முகவை பொன்னுசாமித் தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்னுசாமித் தேவர் என்பவர் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள, புதுமடம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சிவஞானத் தேவர்- முத்துவீராயி ஆகியோர் ஆவர்.இவர் 1837 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆற்றிய பணிகள்[தொகு]

இவர், தம் பதினேழாம் வயதில் தந்தை சிவஞானம் பொறுப்பேற்றிருந்த பதவியை ஏற்கும் நிலை ஏற்பட்டது. சமஸ்தான அரசியல் காரியங்களைத் திறம்பட நிர்வகித்து பெரும் புகழ் பெற்றார். தமது இருபதாம் வயதில் தம் இளவல் முத்துராமலிங்க சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க அமைச்சர் ஆனார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

இவர் தமிழ் நூல்களை நன்கு கற்றிருந்தார். தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயர், ஆறுமுக நாவலர் ஆகியவர்களின் நூல்களை அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்தார்.திருக்குறள் பரிமேலழகர் உரை, சேதுபுராணம் முதலான பல நூல்களை ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தவர் இவரே. பல பாடல்களையும், நூல்களையும் தொகுத்து, பலகவித் திரட்டு எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். இவரது பேச்சு, எழுதிய கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து, தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

மறைவு[தொகு]

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் பாண்டித்துரைத் தேவர். அப்பாண்டித்துரை இவரின் புதல்வர் ஆவார். 33 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 1870 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை[தொகு]

1) மயிலை சீனி.வேங்கடசாமி, " பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001. 2) பெரியபெருமாள்," தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்"- மதிநிலையம -2001.