உள்ளடக்கத்துக்குச் செல்

மாமண்டூர் உருத்தரவாலீசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்தது மாமண்டூர். இங்கே அமைந்துள்ள சித்திரமேகத் தடாகம் என்னும் ஏரியை அண்டி அமைந்துள்ள குன்றுகளில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட நான்கு குடைவரைகள் காணப்படுகின்றன. இவற்றில் முற்றுப் பெற்ற நிலையிலுள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றே உருத்திரவாலீஸ்வரம் என்னும் சிவாலயம் ஆகும்.

இக் குடைவரையை அமைத்தது யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இதன் கட்டிடக்கலைப் பாணியை ஆராய்ந்தும், இதன் அண்மையிலுள்ள இதே போன்ற குடைவரையில் கிடைத்த கல்வெட்டு ஒன்றை அடிப்படையாக வைத்தும், இது முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ஒரு சிவன் கோயில் எனப்பட்டாலும், இங்கே மும்மூர்த்திகளும் வைத்து வணங்கப் பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இக் குடைவரையின் நுழைவாயிலில் இரண்டு பக்கச் சுவர்களையும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், இவற்றுக்கிடையே இரண்டு முழுத்தூண்கள் தனித்தூண்களாகவும் காணப்படுகின்றன. இதனால் மூன்று நுழைவழிகளைக் கொண்டதாக இக் கோயில் அமைந்துள்ளது. இத் தூண் வரிசைக்குப் பின்னால் முன் வரிசைத் தூண்களுக்கு நேராக மேலும் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் அமைந்துள்ளன. இந்த அமைப்பானது, குடைவரையின் உட் புறத்தை அர்த்த மண்டபம், மகாமண்டபம் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. வெளி மண்டபத் தளம், உள் மண்டபத் தளத்திலும் சற்று உயரமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

வாயிலுக்கு எதிரான பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் வாயிலிலும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வாயிற்காப்போர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]