மினமாட்டா கொள்ளை நோய்
மினமாட்டா நோய் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | T56.1 |
ஐ.சி.டி.-9 | 985.0 |
மெரிசின்பிளசு | 001651 |
மினமாட்டா என்பது ஜப்பான் நாட்டின் கியூஷூ தீவில் மினமாட்டா விரிகுடாவின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறு கடலோர கிராமமாகும். இங்கு பாதரச நச்சேற்றத்தால் ஏற்பட்ட நரம்பியல் நோய் மினமாட்டா நோய் அல்லது மினமாட்டா கொள்ளை நோய் என்று அழைக்கப்படுகிறது.
நோயின் அறிகுறிகள்
[தொகு]பொதுவானவை
[தொகு]தள்ளாட்டம்; கை, கால்பாதங்களில் உணர்வின்மை; தசை பலவீனம்; பார்வைக் குறைபாடு; கேட்டல், பேச்சுக் குறைபாடு (நாக்குழறல்).
மிகவும் தீவிரமான நிகழ்வுகளில்
[தொகு]பித்துநிலை; பக்கவாதம்; நினைவிழத்தல்; இறப்பு.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
[தொகு]மார்ச் 2001 நிலவரப்படி, 2,265 பேர் பாதிப்பிற்கு உள்ளானதாகவும் அதில் 1,784 பேர் இறந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது;[1] மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இழப்பீட்டு நிதி பெற்றதாகவும் கூறப்பட்டது.[2] 2004 நிலவரப்படி, சிஸ்ஸோ நிறுவனம் அளித்துள்ள இழப்பீட்டுத் தொகை 86 மில்லியன் டாலர்களாகும்.
நோய்க்கான காரணங்கள்
[தொகு]மீத்தைல் மெர்க்குரி எனப்படும் வேதிப்பொருளால் மாசடைந்த துடுப்பு மீன், ஓட்டு மீன் ஆகியவற்றை உணவாக உட்கொண்டதால்தான் இந்நோய் மக்களைத் தாக்கியது; இது பாதரச நச்சேற்றத்தின் ஒரு அங்கமாகும். சிஸ்ஸோ நிறுவனம் (Chisso Corporation) என்ற வேதித் தொழிற்சாலையினால் வெளியேற்றப்பட்டு மினமாட்டா விரிகுடாவிலும் சிரானுயி கடலிலும் கலந்த மீத்தைல் மெர்க்குரியினால் விளைந்ததே இந்த மினமாட்டா நோய்; இந்நிறுவனம் 1932 முதல் 1968 வரை தொடர்ந்து விரிகுடாவை மாசடையச் செய்த போதிலும் அரசோ நிறுவனமோ மாசடைதலைக் கட்டுப்படுத்தவில்லை.
உயிரிவேதியல் காரணம்
[தொகு]சிஸ்ஸோ நிறுவனம் பிளாஸ்டிக் தயாரிப்பில் தேவைப்படும் அசிட்டால்டிஹைடு என்ற சேர்மத்தைத் தயாரித்தது; அதில் கரிமப்பாதரச சேர்மங்கள் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்பட்டன; இதனால் தொழிற்சாலைக் கழிவுகளில் பாதரச அயனிகள் காணப்பட்டன. இக்கழிவு மினமாட்டா நதியில் கலந்து கியூஷு என்னும் இடத்திலுள்ள மினமாட்டா விரிகுடாவை அடைந்து கடலோடு கலந்தது. பாதரச அயனிகள் உள்ளபடியே நச்சற்றவை தாம்; ஆனால் கடலோர சேற்றுப்பகுதியில் உயிர் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் மீத்தைல் என்னும் வேதிப்பொருளை பாதரச அயனிகளுடன் இணைத்து அவற்றை நச்சுத்தன்மை வாய்ந்த மீத்தைல் மெர்க்குரியாக மாற்றுகின்றன; இவ்வாறு உணவுச்சங்கிலியில் மீத்தைல் மெர்க்குரி நுழைவதற்கு உயிரிவேதியல் காரணம் கூறப்படுகின்றது.[3]
பாதரச நச்சேற்றத்தின் இயங்குமுறை
[தொகு]உயிரிமீத்தைல் சேர்ப்பு, உயிரி உருப்பெருக்கம் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்து பாதரச நச்சேற்றத்தின் இயங்குமுறையைப் புரிந்து கொள்ளலாம்: பாதரசத்தின் நச்சுத்தன்மை 1. அதன் குறிப்பிட்ட வேதிநிலை, 2. அதன் கரைதிறன் ஆகியவற்றைப் பொருத்தது.
திரவ நிலையில் பாதரசம் நச்சுத்தன்மையற்றது; ஆனால் ஆவி நிலையில் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு மூளையைச் சேதப்படுத்துவதால் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அதேபோல், மெர்க்குரசு குளோரைடும் (Hg2Cl2) மெர்க்குரிக் சல்ஃபைடும் (HgS) கரையாத்தன்மை வாய்ந்ததால் நச்சற்றவை ஆகும்; ஆனால் மீத்தைல் சேர்க்கப்பட்ட பாதரச சேர்மங்களான மீத்தைல் மெர்க்குரி (CH3Hg+) கொழுப்பில் கரையக்கூடிய தன்மை உடையதால் நச்சுத்தன்மை மிக்கதாய் உள்ளது. கொழுப்பில் கரையும் திறன் இருப்பதால் அது மூளையைச் சென்றடைகிறது; தாயிடமிருந்து நச்சுக்கொடியின் வாயிலாக கருப்பையில் வளரும் சேயையும் அது சென்றடைகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Official government figure as of March 2001. See "Minamata Disease: The History and Measures, ch2"
- ↑ See "Minamata Disease Archives" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Frequently asked questions, Question 6
- ↑ சுற்றுச்சூழலியல் - தங்கமணி & சியாமளா தங்கமணி - பிரணவ் சிண்டிகேட் பதிப்பகம் - பக். 105
- ↑ சுற்றுச்சூழலியல் - தங்கமணி & சியாமளா தங்கமணி - பிரணவ் சிண்டிகேட் பதிப்பகம் - பக். 106
கலைச்சொற்கள்
[தொகு]பாதரச நச்சேற்றம் = mercuric poisoning; நரம்பியல் நோய் = neurological disease; கரிமப்பாதரச சேர்மங்கள் = organomercuric compounds; அயனி = ion; விரிகுடா = bay; தள்ளாட்டம் = ataxia; துடுப்பு மீன் = fin fish; ஓட்டு மீன் = shell fish; உயிரிவேதியல் காரணம் = biochemical cause; உயிரிமீத்தைல் சேர்ப்பு = biomethylation; உயிரி உருப்பெருக்கம் = biomagnification; நச்சுக்கொடி = placenta; இயங்குமுறை = mechanism;