உள்ளடக்கத்துக்குச் செல்

மேலச்சேரிக் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலச்சேரிக் குடைவரை, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூர் வட்டத்தில் அமைந்துள்ள மேலச்சேரி என்னும் ஊரில் காணப்படும் ஒரு குடைவரைக் கோயில். இது சிவனுக்காக அமைக்கப்பட்ட கோயில் ஆகும். இது "மட்டிலேசுவரர் கோயில்" என அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.

அமைப்பு

[தொகு]

இக்குடைவரையில் உள்ள மண்டபத்தில் ஒரு வரிசைத் தூண்களே உள்ளள. இவ்வரிசையில் இரண்டு முழுத் தூண்களும், பக்கச் சுவர்களோடு ஒட்டி இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. இது சதுரம்-எண்பட்டை-சதுரம் என்னும் வடிவில் அமையாமல் தூண்களின் முழு உயரத்துக்கும் சதுரமான வெட்டுமுகம் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் பின்புறச் சுவரில் குடையப்பட்டு உள்ள கருவறையில் தாய்ப் பாறையிலேயே செதுக்கப்பட்ட ஆவுடையாருடன் கூடிய இலிங்கம் காணப்படுகிறது. பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் அமைத்த குடைவரைக் கோயில்களில் இவ்வாறு தாய்ப் பாறையில் செதுக்கிய இலிங்கம் காணப்படுவதில்லை ஆதலால், இது இக்கோயிலுக்கு உரிய சிறப்புக்களில் ஒன்று ஆகும். இங்கு மண்டபத்தினுள் காணப்படும் பார்வதி சிற்பமும், குடைவரை முகப்பில் உள்ள பிள்ளையார் சிற்பமும் பிற்காலத்துக்கு உரியவை.[1]

காலம்

[தொகு]

இக்குடைவரையின் தூணொன்றில் காணப்படும் பல்லவ கிரந்தக் கல்வெட்டொன்று "சிறீ சிக்காரி பல்வவேசுவரம் எனப்படும் இந்தச் சிவன் கோயில் பேரரசன் சந்திராதித்த மன்னனால் கட்டப்பட்டது." எனக் குறிப்பிடுகிறது.[2] ஆனால், இங்கே "சிக்காரி" என்பதும், சந்திராதித்தன் என்னும் மன்னன் பெயரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் இது பல்லவர்களுடன் தொடர்புள்ளதாகவும் காணப்படவில்லை. எனினும் கோயிற் பெயரில் "பல்லவேசுவரம்" என்று இருப்பதாலும், மண்டகப்பட்டு, தளவானூர், சிங்கவரம் போன்ற பல்லவரின் குடைவரைக் கோயில்களுக்கு அண்மையில் அமைந்திருப்பதனாலும் இது பல்லவர் காலத்துக் குடைவரை என்று எடுத்துக்கொள்ளலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது. அத்துடன், பிற அம்சங்களையும் கருத்தில் எடுத்து இது மாமல்லன் எனப்படும் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தது எனப் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.[3] இங்குள்ள கல்வெட்டின் எழுத்தமைதி மாமல்லபுரத்தில் உள்ள முதலாம் நரசிம்மவர்மனின் கல்வெட்டுக்களோடு ஒத்திருப்பதால், இக்கோயில் ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குடையப்பட்டிருக்கலாம் என்றும், சந்திராதித்தன் என்பது முதலாம் நரசிம்மவர்மன் அல்லது முதலாம் பரமேசுவரவர்மனுடைய பெயர்களில் ஒன்றாக இருக்கக்கூடும் எனவும் துப்ராயில் கருத்து வெளியிட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 61, 62
  2. Jauveau-Dubreuil, G., Pallava Antiquities (Translated inti English by V. S. Swaminadha Dikshitar), Vol 1, Asian Educational Services, New Delhi, 1994 (First Edition – 1916), p. 65, 66
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 61, 62
  4. Jauveau-Dubreuil, G., 1994, p. 66
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலச்சேரிக்_குடைவரை&oldid=2795170" இலிருந்து மீள்விக்கப்பட்டது