பெர்தோல்ட் பிரெக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்தோல்ட் பிரெக்ட்
பிறப்பு(1898-02-10)10 பெப்ரவரி 1898
ஆக்ஸ்பெர்க், செருமானியப் பேரரசு
இறப்பு(1956-08-14)14 ஆகத்து 1956 (அகவை 58)
மிட்டு, கிழக்கு பெர்லின், செருமன் சனநாயகக் குடியரசு
தொழில்நாடகாசிரியர், நாடக இயக்குனர் ,கவிஞர்
வகைஅரிசுட்டாலின் வகைக்கு எதிரானது ·
எபிக் நாடகவகை · நிகழ்காவிய அரங்கு
குறிப்பிடத்தக்க படைப்புகள்த த்ரீ பென்னி ஓப்பரா
லைஃப் ஆஃப் கலிலியோ
துணிவு அன்னையும் அவர் மக்களும்
சேஸ்வானின் நல்ல மனிதன்
த காக்காசியன் சாக் சர்க்கிள்
த ரெசிஸ்டபள் ரேஸ் ஆஃப் ஆர்துரோ உயி
துணைவர்மாரியான் சோஃப் (1922–1927)[1]
ஹெலன் வீகல் (1930–1956)
பிள்ளைகள்பிரான்க் பான்ஹோல்சர் (1919–1943),
ஹண் ஹியோப் (1923–2009),
ஸ்டீஃபன் பிரெக்ட் (1924–2009),
பார்பரா பிரெக்ட்-ஷால் (பி. 1930)
கையொப்பம்

பெர்தோல்ட் பிரெக்ட் (ஆங்கில மொழி: Bertolt Brecht) (/brɛkt/;[2][3] பிறப்பு About this soundஐகன் பெர்தோல்ட் பிரெட்ரிக் பிரெக்ட் ; 10 பெப்ரவரி 1898 – 14 ஆகத்து 1956) ஒரு செருமானிய கவிஞரும் நாடகாசிரியரும் நாடக இயக்குனரும் ஆவார்.[4]

இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ள பிரெக்ட் நாடக வடிவாக்கலில் புதுமையை மேற்கொண்டு நிகழ்காவிய அரங்கு என்ற நாடக வகையை உருவாக்கினார். பிரெக்டும் அவரது மனைவி ஹெலன் வீகலும் இணைந்து இயக்கிய பெர்லினர் ஆன்செம்பிள் என்ற நாடக கம்பனி பல இடங்களுக்கும் பயணித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[5]

வாழ்கை வரலாறு[தொகு]

பிரெக்ட் 1898 ஆம் ஆண்டு செர்மனிப் பேரரசின் ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிறிய காகித ஆலையொன்றின் நிர்வாக இயக்குநர்; தாயார் பிளேக்ஃபாரஸ்ட் பகுதியில் பணிபுரிந்த ஓர் அரசாங்க அலுவலரின் மகள். முதல் உலகப் போர் தோடங்கியபோது, பிரெக்ட் மாணவராக இருந்தார். அப்போதே இவர் துணிச்சலாகப் போர் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிட்டார். மியூனிச் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்கலைக் கழக மரபுகளுக்கு மாறான பணிகளில் ஈடுபட்டதோடு, ஒரே சமயத்தில் பலபெண்களைக் காதலிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். இவ்வழக்கம் அவர் வாழ்நாளில் இறுதிவரை தொடர்ந்தது.[6]

கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். 1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார், ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளில் ஏழாண்டுகள் எளிய வாழ்க்கை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார். 1941-ஆம் ஆண்டு உருசியநாடு வழியாகப் பயணம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவை அடைந்தார்.

உருசியாவில் பயணம் செய்த காலத்தில் அந்நாட்டில் ஏற்பட்டிருந்த திட்டமிட்ட முன்னேற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். தன்னை அறியாமல் இவர் உள்ளம் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டது. இவருடைய படைப்புக்களில் மார்க்சீயத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார். ஹாலிவுட்டில் திரைப்படத் தொழிலில் ஈடுகடத் தீவிரமாக முயன்று அம்முயற்சியைக் கைவிட்டார். 1947-ஆம் ஆண்டு அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கை விசாரணைக் குழுவின் (Un-American Actryities Committee) முன் வருகைத் தரும்படி அமெரிக்க அரசாங்கம் அவரைப் பணித்தது. அக்குழு கேட்ட கேள்விக்குக் குதர்க்கமான வாக்குமூலங்களை வழங்விட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேறிக் கிழக்கு ஜெர்மனியை அடைந்தார். அங்கு தம் மனைவியோடு சேர்த்து புகழ்மிக்க பெர்லினிய இசைக்குழுவைத் தோற்றுவித்தார்.

