உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜராஜன்
இயக்கம்டி. வி. சுந்தரம்
தயாரிப்புநீலா புரொடக்சன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம்.ஜி.ஆர்
பத்மினி
எம். என். நம்பியார்
லலிதா
பி. எஸ். வீரப்பா
பிரெண்ட் ராமசாமி
வெளியீடு26.04.1957
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ ராஜன் அரச பரம்பரையர் கதையாக அமைந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

கதைச் சுருக்கம்

[தொகு]

ராஜசேகர மன்னரின் ஒரே புதல்வனான “ராஜராஜன்” சிங்காதனம் ஏறும் நாள் நெருங்குகிறது. நாட்டை எப்படியும் கைப்பற்றித் தானே ஆள வேண்டும் என்று, மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ராஜப்பிரதிநிதி நாகவேலன் இனியும் தாமதித்தால் தன் ஆசை நிராசையாகிவிடுமென்று எண்ணி ராஜராஜனைத் தந்திரமாகக் காடிற்கு வேட்டையாட அழைத்துச் சென்று அங்கே அவன் உயிரையும் குடித்துவிடத் திட்டம் வகுக்கிறான். தூய உள்ளம் படைத்த 'பிரியமோகினி' என்ற நாகவேலனின் தங்கை. அவள் அண்ணன் வகுக்கும் திட்டத்தை ஒளிந்திருந்து கவனிக்கிறாள். ஒருவரும் அறியாமல் அவள் அவனைப் பின்தொடர்கிறாள். காட்டில் நித்திரையில் ஆழ்ந்திருந்த ராஜராஜனை நாகவேலனின் ஆட்கள் கைது செய்துவிடுகின்றனர். நாகவேலன் தன் சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கையில், பிரியமோகினி செய்யும் உதவியால் ராஜராஜன் தப்பி ஓடிவிடுகிறான். தான் இட்ட திட்டமெல்லாம் குட்டிச்சுவராகியதை உணர்ந்த நாகவேலன், நாட்டிற்கு வந்து, காட்டில் வேட்டையாடச் சென்ற ராஜராஜன் வேடுவர்களால் கொல்லப்பட்டான் என்ற புரளியைக் கிளப்பி மக்கள் மனதைத் தன்பக்கம் திருப்பிவிடுகிறான்.

நாடு திரும்பி ஆட்சிபுரிவதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்த ராஜராஜன், தனது தந்தையின் நண்பரும், திறமையும் செல்வாக்கும் வாய்ந்தவருமான கவி முத்தேரரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறான். நாகவேலனின் கை ஓங்கியிருப்பதை நன்குணர்ந்திருந்த முத்தேரர், ராஜராஜனை உடனே சென்று நாங்கூர் அரசர் கீர்த்திவர்மரையும், வேங்கைத்தேவன் என்ற காட்டரசனையும் சந்தித்து அவர்கள் உதவியையும் கேட்கச் சொல்லுகிறார். ராஜராஜன் நாங்கூர் மன்னரைச் சந்திப்பதற்கு முன்பே நாகவேலன் அவரைச் சந்தித்து, அவனுக்கெதிராகக் கீர்த்திவர்மர் மனதில் துவேஷத் தீயை மூட்டி பசப்பு வார்த்தைகள் கூறி அவரைத் தன்னுடன் கரூருக்கு அழைத்துச் சென்று விடுகிறான். கீர்த்திவர்மரின் விருப்பத்திற் கிணங்க அவர் மனைவி சண்பகதேவியும், மகள் ரமாவும் மலைக்கன்னி கோவிலுக்குப் பயணமாகிறார்கள். அவர்கள் வருகையை முன்பே அறிந்திருந்த நாகவேலனின் ஆட்கள் அவர்களை வழி மறிக்கிறார்கள். கீர்த்திவர்மரை சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ராஜராஜன் தக்க சமயத்தில் அங்குவந்து அவர்களைக் காப்பாற்றிவிடுகிறான். கீர்த்திவர்மர் நாகவேலனின் வலையில் சிக்கிவிட்டதை அவர்கள் வாயிலாக அறிந்ததும் இனி அவரை சந்திப்பதில் பயனில்லை என்று உணர்ந்து, உள்ளததை இந்த முதல் சந்திப்பிலேயே ரமரவிடம் பறிகொடுத்துவிட்டிருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாது, தான் 'மாண்டுபோன ராஜராஜனின் ஆவி' என்று பொய்சொல்லி அவர்களை பயமுறுத்திவிட்டுக் குதிரைமீதேறித் திரும்பிச்சென்று விடுகிறான்.

