ரியூக்கியூவ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரியூக்கியூவ மக்கள் (Ryukyuan people) கியூசு, தாய்வான் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ரியூக்கியூ தீவுகளின் தாயக மக்கள் ஆவர்.[1] இவர்கள் சப்பானின் ஒக்கினாவா மாகாணம் அல்லது காகோசிமா மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாழ்கின்றனர். இம்மக்கள், சப்பானிய மொழிக் குடும்பத்தின் இரண்டு கிளைகளுள் ஒன்றில் அடங்கும் ரியூக்கியூவ மொழிகளைப் பேசுகின்றனர்.[2]

ரியூக்கியூவர்கள், சப்பானில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை இனக்குழு அல்ல. சப்பானிய அரசாங்கம் இவர்களை, ஐனுக்களுடனும், யமாத்தோக்களுடனும் உறவுடைய, சப்பானிய மக்களின் ஒரு துணைக் குழுவாகவே கருதுகின்றது. சிறுபான்மை இனக்குழுவாக ஏற்பு இல்லாதபோதும், இவர்களே சப்பானின் மிகப் பெரிய இனமொழிக் குழுவினர் ஆகும். ஒக்கினாவா மாகாணத்தில் மட்டும் இக்குழுவைச் சேர்ந்த 1.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதைவிட 600,000 ரியூக்கியவர்களும், அவர்களது வழித்தோன்றல்களும் சப்பானின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர். வெளிநாடு வாழ் ரியூக்கியூவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். பல நாடுகளில், இக்குழுவினரையும் பிற சப்பானியரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை ஆதலால், அத்தகைய நாடுகளில் ரியூக்கியவர்கள் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்கள் இல்லை.

அண்மைக்கால மரபியல், மானிடவியல் ஆய்வுகள், ரியூக்கியூவர்கள் ஐனு மக்களுடன் உறவுடையவர்கள் என்றும், வரலாற்றுக்கு முந்திய யோமோன் காலத்தில் (கிமு 10,000-1,000 க்கு முந்தியது) தென்கிழக்காசியாவில் இருந்து வந்து குடியேறி வாழ்ந்த மக்களுடனும், யமாத்தோ மக்களுடனும் ஒரே மூதாதையைக் கொண்டவர்கள் என்றும் காட்டுகின்றன. யாமாத்தோ மக்கள் பெரும்பாலும் கிழக்காசியாவில் (குறிப்பாகச் சீனா, கொரியத் தீவக்குறை ஆகிய பகுதிகள்) இருந்து புலம்பெயர்ந்தோருடனான யாயோய் காலத்துக் (கிமு 1,000 - கிபி 300) கலப்பினத்தவர் ஆவர்.[3][4][5][6][7][8][9] ரியூக்கியூவர்களுக்கு, சில தாய்வழி உரிமைக் கூறுகள், உள்ளூர்ச் சமயம், உணவு போன்ற தனித்துவமான பண்பாடு உண்டு. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னறே இவர்களது உணவில் அரிசி சேர்க்கப்பட்டது. இம்மக்கள் பல நூற்றாண்டுகளாகத் தீவுகளில் தனிப்படுத்தப்பட்டு வாழ்ந்தனர். 14 ஆம் நூற்றாண்டில் தனித்தனியாக இருந்த மூன்று ஒக்கினாவ அரசுகளில் இருந்து ரியூக்கியூ இராச்சியம் உருவானது. இது 1372 இல் உருவான மிங் வம்ச சீனாவுடனான கடல்வழி வணிகத் தொடர்புகளையும், சிற்றரசு நிலையையும் தொடர்ந்து பேணியது.[1]

மெய்ஜி காலத்தில், ரியூக்கியூ இராச்சியம், ரியூக்கியூ ஆட்சிப்பகுதி (1872-1879) ஆனது. இதன் பின்னர் இது அரசியல் ரீதியாக சப்பானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. 1879 இல், இணைப்புக்குப் பின்னர், அதன் கடைசி மன்னர் டோக்கியோவுக்கு நாடுகடத்தப்பட்டதுடன், ஆட்சிப்பகுதி ஒக்கினாவா மாகாணம் ஆனது.[1][10][11] 1895 ஆம் ஆண்டு இத்தீவுகள் மீதான தனது உரிமை கோரலை சீனா கைவிட்டது.[12] இக்காலப்பகுதியில், ரியுக்கியூவ மக்களை சப்பானியருடன் ஓரினமாக்குவதற்காக, ஒக்கினாவா இன அடையாளம், மரபுரிமை, பண்பாடு என்பவற்றை மெய்ஜி அரசாங்கம் ஒடுக்கியது.[1][13][14][15][16][17]

