ப. அ. தோமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. அ. தோமசு
B. A. Thomas
இறை ஊழியர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு6 சனவரி 1912
பிற தகவல்கள்
பிறப்பு(1886-03-07)7 மார்ச்சு 1886
பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 26, 1964(1964-01-26) (அகவை 77)
யாழ்ப்பாணம்
கல்லறையாழ்ப்பாணம்
குடியுரிமைஇலங்கைத் தமிழர்
சமயம்கத்தோலிக்கம்
பெற்றோர்பஸ்தியாம்பிள்ளை, லூயிசு அம்மாள்
படித்த இடம்யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி

தோலகட்டி சுவாமி என அழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய ப. அ. தோமசு அடிகள் (B. A. Thomas, 7 மார்ச் 1886 - 26 சனவரி 1964) செபமாலை துறவற சபையை ஆரம்பித்தவர். ஆசியாவிலேயே முதல் தியான யோகசபையான செபமாலைத்தாசர் சபையை தோலகட்டி என்ற இடத்தில் ஆரம்பித்தவர்.[1] கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு ஆரம்ப நிலையான இறை ஊழியர் என்ற நிலையை திருச்சபையின் உயர் பீடத்தில் இருந்து பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் யாழ்ப்பாண நகரில் பாண்டியன்தாழ்வு என்ற ஊரில் பஸ்தியாம்பிள்ளை, லூயிசு அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் தோமசு அடிகளார்.[1] தந்தை பஸ்தியாம்பிள்ளை பாண்டியன்தாழ்வில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தை நிறுவியவர். தோமசு அடிகள் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார். யாழ்ப்பாண நகரில் பிரபலமான புனித மடுத்தினார் குருமடத்தில் சேர்ந்து இறைப்பணியில் ஈடுபட்டார். ஆங்கிலம், இலத்தீன், தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். 1912 சனவரி 6 இல் குருத்துவத் திருநிலைக்கு உயர்த்தப் பெற்றார்.[2]

சம்பத்தரிசியார் கல்லூரியில் இந்து விடுதி மாணவர்களுக்கு பொறுப்பாளராக யாழ்ப்பாண ஆயராக இருந்த அல்பிரட் கியோமர் அவர்களினால் நியமிக்கப்பட்டார். தோமசு அடிகளின் வாழ்வினால் கவரப்பட்ட பல இந்து மாணவர்கள் கத்தோலிக்கர்களாக மதம் மாறினார்கள்.

தோலகட்டி ஆசிரமம்[தொகு]

முதலாம் உலகப் போரின் பின்னரான காலகட்டத்தில் இறை பக்தியும் மனித நேயமும் பல உலக நாடுகளில் வற்றியிருந்த காலத்தில், திருத்தந்தை பதினொராம் பத்திநாதர் 1926 பெப்ரவரி 8இல் “திருச்சபை சார்ந்த மறை உண்மை” (Rerum Ecclesiae) என்ற புகழ்மிக்க சுற்றுமடலை வெளியிட்டார்.[3] இச்சுற்றுமடலில் அவர் மறைபரப்பணி நாடுகளில் மௌன தியான துறவறச்சபைகளின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இதன் ஒரு செயல்திட்டமாக, யாழ்ப்பாண ஆயர் கியோமரின் பணிப்பில், தோமசு அடிகள், 1928 பெப்ரவரி 2ல் ஆறு தியானயோக சாதகர்களுடன் வடமராட்சியில் வசாவிளான் என்ற இடத்தில் தோலகட்டி செபமாலைத்தாசர் மௌன சபையை ஆரம்பித்தார்.[1] இச்சபைக்குத் தற்போது இலங்கையில் கொச்சிக்கடை, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி ஆகிய இடங்களில் நான்கு ஆச்சிரமங்களும், இந்தியாவில் பதினொரு ஆச்சிரமங்களும் உள்ளன. செபமாலைக் கன்னியருக்கும் துறவு சபை ஒன்றை 1948 ஆகத்து 22 ஆம் நாள் ஆரம்பித்தார்.

தோமசு அடிகளின் இறப்பின் பின்பு இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை இவரைப் புனிதராக்கும் நிலைக்கு 1984ம்ஆண்டில் பரிந்துரைத்தார்கள்.[1] ஈழப்போர்க் காலத்தில் அடிகளின் சமாதி தோலகட்டியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்தமையால் அரசாங்கத்தின் அனுமதியுடன், 2004 மார்ச் 8ஆம் நாள் அவருடைய உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் அருள் ஆச்சிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "தவத்திரு தோமஸ் அடிகளார்". TCNL - The first Tamil Catholic website of Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2015-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151016185810/http://www.tcnlnet.com/rosarian-founder-revbathomas.html. பார்த்த நாள்: 29 ஆகத்து 2015. 
  2. ம. டொன் பொஸ்கோ (26 சனவரி 20114). "ஆசியாவின் உதயசூரியன் வ.அ.தோமஸ் அடிகளார்". தினகரன். http://archives.thinakaran.lk/Vaaramanjari//2014/01/26/?fn=f1401261. பார்த்த நாள்: 29 ஆகத்து 2015. 
  3. "RERUM ECCLESIAE - ENCYCLICAL OF POPE PIUS XI". Libreria Editrice Vaticana. http://w2.vatican.va/content/pius-xi/en/encyclicals/documents/hf_p-xi_enc_28021926_rerum-ecclesiae.html. பார்த்த நாள்: 29 ஆகத்து 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அ._தோமசு&oldid=3439972" இருந்து மீள்விக்கப்பட்டது