வழியில் களைப்புமேலீட்டால் குதிரையிலிருந்து கீழேவிழுந்து மூர்ச்சையடைந்த ராஜராஜனை எடுத்துவந்து மூர்ச்சை தெளிவித்த காட்டரசன் வேங்கைத்தேவன், அவன் வாயிலாக விபரங்களை அறிகிறான். பின் வேங்கைத்தேவன் முத்தேரரைச் சந்தித்து நிலைமையை விளக்குகிறான். முத்தேரர் தன் சீடன் சற்குணனை நாகவேலனிடம் ஒரு ஆரூடனாக அமர்ந்து வேவு பார்க்கும்படி அனுப்பிவிட்டு, வேங்கைத் தேவனை மக்கள் மனதை மாற்றும் பணியில் ஈடுபடச் செய்கிறார். மனமாற்றம் அடைந்த மக்கள் முத்தேரர் தலைமையில் நாகவேலனைச் சந்திக்கவே, புதிய அரசனைத் தேர்ந்தெடுக்க மாலையுடன் பட்டத்து யானை அனுப்பப்படுகிறது. யானை யார் கழுத்தில் மாலையிடுகிறதோ அவனைக் கொன்று விடும்படி, தன் நம்பிககைக்குப் பாத்திரமான சேனைத் தலைவன் உதயசந்திரனுக்குக் கட்டளையிடுகிறான் நாகவேலன். பிரிய மோகினியின் காதலை அடைய மனப்பால் குடிக்கும் உதயசந்திரன் தன் மனச்சாட்சிக்கும், கடமைக்கும், காதலுக்கும் இடையே குழம்பி, வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறான், ஆனால் யானை இளவரசனையே தேர்ந்தெடுத்துவிட்டதால் அவனைக்கொல்ல மனமில்லாமல் கைது செய்து ஒரு மறைவான இடத்தில் கொண்டு போய் அடைத்து வைக்கிறான். ராஜராஜனைக் கொல்லாமல் சிறைபிடித்து வந்ததற்காக நாகவேலன் உதயனைக் கடிந்து, உடனே ராஜராஜனைக் கொன்றுவிடும்படி கட்டளையிடுகிறான். உதயனும் ராஜராஜனும் வாட்போர் புரிகையில், உதயனின் தோல்வி நெருங்குகிறது. அதை முன்பே எதிர்பார்த்த நாகவேலன் அங்கு வந்துசிறைக்குத் தீமூட்டிவிடுகிறான். அதிலிருந்தும் ராஜ ராஜன் சாதுர்யமாகத் தப்பி வெளியேறிவிடுகிறான்.

யானை ஒருவரையும் தேர்ந்தெடுக்காமல் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, கீர்த்திவர்மரே நாட்டை ஆள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு முன்பே அவர் நாங்கூர் திரும்ப வேண்டிவிடுகிறது நாகவேலனின் சூழ்ச்சியால். ராஜராஜன், தான் முன்பே சந்தித்துக் காதல்கொண்ட ரமாவைக் காண ஓர் நள்ளிரவில் நாங்கூர் அரண்மனைக்குள் வந்து, ரமாவென எண்ணி அங்கு வந்திருந்த பிரியமோகினியை எழுப்பிவிடவே குழப்ப மேற்பட்டு ரமாவைப் பார்க்காமலேயே திரும்ப நேருகிறது. ஆகையால் மீண்டும் அவன் துறவிபோல் மாறுவேடத்தில் வந்து, அரசனைச் சந்தித்து, அரண்மனைக் கன்னிகாமாடத்தில் விருந்தினனாகத் தங்கி ரமாவைக் காதல் மணமே செய்துகொண்டுவிடுகிறான். ஆனால் நாகவேலன் எதிர்பாராதவிதமாக அங்குவந்து விடவே, ரமாவின் கோரிக்கைக் கிணங்கி, மறைந்துவிடுகிறான். துறவியாக வந்து சென்றது ராஜராஜன் தான் என்றறிந்த நாக வேலன், கீர்த்திவர்மர் மனதைப் பெரிதும் மாற்றி, அவரைக் குடும்பத்துடன் தன் நாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகிறான்.

