உள்ளடக்கத்துக்குச் செல்

யூலியன் நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.

20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது[1]. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது[2]. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.

ஆண்டுகளின் ஒப்பீடு

[தொகு]

வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு
ஆண்டு வகை ஆங்கிலத்தில் கால அளவு (நாட்கள்) விளக்கம்
சாதாரண ஆண்டு Common Year 365 பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு.
நெட்டாண்டு (லீப் ஆண்டு) Leap Year 366 பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு.
கிரெகொரியின் ஆண்டு Gregorian Year 365.2425 நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம்.
சூரிய ஆண்டு Solar Year ~365.242 பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.)
வெப்பமண்டல ஆண்டு Tropical Year 365.24219 இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை).
விண்மீன் ஆண்டு Sidereal Year 365.25636 நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்.
ஜூலியன் ஆண்டு Julian Year 365.25 வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு.
சந்திர ஆண்டு Lunar Year ~354.37 12 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு).
அண்மைநிலை ஆண்டு Anomalistic Year 365.25964 பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion).
கிரகண ஆண்டு Eclipse / Draconic Year 346.62007 சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்).
சோதிக் ஆண்டு Sothic Year ~365.25 சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை).
பெஸலியன் ஆண்டு Besselian Year ~365.2422 ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு.
காசியன் ஆண்டு Gaussian Year 365.25690 காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு.
விண்மீன் மண்டல ஆண்டு Galactic Year ~22.5 - 25 கோடி ஆண்டுகள் சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது).

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிரேக்கம் திருத்தப்பட்ட யூலியன் நாட்காட்டியைப் பயன்படுத்துவதாக Nautical Almanac Offices of the UK and the US (1961, p. 416) தெரிவிக்கிறது.
  2. பின்லாந்து மரபுவழித் திருச்சபை கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகிறது. Bishop Photius of Triaditsa, "The 70th Anniversary of the Pan-Orthodox Congress, Part II of II"
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியன்_நாட்காட்டி&oldid=4476507" இலிருந்து மீள்விக்கப்பட்டது