மா. மங்களம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மா. மங்களம்மாள்
MMangalammal.jpg
பிறப்புமார்ச்சு 10, 1884(1884-03-10)
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இறப்பு1971 (அகவை 86–87)
அறியப்படுவதுகாந்தியவாதியும், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
மாசிலாமணிப்பிள்ளை பொன்னம்பலபிள்ளை
உறவினர்கள்க. நவரத்தினம்

மங்களம்மாள் மாசிலாமணி (மார்ச் 10, 1884 - 1971) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காந்தியவாதியும், சமூக சீர்திருத்தவாதியும், பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த ஒருவரும் ஆவார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கல்வியில் முன்னணியில் திகழ்ந்த, வசதி படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

குடும்பப் பின்னணி[தொகு]

மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர். அக்காலத்தில் பி. ஏ பட்டம் பெறுவது யாழ்ப்பாணத்தில் மிக அரிதாக இருந்ததால், பி. ஏ. பட்டதாரியான இவரை மக்கள் பி. ஏ. தம்பி என்றே அழைத்துவந்தனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கை பி. ஏ. தம்பி ஒழுங்கை என அழைக்கப்படுகிறது. பி. ஏ. தம்பியின் ஆண் மக்களான செல்லப்பாபிள்ளை, பொன்னம்பலபிள்ளை, சின்னப்பாபிள்ளை ஆகியோர் இந்தியாவின் திருவிதாங்கூரில் உயர் பதவிகளை வகித்துவந்துடன், இந்தியாவின் சுதந்திர இயக்கத்திலும் பங்குகொண்டிருந்தனர். பி. ஏ. தம்பியின் மகளுக்குப் பிறந்தவரே மங்களம்பாள்.

இளமைக்காலம்[தொகு]

1884ம் ஆண்டு பங்குனி மாதம் 10ம் நாள் இவர் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தார். இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றது குறித்துத் தகவல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அக்கால உயர்குடி இந்துக்களின் வழக்கப்படி பெண்ணான இவருக்கு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டிருக்கக்கூடும். மாமனாரான பொன்னம்பலபிள்ளையின் ஒரே மகனான மாசிலாமணிப்பிள்ளையை மங்களம்மாள் திருமணம் செய்துகொண்டார். மாசிலாமணிப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "தேசாபிமானி" பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததுடன்,[1] இந்தியாவிலும், இலங்கையிலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டவர்.

திருமணத்துக்குப் பின்[தொகு]

மாசிலாமணிப்பிள்ளை அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்துவந்ததால் மங்களம்மாளும் இந்தியாவுக்குச் சென்றார். கணவரின் தூண்டுதலினால் மங்களம்மாள் காங்கிரசில் இணைந்து தீவிரமாக உழைத்தார். 1924ல் கோயில்பட்டியில் இடம்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெண்கள் அரங்குக்கு இவரே தலைமை தாங்கினார். 1927ல் மகாத்மா காந்தியின் முன்னிலையில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டிற்கான வரவேற்புக்குழுவில் இவரும் இருந்ததுடன், பெண்கள் அரங்கத்தில் வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்தியாவில், 1926க்கு முன்னர் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இது நீக்கப்பட்டபின்னர் சென்னை மாநகரசபைக்கு இடம்பெற்ற தேர்தலில் நீதிக் கட்சித் தலைவரான நாயுடுவை எதிர்த்து, எழும்பூரில் மங்களம்மாளைக் காங்கிரசுக் கட்சி நிறுத்தியது. அத்தேர்தலில் மங்களம்மாள் வெற்றி பெறாவிட்டாலும், யாழ்ப்பாணத்துப் பெண்ணொருத்தி தமிழ்நாட்டு அரசியலில் இந்த நிலையை அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

மங்களம்மாள் இந்தியாவில் இருந்த காலத்தில் 1923ல் பெண்களுக்கான "தமிழ் மகள்" என்னும் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். இவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்த பின்னரும் தொடர்ந்து இந்த இதழ் 40 ஆண்டுகாலம் ஒழுங்காக வெளிவந்தது. இதன் பின்னர், பல்வேறு காரணங்களினால், காலாண்டு, அரையாண்டு இடைவெளிகளிலேயே வெளியிட முடிந்தாலும் 1971ம் ஆண்டு 85 வயதில் அவர் இறக்கும்வரை இவ்விதழை அவர் வெளியிட்டு வந்தார். கடைசி இதழ் முற்றுப்பெறுமுன்னரே அவர் இறந்து விட்டாலும், அவ்விதழ் அட்டையில் அவரது படத்தையும், அவர் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கி அவரது நினைவாக வெளியானது.

குடும்பம்[தொகு]

மங்களம்மாள் மாசிலாமணிப்பிள்ளையின் மூத்த மகள் மகேசுவரிதேவி கலைப்புலவர் க. நவரத்தினத்தை மணந்தவர். A First Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை எழுதியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". பார்த்த நாள் 20 செப்டம்பர் 2015.

உசாத்துணைகள்[தொகு]

  • இராமலிங்கம், வள்ளிநாயகி., யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஒரு ஆய்வு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._மங்களம்மாள்&oldid=2880627" இருந்து மீள்விக்கப்பட்டது