கரூரில் தன் வலையில் சிக்கிய கீர்த்திவர்மரை வஞ்சித்து, அவர்மீது குற்றம்சாட்டி, மரண தண்டனையும் கொடுத்துவிடுகிறான் நாகவேலன். இந்தக் கொடுமையை அறிந்த ராஜராஜன் தன் கூட்டாளிகளுடன் வந்து நாகவேலனின் கண்களில் மண்ணைத் தூவி கீர்த்திவர்மரை மீட்டுச்சென்றுவிடுகிறான். முத்தேரர் யோசனையின்படி, நாகவேலனின் கையில் சிக்கியிருக்கும் நாங்கூர் ராணிக்கும், இளவரசிக்கும், கீர்த்திவர்மர் உயிரோடிருக்கும் செய்தியைச் சொல்ல அவரது வீட்டுச் சுரங்கப் பாதை வழியில் ராஜராஜன் செல்கிறான். அவன் சென்றபின்பே அங்கு வந்த நாகவேலன், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்த முத்தேரரைக் கொன்றுவிடுகிறான். தாயையும் மகளையும் சந்தித்து அவர்களை மீட்டுச் செல்லுமுன், ராஜராஜனை காவற்காரர்கள் வளைத்துக் கொள்கின்றனர், முடிவில் படுகாயமடைந்த அவன், சுரங்கத்திற்குள் மறைந்து, அங்கே மூர்ச்சித்து விழுந்துவிடுகிறான். அவனைத் தொடர்ந்துவந்த பிரியமோகினி அவனுக்கு மூர்ச்சைதெளிவித்து, பணிவிடை செய்துவருகிறாள்.

பிரியமோகினியால் தன் தவறுகளை உணர்ந்த உதயன், நாக வேலனின் சதிகளில் ஈடுபட மறுக்கிறான். அவனும் சிறையினுட் தள்ளப்படுகிறான். ஆனால் பிரியமோகினி அவனை சிறையி லிருந்து மீட்டு ராஜராஜனிடம் கொண்டு சேர்த்துவிடுகிறாள்.

தன்மீதுள்ள காதலால்தான் பிரியமோகினி தன்னை மீட்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்த, உதயசந்திரன், அவள் ராஜராஜனைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் ஆத்திரங் கொள்கிறான். ராஜராஜனோ தனக்கு ரமாவின் மீதுள்ள காதலைச் சொல்லி பிரியமோகினியை ஏற்க மறுக்கிறான். மனமுடைந்த பிரியமோகினி அங்கிருந்து சென்றுவிடுகிறாள். ராஜராஜன் உயிருடன் இருக்கும் வரை தன் காதல் நிறைவேறாது என்று எண்ணிய உதயசந்திரன் ராஜராஜனை வாட்போருக்கழைக்கிறான் போரின் முடிவென்ன? நாகவேலன் முறியடிக்கப்பட்டானா? என்பது மீதிக் கதை.

நடிகர்கள்

[தொகு]

வரவேற்பு

[தொகு]

சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajarajan". spicyonion. Retrieved 2014-09-21.
  2. "Raja Rajan Records". mgrblog. Retrieved 2014-09-21.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_ராஜன்&oldid=4270096" இலிருந்து மீள்விக்கப்பட்டது