யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச் செய்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத்தின் இணுவில் பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்று.
அறுவடை செய்யப்பட்ட புகையிலைச் செடியின் இலைகள் பதப்படுத்துவதற்காக மதில்களின் மீது உலரவிடப்பட்டுள்ள காட்சி.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலைப் பயிர்ச்செய்கை சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது எப்பொழுது யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுபற்றிய சரியான தகவல்கள் இல்லை. எனினும் சுதந்திர யாழ்ப்பாண அரசுக் காலத்தின் இறுதிக் கட்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போத்துக்கீசர் காலத்திலேயே உறுதியாக வேரூன்றியிருக்கக் கூடும். எப்படியாயினும், இது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்துடன் சுமார் 400 ஆண்டுகாலம் இணைந்துள்ளது எனலாம். பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, உருளைக்கிழங்கு உற்பத்தி, திராட்சை உற்பத்தி போன்ற பெருமளவு வருமானம் அளித்த, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கு உள்ளாகவே கைவிடப்படவேண்டி ஏற்பட்ட போதிலும், புகையிலைச் செய்கை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும்.

யாழ்ப்பாணப் பொருளாதாரமும் புகையிலையும்[தொகு]

புகையிலைப் பயிர்ச் செய்கையின் அறிமுகம், யாழ்ப்பாணப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒரு விரும்பத்தக்க அம்சமாக விளங்கியது எனலாம். யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசுகளுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயை அளித்து வந்த நடவடிக்கைகளான, முத்துக்குளிப்பு, யானை ஏற்றுமதி, சாயவேர் ஏற்றுமதி போலன்றி புகையிலைச் செய்கையானது, மக்கள் மட்டத்தில் பரவலான பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. புகையிலை ஒரு விவசாய உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி, உள்ளூரிலேயே உருவாக்கப் படக்கூடியதாக இருந்த சுருட்டுக் கைத்தொழில்களுக்கு மூலப்பொருளாகவும் அமைந்தது. இது தொடர்பான வணிக முயற்சிகளிலும் மக்களில் ஒரு பகுதியினர் வருமானம் பெறக்கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணத்துக்கு வெளியே இலங்கையின் தென் பகுதிகளுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் கேரளப் பகுதிகளுக்கும், இந்தோனீசியாவில் இன்று ஜக்கார்த்தா என்று அழைக்கப்படும் பத்தேவியாவுக்கும், புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. மக்களின் பொருளாதார நிலையைப் பரவலாக உயர்த்தியது மட்டுமன்றி, அரசாங்கமும் வரிகள் மூலம் குறிப்பிடத்தக்க வருமானம் பெற்றது.