லாவோ சீ முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லாவோ சீ முத்து அல்லது அல்லாவின் முத்து ( Pearl of Lao Tzu (also referred to as Pearl of Lao Tze and previously as Pearl of Allah) என்பது ஒரு மிகப்பெரிய முத்து ஆகும்.

இந்த முத்தானது பிலிப்பைன்சின் பலாவான் தீவைச் சுற்றியுள்ள பலவான் கடல் பகுதியில், ஒரு பிலிப்பீன் முத்துக்குளிப்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இது ஒரு இரத்தின முத்தாக கருதப்படுவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக இது இராட்சத சிப்பியிலிருந்து கிடைக்கும் "கம்மி முத்து" அல்லது "டிரிடாக்னா முத்து" என்று அழைக்கப்படுகிறது. இது 24 சென்டிமீட்டர் விட்டம் (9.45 அங்குலம்) அளவுடன், 6.4 கிலோகிராம் (14.2 பவுண்டு) எடையைக் கொண்டதாக உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த முத்தானது பிலிப்பைன்சின் பலாவான் தீவிலிருக்கும் ப்ரூக்’ஸ் பாயிண்ட் கடல் பகுதியில் கிடைத்தது. 1939 இல் அமெரிக்கரான வில்பர்ன் கோப் என்வர் இந்த முத்தை பிலிப்பீன்சிலிருந்து அமெரிக்கா கொண்டுவந்தார். அவர் இறந்த 1979வரை அதை அவர்வசமே இதை வைத்திருந்தார். இந்த முத்து தனக்கு கிடைத்த வரலாறை 1939இல் நேச்சுரல் ஹிஸ்ட்ரி என்ற இதழில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.[1] பிலிப்பைன்ஸின் பலாவான் தீவிலிருக்கும் ப்ரூக்’ஸ் பாயிண்ட் கடல் பகுதியில் கிடைத்த இந்த முத்தை அந்தத் தீவின் பழங்குடி மக்கள் தலைவர் வைத்திருந்தார்.

அந்த பழங்குடி மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியவர்கள். அந்த முத்தின் வளைவிலும் நெளிவிலும் இறைத்தூதரான முகம்மது நபியின் முகம் தெரிவதுபோலப் பழங்குடித் தலைவருக்குத் தோன்றியது. எனவே, அந்த முத்தைப் புனிதமானதாக கருதி பத்திரமாகப் பாதுகாக்கத்து வைத்திருந்தார். இந்த முத்தைப் பற்றி கேள்விப்பட்ட, அமெரிக்கரான வில்பர்ன் கோப் 1934இல் இந்தப் பழங்குடித் தலைவரிடன் இந்த முத்தை விலைக்குக் கேட்டார். ஆனால் இந்தப் புனிதமான முத்தை விற்கமாட்டேன் என மறுத்துவிட்டார். 1936இல் பழங்குடித் தலைவரது மகன் மலேரியாவால் பாதிக்கப்பட்டான். வில்பர்ன் கோப், அந்தச் சிறுவனுக்கு மருந்து அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார். நன்றிக்கடனாக பழங்குடித் தலைவர், வில்பர்ன் கோப்புக்கு இந்த முத்தைப் பரிசாகக் கொடுத்தார். இந்த முத்தின் தோற்றத்தின் காரணமாக அந்தப் பழங்குடிகள் இதை அல்லாவின் முத்து என அழைத்தனர்.

1969இல் மென்சா என்ற அமைப்புக்குரிய இதழில் வில்பர்ன் கோப் இன்னொரு கட்டுரை எழுதினார். அதில் அல்லாவின் முத்து குறித்த கூடுதல் தகவல்களுடன், சீன நாட்டுக் கதை ஒன்றையும் புதிதாகச் சேர்ந்திருந்தார். அதில் சீன நாட்டுச் செல்வந்தரான லீ, என்பவர் நியூயார்க்கில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்லாவின் முத்தைக் கண்டு, இது தொலைந்துபோன லாவோவின் முத்து!’ என்றார். 2500 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் பிறந்தவரான லாவோ சீ முக்கியமான ஒரு தாவோயிய மெய்யியலாளராவார். இவர் வாழ்ந்த காலத்தில் சிறிய வெள்ளை முத்து ஒன்றைக் கண்டெடுத்தார். அதில் புத்தர், கன்பூசியஸ் முகங்களுடன் தனது முகத்தையும் செதுக்கினார். அந்த முத்து மேலும் வளர வேண்டும் என்பதற்காக அதைச் சிப்பி ஒன்றில் வைத்து மூடினார். அந்த முத்து வளர வளர வேறு பெரிய சிப்பிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரியதாக வளர்ந்திருந்த அந்த முத்தை, இராட்சதச் சிப்பிக்குள் மாற்றி வைத்துப் பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் எதிரிகள் அந்த முத்தை அபகரிக்கத் திட்டமிட்டபோது, லாவோ சீ முத்தை, சீனாவிலிருந்து கப்பலில் ஏற்றி, பிலிப்பைன்சுக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது.

1979இல் வில்பர்ன் கோப் இறந்த பிறகு லாவோ சீ முத்தை 2 லட்சம் டாலர்கள் கொடுத்து பீட்டர் ஹாஃப்மேன், விக்டர் பார்பிஷ் என்ற இருவர் வாங்கினர். பின்னர் லி குடும்பத்தினர் முத்தை வாங்க தொடர்பு கொண்டதாக பார்பிஷ் கூறியுள்ளார்.

இந்த முத்தை வாங்குவதற்காக விக்டர் பார்பிஷ், ஜோசப் போனிசெல்லி என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாததால் ஜோசப், விக்டர் மீது வழக்கு பதிவுசெய்தார். பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு ஒரு முடிவு எட்டப்பட்டது. அதன்படி லாவோவின் முத்தில் பீட்டர் ஹாஃப்மேன், விக்டர் பார்பிஷ்,  போனிசெல்லி ஆகிய மூவருக்கும் சம உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவோ_சீ_முத்து&oldid=2670348" இருந்து மீள்விக்கப்பட்டது