உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூரு கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரு கால்பந்துக் கழகம்
முழுப்பெயர்பெங்களூரு கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)த புளூசு
தோற்றம்20 சூலை 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-07-20)
ஆட்டக்களம்ஸ்ரீ காண்டீரவா அரங்கம், பெங்களூர்
ஆட்டக்கள கொள்ளளவு24,000
உரிமையாளர்ஜே.எஸ்.டபிள்யூ குழுமம்
மேலாளர்ஆல்பர்ட் ரோகா
இணையதளம்கழக முகப்புப் பக்கம்


பெங்களூரு கால்பந்துக் கழகம் கர்நாடக  மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு கால்பந்தாட்டக் கழகமாகும். இக்கழகம் இந்தியாவின் தலை சிறந்த கால்பந்தாட்டப் போட்டித் தொடரான ஐ-லீக்கில் விளையாடுகிறது. இக்கழகத்தின் இப்போதைய உரிமையாளர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜே.எஸ்.டபிள்யூ குழுமமாகும்[1]. 24000 இருக்கைகளைக் கொண்ட ஸ்ரீ காண்டீரவா அரங்கம் இவர்களின் தாய் அரங்கமாகும்.

2013ஆம் ஆண்டு சூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த அணி ஆங்கில கால்பந்துக் கழகங்களின் வழியில் செயல்பட்டு வருகிறது. துவக்கம் முதலே சமூகத்தின் பங்களிப்போடு மக்களின் ஈடுபாட்டை வளர்க்கும் விதமாக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர்களிடம் கால்பந்து ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பி.எப்.சி கால்பந்து பள்ளியை ஆரம்பித்தது. 


வரலாறு[தொகு]

துவக்கம்[தொகு]

2013ஆம் ஆண்டு சனவரி மாதம் மும்பை டைகர்சு அணி (அன்றைய டோட்சால் கால்பந்துக் கழகம்) அந்த ஆண்டுக்கான இரண்டாம் நிலை ஐ-லீக் போட்டிக்கான பதிவை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது. அதற்கு ஈடாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு நேரடி பணப் பரிவர்த்தனை மூலமும் 2017ஆம் ஆண்டுக்குள் அவர்களது தாய் நகரமான மும்பையில் ஒரு கால்பந்து அரங்கம் அமைப்பது என்ற உறுதியின் பேரிலும் நேரடியாக முதல் நிலை ஐ-லீக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றது. இதே நேரத்தில் நிறுவன அணிகளான ஏர் இந்தியா கால்பந்துக் கழகம் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியற்றின் பங்கேற்பும் கேள்விக்குறியாய் இருந்தது. எனவே 2013-14ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் போட்டிகளில் தனியார் நிறுவங்களின் அணிகளை நேரடியாக முதல் நிலைப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது[2]

2013ஆம் ஆண்டு சனவரி 15 அன்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட செய்தியின்படி, தனியார் நிறுவங்களின் இரு அணிகள் ஏர் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியற்றின் இடத்தை நிரப்பும் என்றும் அதற்கான ஒப்போலை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அணிகளுக்கு உரிமை கோரும் நிறுவனங்கள் தனது தாய் நகரங்களாக கோவா, கொல்கத்தா தவிர்த்த மற்ற நகரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது[3]

புதிய அணிகளுக்காக ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், டோட்சால் குழுமம் மற்றும் கேரளாவைச் சார்ந்த கூட்டமைப்பு ஆகிய மூன்று விண்ணப்பங்கள் வந்திருந்தன[4]. அதே ஆண்டு மார்ச் 28 அன்று ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் புதிய அணிக்கான அனுமதி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அணியை அக்குழுமத்தின் விளையாட்டுப் பிரிவான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நடத்தும் எனவும், அணி பெங்களூரு நகரை மையமாகக் கொண்டு இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பெங்களூரு நகரத்தில் கால்பந்துக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கான பயிற்சி மையத்தை அமைக்கவும் அக்குழுமம் ஒப்புக்கொண்டது[5].

