பொம்மன்பட்டி
பொம்மன்பட்டி : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூர். பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தது. நாமக்கல்லிருந்து சேலம் செல்லும் சாலை ஐந்து கல் தொலைவில் உள்ள முதலைப்பட்டி என்னும் ஊருக்கு அருகிருந்து மேற்கே ஏழு கல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் சாதியினர் மிகுதியாக வாழ்கின்றனர். அவர்களின் பொதுத் தெய்வம் பொம்மக்கா. ஒரு குலத்திற்குரிய குலதெய்வம் பொம்ம தேவர். அச்சாதியினரில் பலருக்குப் பொம்மன் எனப் பெயருண்டு. ஆகவே பொம்மன் என்னும் தனி நபரின் பெயரைச் சிறப்புக்கூறாகக் கொண்டும் பட்டி என்னும் பொதுக்கூறைக் கொண்டும் இவ்வூர்ப் பெயர் உருவாகி உள்ளது. இங்கு அருந்ததியர் சாதியினரும் அதிகம் வசிக்கின்றனர். முக்கியத் தொழில் உழவும் கோழிப் பண்ணையும் ஆகும். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.