மல்லிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை (சஞ்சிகை) பக்கத்துக்குச் செல்லுங்கள்.


மல்லிகை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்குந்தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Jasmine
இனம்: J. sambac
இருசொற் பெயரீடு
Jasminum sambac
(L.) Aiton

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் இது பயன்படுகிறது. இது மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய பயன்படுகிறது. இம்மலர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது, தடித்தது ஆகியனவாகும். இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி, இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

ஜாஸ்மினம்[1] என்று பண்டைய ஃபிரஞ்சு[2] மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு"[3][4][5] எனப் பொருள்படுவதாகவும் அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள், கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.

பயிரிடலும் பயன்பாடுகளும்[தொகு]

வணிகத்திற்காக பூப்பண்ணைகளிலும், அழகுக்காவும் பணியிடங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. திருமண, மதச் சடங்குகளிலும், பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவும் பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இதனை " குண்டு மல்லி " எனவும், ஆந்திர மாநிலத்தில் "குண்டு மல்லே " எனவும் அழைக்கின்றனர். பிற நாடுகளில் இதனை அரபு மல்லி(Arabian jasmine) என அழைக்கின்றனர்.

மல்லிகைத் தேநீர்[தொகு]

சீனாவில் மல்லிகைத் தேநீரைப் பருகுகின்றனர். [6][7][8]அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் (茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா) என்றழைக்கிறார்கள். இந்திய தாயக மலர்களில் ஒன்றான அரபு மல்லி என்று உலகின் பல இடங்களிலும் அழைக்கப்படும் மல்லிகை இனத்திலிருந்து இத்தேநீர் உருவாக்கப்படுகிறது.

மல்லிகை இனிப்புக் கூழ்[தொகு]

ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக்கூழ் புகழ் பெற்றது. பெரும்பாலும், மல்லிகை மலர்ச்சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக்கூழ் சிறுரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது.

மல்லிகைச் சார எண்ணெய்[தொகு]

மல்லிகைச் சார எண்ணெய் பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது.

தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணெய்க்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணெயில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச்சார எண்ணெய் தயாரிக்கும் நாடுகளில் சில இந்தியா, எகிப்து, சீனா மற்றும் மொரோக்கோ ஆகியவை.

வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படும் மல்லிகைத் தனிமானி[தொகு]

இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல் மற்றும் சிகேடோல் ஆகியவற்றை உள்ளடக்கும். மல்லிகையின் பல இனங்கள் ஒரு தனிமானியையும் நல்குகின்றன. இது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உருவாக்கப் பயன்படுகிறது.

இதனையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sunset Western Garden Book, 1995:606–607
  2. http://www.thinkbabynames.com/meaning/0/Jasmin
  3. "jasmine." Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002.
  4. "jasmine" Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002.
  5. Metcalf, 1999, p. 123
  6. https://www.mdpi.com/1420-3049/22/4/546
  7. https://www.teatulia.com/tea-varieties/what-is-jasmine-tea.htm
  8. https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/jasminum-sambac
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகை&oldid=3815328" இலிருந்து மீள்விக்கப்பட்டது