மாயனூர் (தமிழ்நாடு)
மாயனூர் என்பது காவிரியின் தென் கரையில் அமைந்து புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கிறது. மாயனூர் என்ற சொல் 'மையம்' என்பதிலிருந்து மையனூர் - மாயனூர் என்றாகியுள்ளது. சங்க கால சேர, சோழ மற்றும் பாணடிய அரசர்கள் ஆட்சிபுரிந்த நிலப்பரப்பின் எல்லையாகவும் திகழ்ந்துள்ளது. இங்குள்ள மதுக்கரையானது (மதில்கரை) மூவேந்தர்களின் எல்லைப்புறச் சுவராக அமைந்து காவிரியின் தென்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி மதுரை வரை செல்கிறது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையானது என்று கூறப்படுகிறது.
அமைவிடம்[தொகு]
மாயனூரானது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் - 37-ல் (NH - 37) அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரானது காசா நகர், கீழ மாயனூர், புதுத்தெரு, மேல மாயனூர், கிளிஞ்சநத்தம் எனும் ஐந்து குக்கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
காவிரி ஆறு[தொகு]
மாயனூரில் 1.5 கிலோ மீட்டர் அகலத்துடன் காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்த அளவிற்கு அகலமாக அமையவில்லை. இவ்வாற்றின் குறுக்கே தமிழக அரசு 1.233 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலமும், தடுப்பணையும் கட்டியுள்ளது. இப்பாலம் கட்டும் பணி 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இப்பாலம் கட்டளைப் படுக்கை அணையிலிருந்து 250 மீட்டர் தொலைவில் இறங்கு முகமாக கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாயனூரையும், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சீலைப்பிள்ளையார் புதூரையும் இணைக்கின்றனது. இதனால் கரூர், திருச்சி, நாமக்கல் முதலான மாவட்டங்களுக்குச் செல்வதற்கான வாகன வழித்தடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நதிநீர் இணைப்பு[தொகு]
இப்பாலம் கட்டும் செயல்பாடானது நதிநீர் இணைப்புத் திட்டத்தை அடியொட்டி தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்குக் காலங்களில் 4.63 இலட்சம் கனஅடி நீரை வெளியேற்றும் திறன் கொண்ட மதகுகளும், 1.04 (டி.எம்.சி.) கனஅடி அளவு நீரை தேக்கி வைக்கும் திறனும் கொண்டது. இங்கிருந்து பாசனத்திற்குத் தென்புறக் கால்வாய், கட்டளை உயர்மட்டக் கால்வாய், கிருஷ்ணராயபுரம் கால்வாய் போன்ற வழித்தடங்களில் வேளாண் விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு அமைந்துள்ள கரையோரப் பூங்கா சிறுவர்கள் மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்குரிய வகையில் அமைந்துள்ளது.
கோவில்கள்[தொகு]
செல்லாண்டியம்மன் கோவில் மாயனூரைச் சுற்றியுள்ள மக்களுக்குப் புனிதத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள அம்மன் தலையைச் சாய்த்த வண்ணம் அமைந்து காட்சியளிக்கிறது. இக்கோயில் பொன்னர்-சங்கர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையதாகவும், பொன்னர்-சங்கரின் குல தெய்வமாகவும் விளங்கியுள்ளது. இவ்வரலாறு தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய நூலின் வழி பல தகவல்களை அறியமுடிகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் காவிரியில் புனித நீராடி அம்மனை வணங்கி இறையருளைப் பெறுகின்றனர். தாங்கள் மேற்கொண்டு இருக்கும் தொழில் செயல்களில் அமைதியும், மகிழ்ச்சியும் வாழ்வில் முன்னேற்றமும் அடைவதற்கு காவிரித்தாயையும், செல்லாண்டி அம்மனையும் வணங்கி மகிழ்கின்றனர்.
இக்கோயில் மட்டுமின்றி கீழமாயனூரில் தானாய் வளர்ந்த மாரியம்மன் கோவிலும், கிளிஞ்சநத்தத்தில் திருமாரியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு ஏப்ரல் அலலது மே மாதங்களில் ஐந்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தொழில் வளர்ச்சி[தொகு]
1983ம் ஆண்டு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் வாயிலாக சிமெண்ட் கல்நார் அட்டையும், சிமெண்ட் கல்நார் குழாயும் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிறுவனம் 2001 வரை மிக அதிய வருமானத்தை ஈட்டி வந்துள்ளது. 2001 இல் அரசியல் நிலைபாட்டின் காரணமாக முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2016 முதல் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மூலமாக இயங்கி வருகின்றது. தற்பொழுது காகிதக் கழிவுகளிலிருந்து மதிப்பூக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இப்பகுதியில் கே.சி.பி. பையகப்படுத்துதல், பென்னர் இந்தியா ஜவுளி நிறுவனம், முத்து துணி நூற்பு ஆலை முதலான தனியார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
போக்குவரத்து[தொகு]
இருபத்து நான்கு மணி நேரமும் சாலை மற்றும் தொடர்வண்டி சந்திப்பு வாயிலாக போக்குவரத்து வசதிகள் நிறைவாக உள்ளன. மாயனூர் இரயில் நிலையத்தில் இரண்டு நடைபாதைகள் செயல்பட்டு வருகின்றன.
சந்தை[தொகு]
திங்கள்கிழமை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை சந்தை கூடுகிறது. 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இச்சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கல்வி நிலையங்கள்[தொகு]
தமிழகத்தின் பழைமையான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இங்கு அமைந்துள்ளது. இது 1988-89ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு ஆசிரியர் கல்வி சார்ந்த பயிற்சிகள், ஆய்வுகள், கல்வியில் புதுமைகளைப் புகுத்துதல் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளைப் பொறுத்த வரையில் அரசு உயர்நிலைப்பள்ளி, டான்சம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளிகள் என கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.