வரலாறு[தொகு]

32,000-18,000 ஆண்டுகள் முன்பு இருந்தாவது ரியூக்கியூ தீவுகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.[18] அவர்கள் என்ன ஆனார்கள் என்பதோ, அவர்களுக்கும் ரியூக்கியூவ மக்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்தோ எதுவும் தெரியவில்லை. வடக்கு ரியுக்கியூவின் ஜோமோன் காலத்தில் மக்கள் வேட்டுவ-உணவு சேகர நிலையில் வாழ்ந்தனர். இவர்கள் தலை நிலத்தின் ஜோமோன் மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.[19] ஜோமோன் காலத்தின் பிற்பகுதியில் குடியிருப்புக்கள் கடற்கரை நோக்கி நகர்ந்திருப்பதை தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இது மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டதைக் காட்டுகின்றது. ஜோமோன் காலத்தின் பின்னரைப் பகுதியில் இருந்து ரியூக்கியூத் தீவுகள் தமது சொந்தப் பண்பாட்டை உருவாக்கத் தொடங்கின. மொழி, பண்பாடு ஆகியவை தொடர்பான செல்வாக்குகள்; இன, இயற்பிய அம்சங்களின் செல்வாக்கைவிட மிகவும் பரந்தது எனச் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Minahan, James B. (2014), Ethnic Groups of North, East, and Central Asia: An Encyclopedia, ABC-CLIO, pp. 231–233, ISBN 978-1-61069-018-8
  2. Masami Ito (12 May 2009). "Between a rock and a hard place". The Japan Times. http://www.japantimes.co.jp/news/2009/05/12/news/between-a-rock-and-a-hard-place/#.WJepb4WcFMt. பார்த்த நாள்: 5 February 2017. 
  3. Yuka Suzuki (2012-12-02). "Ryukyuan, Ainu People Genetically Similar Read more from Asian Scientist Magazine". Asian Scientist. http://www.asianscientist.com/2012/12/in-the-lab/ryukyuan-ainu-people-genetically-similar-2012/. பார்த்த நாள்: 7 February 2017. 
  4. Hendrickx 2007, ப. 65.
  5. Serafim 2008, ப. 98.
  6. Robbeets 2015, ப. 26.
  7. "日本人はるかな旅展". Archived from the original on 2015-04-21. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
  8. "Yayoi linked to Yangtze area". www.trussel.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
  9. Kumar, Ann. (2009). Globalizing the Prehistory of Japan: Language, Genes and Civilisation. London and New York: Routledge Taylor & Francis Group. Page 79 & 88. Retrieved January 23, 2018, from link.
  10. Rabson 2007, ப. 3.
  11. Caprio 2014, ப. 61.
  12. Dubinsky, Davies 2013, ப. 12.
  13. Christy 2004, ப. 173–175.
  14. Rabson 2007, ப. 4.
  15. Dubinsky, Davies 2013, ப. 15–16.
  16. Caprio 2014, ப. 49–50, 63, 66–67.
  17. Inoue 2017, ப. 3.
  18. Hendrickx 2007, ப. 37.
  19. Takehiro Sato et al. (November 2014). "Genome-Wide SNP Analysis Reveals Population Structure and Demographic History of the Ryukyu Islanders in the Southern Part of the Japanese Archipelago". Molecular Biology and Evolution 31 (11): 2929–2940. doi:10.1093/molbev/msu230. பப்மெட்:25086001. https://academic.oup.com/mbe/article/31/11/2929/2925651/Genome-Wide-SNP-Analysis-Reveals-Population. பார்த்த நாள்: 5 February 2017. 
  20. Kerr 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியூக்கியூவ_மக்கள்&oldid=3588040" இலிருந்து மீள்விக்கப்பட்டது