கிழக்கு ஜெர்மனி அப்போது ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த நேரமாகும். ஸ்டாலினிய அதிகாரிகளோடு பிரெக்டால் ஒத்துப் போக முடியவில்லை. அடிக்கடி அவர்களோடு பூசலும், புகைச்சலுமாகவே இவர் இறுதி வாழ்க்கை கழிந்தது. 1956-ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி ஹூகதாட் இடுகாட்டுக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார்.[6]

இலக்கியப் பணிகள்[தொகு]

பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டபோது. அங்கு பொழுது போக்கு அரங்குகளிலும், விடுதிகளிலும் நாடோடிப் பாடகராகச் சிலகாலம் புகழ்பெற்றார். அன்றையப் பிற்போக்கு நாடகங்களைத் தாக்கிப் பத்திரிகைகளில் விமரிசனம் எழுதினார். பின்னர் இவரே நாடகம் எழுதிப் புகழ் பெறத் தொடங்கினார். 1924 முதல் 1933 வரை பெர்லின் நாடக உலகில் துடிப்போடு இயங்கினார். சிறந்த இசைப் புலவரான 'குர்த்வீல்' என்பாரின் துணையோடு ‘மூன்று பென்னிய இசைநாடகம்’ (The Three Penny Opera) என்ற சிறந்த படைப்பை வெளியிட்டார். அந்நாடகம் பெர்லினில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அது எல்லாராலும் விரும்பி நடிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார்.[6]

நாடக ஆசிரியராக விளம்பரம் பெற்ற பிறகே இவர் கவிதை எழுதத் தொடங்கினார். மதம், அரசியல் சமுதாயம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை மக்கள் கண் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாடகமே சிறந்த சாதனம் என்பதை இவர் அறிந்திருந்தாலும், அன்றாட உண்மைகளைச் சொல்லோவியங்களாக மாற்றி மக்கள் நாவில் நடமாட விடுவதற்குக் கவிதை விறுவிறுப்பான சாதனம் என்பதையும் அறிந்திருந்தார். பிரெக்ட், கவிதையின் எல்லாச்சட்டதிட்டங்களையும் உடைத் தெறிந்துவிட்டு எழுதினார். சாமான்யர்களிடையில் காணப்பட்ட சாதாரணப் படிமங்களையே (Common Place Images) இவர் தமது கவிதைகளில் கையாண்டார். மேலும் இவர் பாடல்கள் பிரச்சார அடிப்படையிலேயே- குறிப்பாக மார்க்சீயச் சிந்தனை- அமைந்திருந்தன.

யாப்பமைதியோடு கூடிய தன்னுணர்ச்சிப் பாடல்களை இவர் அரிதாகவே எழுதினார். தொடர்களை உடைத்தெழுதும் துண்டுக் கவிதையையே (Official back- verse) இவர் விரும்பிக் கையாண்டார். ப்ரெக்டின் கவிதை முதன் முதலாக வெளியான போது, அதற்குப் பலமான எதிர்ப்பு இருந்தது. அதைக் கவிதையென்று யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் பிரெக்டை ஒரு சிறந்த கவிஞர் என்பதை விட, ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே இலக்கியத் திறனாய்வாளர்களுள் ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் சிறந்த கவிஞருக்குரிய எல்லாப் பண்புகளும் பிரெக்டிடம் இருப்பதாக வாதிடுகின்றனர்.[6]

பிரெக்டின் கவிதையாற்றலுக்கு மூலமாக விளங்கியவர்கள் லூதரும், கிப்ளிங்கும் ஆவர். இவர்களையும்விட ஆர்தர் வேலியின் சீனக்கவிதை மொழிபெயர்ப்புகள், பிரெக்டின்மீது அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. அம்மொழிபெயர்ப்புகள் ஒரு புதிய நடையைத் தம்மிடத்தில் தோற்றுவித்துக் கொள்ளப் பிரெக்டிற்குப் பெரிதும் உதவின் இவரும் சில சீனப்பாடல்களை மொழிபெயர்த்ததோடு, அதே பாணியில் தாமே சில கவிதைகளும் எழுதியுள்ளார். சீன மொழிபெயர்ப்புகளின் தொடர்பால் பிரெக்டின் கவிதைகளும் ஹைக்கூவைப் போலவும் டங்காவைப் போலவும், சுருக்கமும் சித்திரத் தன்மையும் பெற்றன. அதற்கு எடுத்துக்கட்டாக இவர் எழுதியுள்ள சிங்கக் கவிதை (To a Chinese Tea Root Lion) குறிப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100924064055/http://german.wisc.edu/brecht/chronology.html. 
  2. Brecht, Random House Unabridged Dictionary
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924135712/http://www.oxforddictionaries.com/us/definition/american_english/Brecht-Bertolt?q=Brecht. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151206061518/http://www.yourdictionary.com/brecht. 
  5. இந்த அறிமுகத்திற்கான மூலங்கள்: Banham (1998, 129); Bürger (1984, 87–92); Jameson (1998, 43–58); Kolocotroni, Goldman and Taxidou (1998, 465–466); Williams (1993, 277–290); Wright (1989, 68–89; 113–137).
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல் (அன்னம் (பி)லிட்): pp. 117-124. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D. பார்த்த நாள்: 11 சூன் 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்தோல்ட்_பிரெக்ட்&oldid=3691448" இருந்து மீள்விக்கப்பட்டது