பொங்கு ஊற்று நீரகம்



பொங்கு ஊற்று நீரகம் அல்லது ஆர்ட்டீசிய நீரகம் (artesian acquifier) என்பது நேர்முறை அழுத்தத்துடன் கூடிய நீர்மம் கொண்ட பாறைப் படுகைகளாகும். அப்படிப்பட்ட நீரகத்தில் தோண்டப்பட்ட கிணறுகள் பொங்கு ஊற்றுக் கிணறுகள் (artesian wells). பொங்கு ஊற்றுக் கிணறு என்பது தரையிலிருந்து தானாகவே பீரிட்டெழுகிற நீருற்று ஆகும். தரைக்கடியில் சிக்கியிருக்கிற நிலத்தடி நீரே இவ்வாறு வெளிப்படுகிறது. பிரான்சில் உள்ள ஆர்ட்டாயிஸ் பிரதேசத்தில் இவ்வாறான ஓர் ஊற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1126 ஆண்டு முதல் நிறைய பொங்கு ஊற்றுக் கிணறுகள் அங்கு தோண்டப்பட்டன.[1] அதன் காரணமாக இவை ஆர்ட்டீசியன் ஊற்றுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
தேவையான சூழ்நிலை[தொகு]
பொங்கு ஊற்றுகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே உண்டாகும். தண்ணீர் புகாத கெட்டியான பாறைகளாலான இரண்டு அடுக்குகளுக்கு நடுவில் நுண்துளைகளுள்ள பாறைப்படலம் அல்லது மணல் இருக்க வேண்டும். இந்தப் படலம் எங்காவது ஓரிடத்தில் தரைமட்டத்தில் திறந்திருக்க வேண்டும். அங்கு பெய்யும் மழை நீர் இந்தப் படலத்தில் ஊறி நிறைய வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்ட நீர் இரண்டு கெட்டிப் பாறைப் படல அடுக்குகளுக்குள் சிறைப்பட்டிருக்கும். பொங்கு ஊற்றுக் கிணறு ஏற்படுகிற இடத்தை விட உயர்ந்த மட்டங்களில் இந்த நிலத்தடி நீர்மட்டம் அமைந்திருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் தாழ்வான ஓரிடத்தில் மேலாக உள்ள கடினப் பாறையில் சில அங்குல விட்டத்திற்குச் செங்குத்தாகத் துளையிட்டால் அந்தத் துளையிலிருந்து தண்ணீர் பீரிட்டெழுந்து வெளிப்படும்.
1877 இல் இந்திய நிலப்பொதியியல் கழகம் டபிள்யூ. கிங்கின் தலைமையில் புதுச்சேரியைச் சுற்றியுள்ள பொங்கு ஊற்றுக் கிணறுகளை அளவை செய்தது. 1934இல் அன்றைய சென்னை மாகாணத்தில் தொழில் துறையின் சார்பில் தண்ணீர் தேவைக்காக நெய்வேலியில் பொங்கு ஊற்றுக் கிணறுகள் தோண்டப்பட்டன.[2] உலகிலேயே ஆஸ்திரேலியாவில் அதிமான பொங்கு ஊற்றுக் கிணறுகள் காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Frances Gies and Joseph Gies, Cathedral, Forge, and Waterwheel subtitled "Technology and Invention in the Middle Ages". Harper Perennial, 1995 ISBN 0-06-016590-1, page 112.
- ↑ "THE LIGNITE LEGEND OF TAMIL NADU" இம் மூலத்தில் இருந்து 2016-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160626010025/https://www.nlcindia.com/index.php?file_name=about_01a. பார்த்த நாள்: 25 மார்ச் 2016.
- ↑ "artesian well". http://www.infoplease.com/encyclopedia/science/artesian-well.html. பார்த்த நாள்: 25 மார்ச் 2016.