இரு மாதங்கள் கழித்து, சூலை 20ஆம் தேதி பெங்களூரு கால்பந்து மைதானத்தில் நடந்த பெரு நிகழ்வில் அணியின் பெயரும் முத்திரையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவின் நிகழ்விடமான பெங்களூரு கால்பந்து அரங்கம் அவ்வணியின் முதல் தாய் அரங்கமாய் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது 

ஆஷ்லி வெஸ்ட்வுட் காலம் (2013–2016)[தொகு]

பெங்களூர் கால்பந்து கழகம் அனுமதி கிடைத்தவுடன் ஒப்பமிட்ட முதல் வீரர் மும்பை டைகர்சு அணிக்காக முந்தைய பருவத்தில் விளையாண்ட இந்திய வீரர் தோய் சிங் ஆவார்[6]. அதன் பின் அவர்கள் அணியின் தலைமைப் பயிற்றுனராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஷ்லி வெஸ்ட்வுட்டை ஒப்பமிட்டனர்[7]. இவர் முன்னாள் மேன்செஸ்டர் யுனைடெட் இளைஞர் அணி வீரர் மற்றும் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணி துணைப் பயிற்றுனர் ஆவார். பின் ஆங்கில கால்பந்துத் தொடரின் பிரபல வீரர்களான ஜான் ஜான்சன் மற்றும் கர்டிஸ் ஒசானோ ஆகியோரை ஒப்பமிட்டனர். இதன் மூலம் நாடு முழுவதும் கால்பந்து வட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை அணியின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தினர்[8]. சில நாட்களுக்கு பின் இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைவரும் முன்னாள் மேஜர் லீக் கால்பந்துத் தொடரின் வீரருமான சுனில் சேத்ரியை ஒப்பமிட்டனர்[9].  

பெங்களூரு அணியின் முதல் போட்டி இந்திய தேசிய கால்பந்து அணிக்கு எதிரான நட்புறவுப் போட்டியாகும். 2013ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து கோப்பைக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டமாக அமைந்த இந்த போட்டி 1-1 என்று சமனில் முடிந்தது. ஐ-லீக் தொடரில் பெங்களூரு அணியின் முதல் போட்டி 2013 செப்டம்பர் 22 அன்று மோகன் பகான் கால்பந்து கழகத்துக்கு எதிராக நடந்தது. பெங்களூரு அணியின் முதல் அதிகாரப்பூர்வ கோலை சீன் ரூனி அடிக்க ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது. அணியின் முதல் வெற்றி அடுத்த ஆட்டத்திலேயே கிடைத்தது. ரங்கடாஜியத் கூட்டிணைவு கால்பந்து கழகத்திற்கு எதிரான ஐ-லீக் போட்டியின் 3-0 என வெற்றிக் கணக்கை துவக்கியது[10]

2014 ஏப்ரல் அன்று டெம்போ கால்பந்து கழகத்துக்கு எதிரான போட்டியில் 4-2 என்று வெற்றி பெற்ற பெங்களூரு அணி தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது[11]

2014-15ஆம் ஆண்டில் பெடரேசன் கோப்பையை வென்று தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது. அவ்வாண்டின் ஐ-லீக் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து மோகன் பகான் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. எனினும் இரண்டாம் இடம் பெற்றதன் மூலம் பெருமைமிகு ஆசிய சாம்பியன் தொடருக்கும் பின் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பைக்கும் தகுதி பெற்றது. 

அடுத்து வந்த 2015-16ஆம் பருவத்தில் தனது இரண்டாவது ஐ-லீக் கோப்பையை வென்றது பெங்களூரு. மேலும் ஆசிய கால்பந்து கூட்டமைப்புக் கோப்பைக்கான போட்டியில் காலிறுதி வரை முன்னேறி புதிய சாதனை படைத்தது. அப்பருவத்தின் இறுதியில் அணியுடனான சுமூக உடன்பாட்டின் அடிப்படையில் ஆஷ்லி வெஸ்ட்வுட் வெளியேறினார்[12]

ஆல்பர்ட் ரோகா காலம் (2016 - இன்று வரை)[தொகு]

பெங்களூரு கால்பந்துக் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு பார்சிலோனா கால்பந்து கழகத்தில் துணைப்  பயிற்றுனராக பணியாற்றிய ஆல்பர்ட் ரோகாவை தலைமைப் பயிற்றுனராக நியமித்தது[13]. அவரது தலைமையின் கீழ் பெங்களூரு ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பைக்கான போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று, இறுதில் இராக் அணியிடம் தோல்வியுற்றது. இப்போட்டியில் இறுதி வரை சென்ற முதல் இந்திய அணி என்ற பெருமையும் பெற்றது. 

போட்டித் தொடர்கள்[தொகு]

ஐ-லீக்[தொகு]

பெங்களூரு கால்பந்து கழகம் தொடங்கிய முதல் நான்கு ஆண்டுகள் இந்தியாவின் அப்போதைய முதல் தர கால்பந்து போட்டியான ஐ-லீக்கில் விளையாடியது. தான் விளையாடிய நான்கு ஆண்டு காலத்தில் இரண்டு முறை வாகை சூடி பலம் வாய்ந்த அணியாக உருவானது.

