவ்வாறு துல்லியமாக வேறுபடுத்திப் பார்ப்பது, அதில் அடங்கியுள்ள அரசியல் அர்த்தங்கள் என்ன? எந்த அடிப்படையில் ஒரு நிகழ்ச்சி இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது? சட்டப்படி இனப்படுகொலை என்பது அனைத்துநாட்டு நீதிமன்றச் சட்ட வரையறைப்படி அமைய வேண்டுமா? இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன.[2]

இனம், சாதி, சமயம், நாடு என்னும் அடிப்படைகள் தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, அரசியல் குழு போன்றவற்றைக் கூண்டோடு அழிக்கும் செயல் ஏன் "இனப்படுகொலை" என்னும் பெயரால் ஐ.நா. அமைப்பால் அழைக்கப்படவில்லை என்னும் கேள்வியை ஹசான் காக்கார் (M. Hassan Kakkar) போன்ற அறிஞர்கள் எழுப்புகிறார்கள்.[3]

அந்த அறிஞர்கள் கருத்துப்படி, அனைத்துலக நாடுகள் "இனப்படுகொலை" பற்றித் தருகின்ற வரையறை போதிய விரிவுகொண்டிருக்கவில்லை.[4]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]