போர்வை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்வை (ஊர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது.

போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம் கட்டூர் எனப்பட்டது.

காவிரி ஆற்றிலிருந்து பிரிந்த வாய்க்கால் புதவு என்னும் மதகடைப்புப் பலகையின் வழியாக ஓடி இந்த ஊரின் படப்பை நிலத்தை வளப்படுத்தியதாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.

காவிரி ஆற்றிலிருந்து உய்யக்கொண்டான் ஆறு பிரியும் இடத்திலுள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊரே இந்தப் போர்வை என்னும் ஊர். காவிரியாற்று நீர் உய்யக்கொண்டான் ஆற்றுப் புதவத்தில் பொரூஉம் இடம் போஒர். பயிர்களை விளைவித்து மக்களை உய்யக்கொண்ட ஆறு உய்யக்கொண்டான் என்னும் பெயரைப் பெற்றது.

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆட்சி[தொகு]

சோழ அரசன் தித்தன் உறையூரில் ஆண்டுகொண்டிருந்தபோது அவன் மகன் கோப்பெருநற்கிள்ளி இவ்வூரின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இந்தக் கிள்ளி ஆமூர் மல்லனை மற்போரில் வீழ்த்தியவன். நக்கண்ணையார் என்னும் புலவர் இவன்மீது கொண்டிருந்த ஒருதலைக்காமம் என்னவாயிற்று என விளங்கவில்லை.

பழையன் ஆட்சி[தொகு]

சோழன் இந்த ஊரை ஆளும் உரிமையைத் தன் படைத்தலைவன் பழையன் என்பவனிடம் ஒப்படைத்திருந்தான்[1].

செங்கணான் போர்[தொகு]

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னன் சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புறம் என்னும் ஊரில் போரிட்டபோது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு ஒன்று புறநானூற்றில் உள்ளது.[2] [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வென்வேல் இழையணி யானைச் சோழன் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப் புனல்மலி புதவின் போஒர் கிழவோன் பழையன் ஓக்கிய வேல் – பரணர் அகநானூறு 326
  2. சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடியது புறநானூறு 74
  3. இந்தத் திருப்போர்புறம் தஞ்சை மாட்டத்திலுள்ள 'கோவிலடி' என்னும் ஊர் என்றும். இவ்வூர் கல்வெட்டுகளில் 'திருப்பேர்த் திருப்புறம்' என்று குறிப்பிடப்படுவதாகவும் கூறுகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்வை_(தமிழ்நாடு)&oldid=2565850" இருந்து மீள்விக்கப்பட்டது