இந்தியன் சூப்பர் லீக்[தொகு]

2017 ஆம் ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் போட்டி புதியதாக இரண்டு அணிகளை சேர்த்துக்கொள்ளப் போவதாக அறிவித்தது. புதிய அணிக்காக விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் பெங்களூரு அணியும் இருந்தது. இறுதியாக பெங்களூர் அணியும், டாடா குழுமத்தின் தலைமையில் ஜாம்செத்பூரை தலைமையகமாகக் கொண்டு ஒரு அணியும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று மும்பை சிட்டி கால்பந்து கழகத்துக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தன் இந்தியன் சூப்பர் லீக் பயணத்தைத் தொடங்கியது பெங்களூரு அணி. விளையாடிய முதல் ஆண்டிலேயே புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தையும் இறுதிப் போட்டிக்கு தகுதியும் பெற்றது. 2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்த வெற்றிப் பயணத்தை இந்தியன் சூப்பர் லீக் கோப்பையுடன் நிறைவு செய்தது.


முடிவுகள்[தொகு]

பதிப்பு வாரியாக[தொகு]

பதிப்பு தொடர் அணிகள் நிலை பெடரேசன் கோப்பை / சூப்பர் கோப்பை ஆசியக் கால்பந்துக் கழகப் போட்டிகள்
2013–14 ஐ-லீக் 13 1 குழுச் சுற்று
2014–15 ஐ-லீக் 11 2 வாகையாளர்' ஆசிய சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று 1
ஆசியக் கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்று
2015–16 ஐ-லீக் 9 1 காலிறுதி ஆசியக் கோப்பை இரண்டாம் இடம்
2016–17 ஐ-லீக் 10 4 வாகையாளர் ஆசிய சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று 2
ஆசியக் கோப்பை மண்டலங்களுக்கு இடையிலான இறுதிப் போட்டி
2017–18 இந்தியன் சூப்பர் லீக் 10 லீக் - முதல்
பிளேஆப் - இரண்டாம் இடம்
வெற்றியாளர் ஆசியக் கோப்பை மண்டலங்களுக்கு இடையிலான அரை இறுதி
2018–19 இந்தியன் சூப்பர் லீக் 10 லீக் - முதல்
பிளேஆப் – வாகையாளர்
காலிறுதி


சாதனைகள்[தொகு]

தேசிய அளவில்[தொகு]

லீக் தொடர்கள்[தொகு]

 • இந்தியன் சூப்பர் லீக்
வாகையாளர் (1): 2018–19
இரண்டாம் இடம் (1): 2017–18
 • ஐ-லீக்
வாகையாளர் (2): 2013–14,[14] 2015–16[15]
இரண்டாம் இடம் (1): 2014–15

கோப்பைத் தொடர்கள்[தொகு]

 • பெடரேசன் கோப்பை
வாகையாளர் (2) : 2014–15,[16] 2016–17[17]
 • சூப்பர் கோப்பை
வாகையாளர் (1) : 2018

ஆசிய அளவில்[தொகு]

 • ஆசியக் கோப்பை
இரண்டாம் இடம் (1): 2015–16


மேற்கோள்கள்[தொகு]

 1. https://web.archive.org/web/20131203033708/http://i-league.org/?p=7088
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 4. http://www.business-standard.com/article/news-ians/jsw-two-others-bid-for-new-i-league-clubs-113051500781_1.html
 5. http://articles.economictimes.indiatimes.com/2013-05-28/news/39580342_1_jsw-steel-jsw-group-football-academy
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 10. http://www.thehindu.com/sport/football/bengaluru-fc-eases-past-rangdajied-united/article5182975.ece
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-24. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 12. http://www.bengalurufc.com/bengaluru-fc-westwood-part-ways-by-mutual-consent/
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-10. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
 14. "Bengaluru FC crowned champions on I-League debut - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/football/i-league/Bengaluru-FC-crowned-champions-on-I-League-debut/articleshow/34058479.cms. 
 15. "Bengaluru FC are the champions of I-League 2015-16, claim their second title in three years - Goal.com" (in en-IN). Goal.com. 2016-04-15 இம் மூலத்தில் இருந்து 2017-08-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170830072608/http://www.goal.com/en-india/news/1064/i-league/2016/04/17/22432752/bengaluru-fc-are-the-champions-of-i-league-2015-16-claim. 
 16. "Dempo SC 1-2 Bengaluru FC: The Blues win their first Federation Cup - Goal.com" (in en-IN). Goal.com. 2015-01-11 இம் மூலத்தில் இருந்து 2017-08-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170830072622/http://www.goal.com/en-india/news/1773/federation-cup/2015/01/11/7856532/dempo-sc-1-2-bengaluru-fc-the-blues-win-their-first. 
 17. "As it happened: Bengaluru FC win Federation Cup". ESPN. http://www.espn.in/football/story/_/id/19429641/bengaluru-fc-win-federation-cup.