மாக்காசார் நீரிணை
மாக்காசார் நீரிணை (Makassar Strait) என்பது, இந்தோனீசியத் தீவுகளான போர்னியோவுக்கும், சுலவேசிக்கும் இடையில் அமைந்துள்ள நீரிணையாகும். வடக்கில் இது செலெபெசுக் கடலுடனும், தெற்கில் சாவாக் கடலுடனும் இணைகிறது. போர்னியோவின் மகாக்கம் ஆறு இந்த நீரிணைக்குள்ளேயே கலக்கிறது. இந்த நீரிணையில், போர்னியோத் தீவில் பாலிக்பாப்பான் துறைமுகமும், சுலவேசித் தீவில் மாக்காசார், பாலு ஆகிய துறைமுகங்களும் உள்ளன. மகாக்கம் ஆற்று வழியே நீரிணையில் இருந்து 48 கிமீ தொலைவில் சமாரிண்டா நகரம் அமைந்துள்ளது.
மலாக்கா நீரிணை ஊடாகச் செல்ல முடியாத அளவு பெரிய கப்பல்கள் செல்வதற்கான ஒரு வழியாக இந்த நீரிணை பயன்படுத்தப்படுகிறது.
அளவு[தொகு]
பன்னாட்டு நீரியல்வரைவு நிறுவனம் மாக்காசார் நீரிணையை, கிழக்கிந்தியத் தீவுக்கூட்ட நீர்பகுதியில் உள்ள ஒன்று என வரையறுக்கிறது. இந்நிறுவனத்தின் வரையறைகளின்படி மாக்காசார் நீரிணையின் எல்லைகள் வருமாறு::[1]
போர்னியோவின் கிழக்குக் கரைக்கும், சுலவேசியின் மேற்குக் கரைக்கும் இடையில், வடக்கில் போர்னியோவில் உள்ள தாஞ்சோங் மாங்காலிகாதையும் (1°02′N 118°57′E / 1.033°N 118.950°E), சுலவேசியில் உள்ள இசுத்துரோமன் காப்பையும் (1°20′N 120°52′E / 1.333°N 120.867°E) இணைக்கும் கோட்டையும், தெற்கில் சுலவேசியின் தென்மேற்கு அந்தலை (5°37′S 119°27′E / 5.617°S 119.450°E), தானா கேக்கேயின் தெற்குப் புள்ளி, லாவுத் தீவின் தெற்கு முனை (4°06′S 116°06′E / 4.100°S 116.100°E), அத்தீவின் மேற்குக் கரையில் உள்ள தாஞ்சோங் கிவி, போர்னியோவில் உள்ள தாஞ்சோங் பெட்டாங் (3°37′S 115°57′E / 3.617°S 115.950°E) ஆகியவற்றை இணைக்கும் கோடுகள் என்பன நீரிணையின் எல்லைகளாக உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. 8 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 February 2010 அன்று பார்க்கப்பட்டது.