மான்ட்டிபுல்சியனோவின் ஆக்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மான்ட்டிபுல்சியனோ
புனித ஆக்னெஸ்
பிறப்பு1268
டஸ்கனியின் மான்ட்டிபுல்சியனோ
இறப்பு1317
டஸ்கனியின் மான்ட்டிபுல்சியனோ
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
புனிதர் பட்டம்திருத்தந்தை 13ம் பெனடிக்ட்-ஆல் 1726
திருவிழாஏப்ரல் 20


மான்ட்டிபுல்சியனோ புனித ஆக்னெஸ், (இத்தாலியன்: Agnese Segni di Montepulciano, 1268–1317) டொமினிக்கன் துறவற சபையைச் சார்ந்த அருட்சகோதரியும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

தொடக்க காலம்[தொகு]

ஆக்னெஸ், இத்தாலி நாட்டின் மான்டிபல்சியானோ அருகில் உள்ள க்ராசியோவைச் சார்ந்த உயர்ந்த குடும்பத்தில் 1268ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே டொமினிக்கன் துறவற சபையின் மடத்தில் இணைந்தார்.

அதன் பிறகு 1281ஆம் ஆண்டு, இவர் ப்ரொக்கெனோ நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ஆம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

அற்புதங்கள்[தொகு]

"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.

ஆக்னெஸ் இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.

புனிதர் பட்டம்[தொகு]

மான்ட்டிபுல்சியனோ புனித ஆக்னெசின் அழியாத உடலும் அது வைக்கப்பட்டுள்ள கோவில் பீடமும்

1306ஆம் ஆண்டு, ஆக்னெஸ் டொமினிக்கன் மடம் ஒன்றை நிறுவினார். இந்த மடத்தில்தான் தான் இறக்கும் வரை இவர் வாழ்ந்தார். 1317ல் இவர் இறந்தப் பின்பு, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.

1726ஆம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்ட்டிபுல்சியனோ புனித ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]